அங்குசம் பார்வையில் ‘தீபாவளி போனஸ் ‘ சினிமா விமர்சனம்.
தயாரிப்பு: ‘ ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்சன்’ தீபக் குமார் டாலா. டைரக்டர்: ஜெயபால் ஜெ. நடிகர் -நடிகைகள்: விக்ராந்த், ரித்விகா. இவர்கள் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். ஒளிப்பதிவு: கெளதம் சேதுராமன், இசை: மரிய ஜெரால்டு. எடிட்டிங்: பார்த்திவ் முருகன், காஸ்ட்யூம்: ஜெயபால். நடனம்: நிஸார்கான். தமிழ்நாடு ரிலீஸ்: ஆக்சன் – ரியாக்சன் ஜெனிஷ். பிஆர்ஓ: தர்மா & சுரேஷ் சுகு.
மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள நிலையூர் தான் கதைக்களம். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் விக்ராந்த் – ரித்விகா தம்பதிகளுக்கு ஒரு மகன். கூரியர் சர்வீஸில் வேலை பார்க்கிறார் விக்ராந்த். வீட்டு வேலை பார்க்கிறார் ரித்விகா.
தனக்கு தீபாவளி போனஸ் கிடைத்ததும் போலீஸ் டிரெஸ் வாங்கி தருவதாக மகனிடம் சொல்கிறார் விக்ராந்த். கணவனுக்கு புது ஹெல்மெட் வாங்க வேலை செய்யும் வீட்டு ஓனரம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்குகிறார் ரித்விகா.
கூரியர் கம்பெனியில் தீபாவளி போனஸ் போடாமல் இழுத்தடிக்கிறார்கள். இதனால் கொந்தளிக்கும் தொழிலாளிகள் போராட்டத்தில் குதிக்கிறார்கள். போலீஸ் அரெஸ்ட் பண்ணுகிறது.
விக்ராந்த்துக்கு தீபாவளி போனஸ் கிடைத்ததா? அந்த ஏழைக் குடும்பம் பண்டிகையைக் கொண்டாடியதா? என்பதை கண்ணீருடன் சொல்லும் கதை தான் இந்தப் படம்.
ஏழைத் தம்பதிகளாக விக்ராந்தும் ரித்விகாவும் பொருத்தமான ஜோடிகளாக ஏழைகளின் பண்டிகைக் கொண்டாட்ட வலியை திரையில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
வார் அறுந்து போன ரப்பர் செருப்பைக் கூட மாற்ற முடியாத பரிதாப நிலையிலும் போனஸ் கிடைக்காமல் தீபாவளி பஜாரில் சட்டைகளை கூவி விற்கும் நிலையிலும் மாற்றுத் திறனாளிக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சியில் மனதில் பதிகிறார் விக்ராந்த்.
ஏழைகளிடமும் எளியவர்களிடமும் தான் இயல்பிலேயே இரக்கம் சுரக்கும் என்பதை பதிவு செய்த டைரக்டர் ஜெயபாலுக்கு சபாஷ். திருப்பரங்குன்றம் ஏரியாவை இரவிலும் பகலிலும் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன்.
குறும்பட அளவுக்குத்தான் கதையின் கனம் உள்ளது என்பதால் சுவாரஸ்யமான திருப்பங்கள் வேண்டாம் என டைரக்டர் முடிவு செய்துவிட்டார் போல. அது தான் படத்தின் பலவீனம். தியேட்டர் உரிமையாள புண்ணியவான்கள் மனசைப் பொறுத்து தான் தீபாவளி போனஸின் தலைவிதி இருக்கு.
–மதுரை மாறன்.