முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அமமுகவினர் தாக்கியதாக போலீசில் புகார் ! அரசியலா? கோஷ்டி பூசலா?
மதுரையில் அதிமுகவின் உள்கட்சியின் உச்சகட்டப்போர் ஆரம்பித்துவிட்டது. ஏற்கெனவே தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி மீது கட்சியினரும் குறிப்பிட்ட சமுதாய மக்களும் கடும் கோபத்தில் இருந்து வருவதாக புலம்புகிறார்கள், மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக, சிலர் கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நவம்பர் – 11 அன்று சேடப்பட்டி பகுதியில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அப்போது, அவர் டிடிவி தினகரனையும் , ஓபிஎஸ்யும் வசை பாடியதாக சொல்கிறார்கள். அவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். ”அதிமுகவினர் எல்லோரும் ஒன்று சேர நினைத்தால் கூட இவர் விட மாட்டார் போலிருக்கே” என்பதாக தொண்டர்கள் மத்தியில் புலம்பியதாகவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், அக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது மங்கல்ரேவ் அத்திப்பட்டி விளக்கு பகுதியில் அவர் சென்ற காரை வழிமறித்து காரையும் அவருடன் வந்தவர்களையும் தாக்கியதாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில் மதுரை எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
” முன்னாள் அமைச்சர் உதயகுமாரையும் அவர் வந்த காரையும் அவருடன் வந்தவர்களையும் அடித்தது அதிமுக காரர்கள்தான். வீணாக அமமுகவினர் மீது பழி போடுகிறார்கள். சசிகலா தலைமையில், தினகரன் வேலுமணி, செங்கோட்டையன் மற்றும் அதிமுகவின் முன்னணி மூத்த நிர்வாகிகள் சிலர் ஒன்று சேரப்போகிறார்கள். இந்த இணைப்பு விழா வரும் தை மாதம் நடைபெற போகிறது.
இதனால், நமது நிலைமை மோசமாகிவிடும் என்று கணக்குப் போட்டுதான் சொந்தக் கட்சிக்காரன் தாக்கியதையே, அமமுகவினர் தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். இதை வைத்து, நான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன் என்று சொல்லி போலீஸ் பாதுகாப்பு கேட்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள்” என்று புதுக்கதை ஒன்றை அவிழ்த்துவிடுகிறார்கள், அமமுகவினர் தரப்பில்.
இதற்கிடையில், இந்த களேபர பஞ்சாயத்து தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினரின் தூண்டுதலில்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது என்பதாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்துக்கு எதிராக, ”அவதூறு பரப்பிய அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி” திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான கே. இளமகிழன் மதுரை எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறது.
அதிமுகவின் உட்கட்சிப்போர் மதுரையில் பெரும் அக்கப்போராக மாறிவிட்டதாக புலம்புகிறார்கள் கட்சித் தொண்டர்கள்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.