பல்கலை கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் ! பின்னணி என்ன ?
காரைக்குடி அழகப்பா பல்கலையை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் 39 வது பட்டமளிப்பு விழாவையு உயர்கல்வித் துறை அமைச்சரும், சார்பு வேந்தருமான கோவி செழியன் புறக்கணித்திருப்பது தமிழகத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. காரைக்குடி அழகப்பா பல்கலையின் 35-ஆவது பட்டமளிப்பு விழாவில், சுமார் 20-க்கும் அதிகமான மாணவர்கள் ஆளுநரின் கையால் பட்டத்தை பெறுவதற்கு விரும்பவில்லை என்பதாக புறக்கணித்திருப்பதும் அரசியல் சூட்டை கிளப்பியிருக்கிறது.
”தமிழகத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” என்ற வெளிப்படையான குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது ”பல்கலை கழகங்களின் வேந்தர்” என்ற அதிகாரத்தை பயன்படுத்தி கல்விச்சூழலையும் பாழ்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார், பாரதிதாசன் பல்கலையின் ஓய்வுபெற்ற மூத்த அலுவலரும் திமுகவின்மாநில இலக்கிய அணி துணை செயலாளர், மற்றும் சிறப்பு பொதுக்குழு உறுப்பினருமான ஸ்ரீதர்.
“அழகப்பா பல்கலை கழகத்தைகூட விட்டுவிடுங்கள். பாரதிதாசன் பல்கலை என்பது முழுக்க முழுக்க தமிழக அரசின் கல்வி நிறுவனம். இதே பாரதிதாசன் பல்கலையில் நூற்றுக்கணக்கான பேராசிரியர் பணியிடங்கள் காலியாகி கிடக்கின்றன. பேராசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல், பணிகள் தேங்கிக்கிடக்கின்றன.
ஓய்வுபெற்ற ஊழியர்களும் பென்சன் உள்ளிட்டு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். பல்கலையின் வேந்தர் என்ற முறையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதனையெல்லாம் தீர்த்து வைக்கலாம் இல்லையா? ஒன்றிய அரசிடமும் யூஜிசியிடமும் பேசி உரிய அனுமதியையும் நிதி ஒதுக்கீட்டையும் பெற்றுத்தரலாம் இல்லையா? வேந்தர் என்ற முறையில் எதற்கெல்லாம் தலையீடு செய்ய வேண்டுமோ, அதில் எல்லாம் இவர் தலையிடுவதே இல்லை. மாறாக, தங்களது உரிமைக்காக பல்கலை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய ஓய்வுபெற்ற பணியாளர்கள் மீது இன்னும் ஏன் எஃப்.ஐ.ஆர். போடவில்லை என்று திருச்சி மாவட்ட கலெக்டரை கூப்பிட்டு கேள்வி கேட்கிறார்.
ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த உத்தரவு என்பதால், என்ன ஏதென்று விசாரிக்காமல் கலெக்டரும் போலீசுக்கு அழுத்தம் கொடுக்கிறார். ஏற்கெனவே, உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருந்த காலத்தில் அவரும் எவ்வளவோ விட்டுக்கொடுத்து சென்றார். இப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் கோவி.செழியன் கல்வித்துறையில் புலமை பெற்றவர். மூத்த அரசியல்வாதி. அவரிடமும் ஆளுநர் அடாவடி அரசியலை காட்டியதால்தான் தற்போது இந்நிகழ்வை புறக்கணிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.” என்கிறார், ஸ்ரீதர்.
– ஆதிரன்.