வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் கலை இலக்கியப் பயிலரங்கம்
தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப் பள்ளியில் வீரமாமுனிவரின் 345 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் கலை இலக்கியப் பயிலரங்கம் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருட்திரு.அ.சேவியர் ராஜ் சே.ச தலைமை வகித்து பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். பேச்சு, கதை, கவிதை, கட்டுரை ஆகிய திறன்களில் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் கலை, இலக்கிய ஆர்வமிக்க 200 மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவர் மன்றம், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் சார்பில் முதன்மைக் கருத்தாளர் தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் ஜா.சலேத் அவர்களுக்கு ‘இலக்கியச் சுடர்’ விருதும், வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன் அவர்களுக்கு ‘கவிச்சுடர்’ விருதும், பன்முகக் கலைஞர் ஆசிரியர் மு.ஜோதி சுந்தரேசன் அவர்களுக்கு ‘கலைச்சுடர்’ விருதும் வழங்கப்பட்டன.
பள்ளியின் அதிபர் அருட்திரு.செ.பாபு வின்சென்ட் ராஜா சே.ச வாழ்த்திப் பேசினார். வாசிப்பு இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள் நூலகத்திற்குப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். நாலடியார் சிறுகதைகள் நூலில் கதையெழுதிய மாணவப் படைப்பாளர்கள் பரந்தாமன், ரிஷ்வந்த் பாராட்டப் பெற்றனர்.
முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர், உதவித் தலைமையாசிரியர் அருட்திரு.ஆ.விக்டர் டிசோசா சே.ச பயிலரங்க மதிப்புரையாற்றினார். முன்னதாக முன்னாள் மாணவர் மன்றச் செயலாளர் நல்லாசிரியர் ம.சண்முகநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் சூ.ரிச்சர்டு நன்றி கூறினார். முன்னாள் மாணவர் மன்ற துணைத்தலைவர், நல்லாசிரியர் கவிஞர் எல்.பிரைட் உள்ளிட்ட முன்னாள் மாணவர் மன்றத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிலரங்க ஏற்பாடுகளை வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் செய்திருந்தார். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
– ஆதன்.