கூட்டாளிகளுடன் சுற்றி வளைக்கப்பட்ட குமுளி ராஜ்குமார் – அதிரடி கைது! பின்னணி என்ன?
தேவேந்திரகுல மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் குமுளி ராஜ்குமாரை, திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமாரின் தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்த அக்-16 ஆம் தேதியில் இருந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கிறார்கள்; பொய் வழக்கில் கைது செய்யப் போகிறார்கள்; அவரது உயிருக்கு ஆபத்து என்பதாக அவரது ஆதரவாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் குமுளி ராஜ்குமாரும் அவரது கூட்டாளிகளும் கூண்டோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
குமுளி ராஜ்குமார் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து திருச்சி மாவட்ட போலீசார் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெட்டவாய்த்தலை காவல் நிலைய சரகத்தில், கடந்த 15.10.2024-ம் தேதி இரவு 22.30 மணியளவில் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 3 காவலர்கள் இரவு ரோந்து அலுவலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வெள்ளை நிற காரில் துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கரூர் – திருச்சி சாலையில் வருவதாக பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தபோது, அவ்வழியாக வந்த TN 28 BC 8283 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற Maruti Suzuki Breeza காரை நிறுத்த முற்பட்ட போது, காரை நிறுத்தாமல் வேகமாக சென்று அருகில் இருந்த போலீஸ் பேரிகார்டில் மோதி நின்றது.
உடனே, உதவி ஆய்வாளரும், காவலர்களும் காரின் அருகே சென்ற போது, காரில் இருந்து வீச்சருவாளுடன் இறங்கிய நபர், போலீஸாரை பார்த்து தான் பெரிய ரவுடி என்றும், நான் தான் குமுளி ராஜ்குமார், என் காரையே நிறுத்துவிங்களா என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளார்.
மேற்படி, காரில் 5 நபர்கள் இருந்ததால் ஜீயபுரம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி, இரவு ரோந்து அதிகாரியான இராம்ஜிநகர் காவல் ஆய்வாளரும், பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளரும் இணைந்து மேற்படி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்து கண்காணித்து சென்று, 16.10.2024-ம் தேதி 15.30 மணிக்கு பரமக்குடி, ஆதியேந்தல், கண்மாய்கரை அருகே காரில் இருந்த மேற்படி நபர்களான தச்சநல்லூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான குமுளி ராஜ்குமார் 45/24 த.பெ பெருமாள், அம்மன் கோவில் தெரு, மேலக்கரை, தச்சநல்லூர், திருநெல்வேலி மாவட்டம் (தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் தலைவர்) எனவும், முன் இருக்கையில் இருந்த நபர் இனுங்கூர் பாலு (எ) பாலசுப்ரமணியன் த.பெ முத்து, இனுங்கூர், குளித்தலை தாலுகா, கரூர் மாவட்டம் எனவும் தெரியவந்தது.
பின்னர், மேற்படி நபர்களை கைதுக்கான காரணம் கூறி, கைது செய்து மேற்படி காருடன் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காரை சோதனை செய்து பார்த்த போது, அதில் நாட்டு துப்பாக்கிகள் -2, வீச்சரிவாள்-2, சணல் வெடிகள்- 25 ஆகியவை காரில் இருந்து கைப்பற்றப்பட்டு, பெட்டவாய்த்தலை காவல் நிலைய குற்ற எண். 104/24, U/s 296(b), 132, 351(3) BNS r/w 3 of TNPPDL Act & 25(1)(a) of Arms Act & 4, 5 of Explosives Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குமுளி ராஜ்குமார் மற்றும் இனுங்கூர் பாலு (எ) பாலசுப்பிரமணியன் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும், மேற்படி நபர்களுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்ற மேலும் 3 நபர்களை தீவிரமாக தனிப்படையினர் தேடிவருகின்றனர். மேற்படி வழக்கின் A1 குற்றவாளியாக குமுளி ராஜ்குமார் என்பவர் மீது மாநிலம் முழுவதும் 5 கொலை வழக்குகளும், 2 கொலை முயற்சி வழக்குகளும், 2 வழிப்பறி வழக்குகளும் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்து குமுளி ராஜ்குமார், காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் தேவேந்திர குல மக்கள் இயக்கம் என்னும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். மேற்படி குமுளி ராஜ்குமார், கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை காவல் துறை கைது நடவடிக்கையிலிருந்து தொடர்ச்சியாக தப்பித்து வந்துள்ளார்.
மேற்படி, குமுளி ராஜ்குமாரின் கைதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரது ஆதரவாளர்களான 1) அலெக்ஸ் த.பெ இளங்கோவன், மாகாளிகுடி, சமயபுரம், 2) அருண் த.பெ. வேல்முருகன், மாகாளிகுடி, சமயபுரம், 3) ராமு த.பெ ரமேஷ், மாகாளிகுடி, சமயபுரம், 4) லக்ஷ்மணன் த.பெ ரமேஷ், மாகாளிகுடி, சமயபுரம், 5) வெங்கடாசலபதி த.பெ நீலமேகம், வி.துறையூர், சமயபுரம், 6) கணேசன் (எ) கடலை கணேசன் த.பெ நீலமேகம், வி.துறையூர், சமயபுரம், 7) விநாயகமூர்த்தி த.பெ நீலமேகம், வி.துறையூர், சமயபுரம், 8) வள்ளி அருணன் த.பெ நீலமேகம், வி.துறையூர், சமயபுரம், 9) கார்த்திக் த.பெ துரைசாமி, மருதூர், சமயபுரம், ஆகியோர் மீது சமயபுரம் காவல் நிலையத்திலும், 10) சக்திவேல் த.பெ கண்ணன், அண்ணாநகர் காலனி, தொட்டியம், என்பவர் மீது பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திலும், 11) பொன்னடி த.பெ பாலசுப்பிரமணியன், எழுநூற்றுமங்கலம், குளித்தலை 12) சங்கீத்குமார் ஆகியோர் மீது முசிறி காவல் நிலையத்திலும், 13) கோபி த.பெ கணேசன், கீழத்தெரு, கோப்பு என்பவர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.” என்பதாக போலீசாரின் செய்தி குறிப்பில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆதாயக் கொலைகளை சுட்டிக் காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. சென்னை மாநகர காவல் ஆணையராக ஏடிஜிபி அருண்குமார் நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதிலுமுள்ள ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்கள்.
அடுத்தடுத்த அதிரடி கைது சம்பவங்களும் என்கவுண்டர் சம்பவங்களும் அரங்கேறின. இந்த அதிரடி நடவடிக்கையின் தொடர்ச்சியாகவும்; எதிர் வரும் அக்டோபர் 30 அன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவை மையமாக வைத்து தமிழக அரசுக்கு அரசியல் ரீதியில் கெட்டப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சதியை முறியடித்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
— அங்குசம் புலனாய்வு குழு.