காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை – வெளிமாநில நபர்கள் மடக்கிப் பிடித்த துறையூர் பொதுமக்கள் !
துறையூரில் வெளிமாநில காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக்கடத்தி வந்த வெளிமாநில நபர்கள் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலையத்திலிருந்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு சுமார் ஏழு முப்பது மணிக்கு போன் வந்தது அதில் மர்ம கார் ஒன்று சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதாகவும் அதனை மடக்கி பிடித்து விசாரிக்கவும் என தம்மம்பட்டி போலீசார் உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தர உடனடியாக உப்பிலியபுரம் காவல் நிலையம் வழியாக வந்த காரை மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்களையும் மீறி படு வேகத்தில் போலீசார் மீது மோதுவதைப் போல் சென்றது.
அதனை தொடர்ந்து அந்த காரை சினிமா படப்பானியில் விரட்டி வந்த உப்பிலியபுரம் போலீசார் துறையூர் வழியாக கார் செல்வதை அறிந்து அருகில் இருந்த ஊர்களுக்கு தகவல் தர ஒக்கரை, வெங்கடாசலபுரம், சிக்கதம்பூர், பாளையம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பொதுமக்கள் திரண்டு நின்று அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்கள் மீதும் மோதுவதைப் போல் கண்மூடித்தனமான வேகத்தில் கார் துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இது பற்றி துறையூர் போலீசாருக்கும் துறையூரில் உள்ள இளைஞர்கள் சிலருக்கும் தகவல் தர துறையூர் பாலக்கரையிலேயே பொதுமக்கள் அந்த மர்ம காரை மடக்கிப் பிடித்தனர் அதிலிருந்து இரண்டு வெளிமாநில நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது பற்றி துறையூர் காவல் துறையினருக்கு தகவல் தர போலீசார் விரைந்து சென்று அக்காரை சோதனை இட்டபோது காருக்குள் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
காரில் இருந்த இரண்டு வெளி மாநில நபர்களை துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து காருக்குள் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் உள்ள மூட்டைகளை காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்றனர்.
ஆந்திர பதிவு எண் கொண்ட காரையும் பறிமுதல் செய்து காருக்குள் இருந்த இரண்டு வெளி மாநில நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உப்பிலியபுரத்திலிருந்து வந்த மர்ம காரில் குழந்தை இருப்பதாகவும் குழந்தையை கடத்திச் செல்வதாகவும் தகவல்கள் வர பதற்றம் அடைந்த பொதுமக்கள் உப்பிலியபுரத்திலிருந்து துறையூர் வரும் வழியில் உள்ள ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த ஊரில் காரை மடக்கி பிடிக்க துணிந்தனர் உப்பிலியபுரம் போலீசார் உயிரை பணையம் வைத்து காரை பின் தொடர்ந்து வந்தனர்.இந்தச் சம்பவம் உப்பிலியபுரம் மற்றும் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் உதவியுடன் காரை மடக்கிப்பிடித்த போலீசாரையும் துறையூர் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர் மேலும் இது குறித்து துறையூர் போலீசார் இரண்டு வெளி மாநில நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துறையூர் கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் பாலக்கரை பகுதியிலேயே காரை மடக்கிப் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-ஜோஸ்