தமிழகத்தில் அணி திரளும் புதிய பெண்கள் படை ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சீமானுக்கு எதிராக உருவாகும் புதிய பெண்கள் கட்சி !

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதற்கு முன்னதாக, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் அடுத்தடுத்து நாம்தமிழர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்கள். குறிப்பாக, விஜய் தனிக்கட்சி தொடங்கி மாநாடு நடத்தியிருக்கும் பின்னணியில், விஜய்க்கும் – சீமானுக்கும் இடையில் காரசாரமான விவாதங்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில், நாம்தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறும் போக்கு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில், விலகலுக்கான பின்னணி குறித்த கேள்வியோடு மருத்துவர் இளவஞ்சியை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

கட்சியில் ”பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை” என்ற ஒற்றை காரணத்தினால்தான் அக்கட்சியைவிட்டு தற்போது, வெளியேறியிருக்கிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி என்றொரு அரசியல் அமைப்பு உருவான காலத்தில் இருந்தே அண்ணன் சீமானுடன் பயணித்து வருகிறேன். 2012 இல் மருத்துவ பாசறையை உருவாக்கினார்கள். அப்போதிலிருந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலும் இருந்து வந்திருக்கிறேன்.

இதற்கு முன்னர் 2013 ஜூலையில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகியிருக்கிறேன். இளவரசன் – திவ்யா விவகாரத்தில், இளவரசனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து கட்சி சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அப்போது, கட்சியின் செய்தி தொடர்பாளராக அய்யநாதன் பொறுப்பில் இருந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நாங்கள் எதிர்பார்த்தவாறு கட்சி சார்பில் அறிக்கை வெளியாகவில்லை. காரணம் கேட்டதற்கு, நான் குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்பதாக என்மீதே குற்றம் சுமத்தினார்கள்.

மேலும், அந்த சமயத்தில் பொதுவில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த போதிலும், அதில் ஒரு பிரிவான அருந்ததியர்களை அவமதிக்கும் போக்கு கட்சியில் இருந்து வந்தது. அவர்களை தெலுங்கர்கள் என்று சொல்லி புறக்கணித்தார்கள். இதுபோன்ற காரணங்களால், அப்போதைய சூழலில் நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று விலகினேன். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகாலம் விலகியிருந்தேன்.

பின்னர், 2015 ஜனவரியில் வழக்கறிஞர் இராஜீவ்காந்தி முன்முயற்சியில் தம்பி முத்துக்குமரன் முதலாமாண்டு நினைவுநாள் நிகழ்வுக்கு அழைத்து சென்று மீண்டும் கட்சியில் இணைந்து செயலாற்ற வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்தார். அந்த சமயத்தில், நான் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த செய்தி தொடர்பாளராக இருந்த அய்யநாதன் கட்சியில் இல்லை. நான் மன்னிப்பு எல்லாம் கேட்கவும் இல்லை. மேலும், நாம் தமிழர் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளும் செழுமையடைந்திருந்தது. பல்வேறு விசயங்களில் சரியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள். அந்த சூழல் காரணமாகவும் தொடர்ந்து பயணிக்க முடிவு செய்தேன்.

அதன்பிறகும் பத்தாண்டு காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் போனது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய சமயத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. கட்சி சார்பில் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு கட்சி நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டார்கள். அதனை நான் எனது வாக்கு சேகரிப்புக்காக, தனிப்பட்ட பிரபலத்திற்காக செய்வதாக கருதினார்களோ என்னவோ. ஒருங்கிணைப்பாளர் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். ”நீ போய் முகாம் போடு. எவன் தடுக்கிறானு பார்ப்போம்” என்பார். நானும் அவ்வாறு சில முகாம்களையும் நடத்தினேன்.

ஆனாலும், மருத்துவ பாசறையில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எனக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தது. பாசறையின் தலைவர் திருமறை செல்வன். ஆறுமாதம் இந்தியாவில் இருப்பார். ஆறுமாதம் வெளிநாட்டில் இருப்பார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து வந்தவரான மருத்துவர் சிவக்குமார்தான் செயலர் பொறுப்பில் இருக்கிறார். இதனை தலைமையிடத்தில் சொல்லியும் எந்த மாற்றமுமில்லை.” என்பதாக நீண்ட பின்னணி குறித்து விவரிக்கிறார், மருத்துவர் இளவஞ்சி.

மருத்துவர் இளவஞ்சி.
மருத்துவர் இளவஞ்சி.

சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி வேட்பாளர்கள் பெண்களாக நிறுத்தப்பட்ட நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?

ஏற்கெனவே, கட்சியின் பொதுக்குழுவில், ” பொதுச்செயலர் பொறுப்பில் பெண் நிர்வாகியை நியமிக்க வேண்டுமென்று” குரல் எழுப்பினேன். அப்போதே, அது கயல்விழிக்காகத்தான் அந்த கோரிக்கையை வைத்தேன் என்பதாக ஊடகங்கள் எழுதின. வேட்பாளர்கள் சரிபாதி பெண்கள்தான், மறுக்கவில்லை. ஆனால், கட்சியின் தலைமை பொறுப்பில் பெண்கள் இடம்பெறவில்லையே. ஒரே ஒரு பெண் மாவட்ட செயலர் இருந்தார். அவரையும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி நீக்கிவிட்டார்கள். மாவட்ட அளவிலான, மாநில அளவிலான பொறுப்புகள் எதுவொன்றிலும் பெண்கள் இல்லையே.

அதையெல்லாம்விட, பொது மேடைகளில் பெண்களுக்கு எதிராக சீமான் பேசியதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில், கட்சியில் பணியாற்றும் சில பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக அவர் பேசியிருக்கிறார். அதுபோன்ற ஆடியோ பதிவை கேட்ட பொழுதே, கட்சி நிர்வாகிகளிடத்தில் முறையிட்டிருக்கிறேன். கடைசியாக, ஒரு ஆடியோ பதிவை கேட்ட மாத்திரத்தில், ஒருங்கிணைப்பாளரின் வாட்சப் எண்ணை பிளாக் செய்துவிட்டேன். அதன்பிறகு, அவருடன் பேசுவதையே தவிர்த்துவிட்டேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உங்களது விலகல் முடிவு கட்சி நிர்வாகிகளிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

என்னுடன் பயணித்தவர்கள் என்னைதான் சமாதானப்படுத்த முயற்சித்தார்கள். கட்சிக்கு சம்பாதிக்க வரலை. விடுதலைக்காக போராடத்தானே வந்தீர்கள். சமாதானமாக பேசி தீர்க்கலாம் என்றார்கள். இன்னொரு தரப்பில், கட்சியை உடைக்க வேண்டும் என்று சிலர் உள்ளுக்குள் இருந்தே செயல்படுகிறார்கள். அதற்கு பலியாகிவிடாதீர்கள் என்றார்கள்.

நாம் தமிழர் கட்சியோடு முரண்படுவதற்கான வேறு அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் ஏதும் இருக்கிறதா?

கட்சித் தலைமையோடு சில வருத்தங்கள், மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதனால் விலகியிருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி, காழ்ப்புணர்ச்சியோ, பொறாமையோ இல்லை. ”ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே” என்ற புறனானூற்று பாடல் வரிகளைபோல, ஒருத்தர் தோற்றாலும் தமிழ்க்குடிதான் தோற்றதாகிவிடும். ஆகவே, ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றுதான் சொல்லி வந்திருக்கிறேன்.
என்னைவிட களத்தில் களமாடிய போராளி சீமான். பல இடங்களில், சீமானை நான் தாய் சீமான் என்றுதான் சொல்லியிருக்கிறேன். கட்சியைவிட்டு போனாலும், கட்சியைவிட்டு போனாலும், சீமான்தான் அண்ணன், தாய். வருத்தங்களும் காயங்களும் இருக்கிறதே, தவிர் அவர் மீது நான் கல்லெறிய விரும்பவில்லை.

மருத்துவர் இளவஞ்சி.
மருத்துவர் இளவஞ்சி.

விஜய் கட்சியில் ஐக்கியமாக போவதாக சொல்கிறார்களே?

நிச்சயமாக இல்லை. நாங்கள் நூறு சதவிகிதம் ஆண்கள் தலைமை ஏற்கப் போவதில்லை என்கிறோம். அப்புறம் எப்படி, விஜய் கட்சிக்கு போவேன். அடிப்படையில், தி.க.- திமுகவின் பாரம்பரியத்தை பின்னணியாக கொண்டு வளர்ந்து வந்தவள் நான். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பிரிட்டிஷ் காரன் காலத்திலேயே துணிச்சலோடு எதிர்த்து நின்று சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர் எனது பூட்டன். எனது தாத்தாக்கள் இன்றும் தி.க., தி.மு.க. பாரம்பரியத்தை பின்பற்றி வருபவர்கள். எனது தந்தை, பல்வேறு தளங்களில் முன்னணி அரசியல் தலைவர்களோடு பயணித்தவர். விடுதலை சிறுத்தைகள் அரசியல் கட்சியாக பரிணமிப்பதற்கு முன்பாகவே, மலைச்சாமி தொடங்கிய தலித் பாந்தர்ஸ் அமைப்பிற்கு முதுகெலும்பாக இருந்தவர் எனது தந்தை அருணா ராஜகோபால். பாமகவின் அரசியல் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். இந்த பின்னணியில் வளர்ந்தவள், நிச்சயம் வேறு கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பில்லை.

தனிக்கட்சி – அமைப்பு ஏதும் உருவாக்கும் திட்டம் இருக்கிறதா?

நிச்சயமாக. பெண்களை மட்டுமே தலைமையாக கொண்ட ஒரு அமைப்பை கட்டமைக்கவிருக்கிறோம். தாய் மொழியாக தமிழை கொண்ட பெண்கள்தான் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். பெண்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் அமைப்பாக கண்டிப்பாக இருக்காது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் இயக்கமாக இருக்கும்.

இந்நேரம், நாம் தமிழர் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறியிருக்க வேண்டும். அதற்கு தடைக்கல்லாக ஆண்களின் தலைமைதான் இருப்பதாக கருதுகிறோம். பெண்கள் தலைமையில் இதனை சாத்தியப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். தற்போது இருக்கும் பெண்களும் அடுத்த தலைமுறை பெண்களும் வீரியமானவர்கள். ஆற்றல் நிறைந்தவர்கள். அறிவானவர்கள். அதனால் வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
ஆணாதிக்க கட்டமைப்பு சமூகத்தினால்தான் பாதிக்கப்பட்டோம். ஆகவே, ஆணாதிக்கத் தலைமையை நாங்கள் ஏற்கப்போவதில்லை. நான் படித்த பெண்ணாக இருந்தாலும், உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்த ஒரு பெண் போராளியின் தலைமை ஏற்கவிருக்கிறேன்.

உழைக்கும் வர்க்க பெண் தலைமை என்று அழுத்தம் கொடுத்து சொல்கிறீர்களே, தலைவரை முன்னரே தீர்மானித்துவிட்டீர்களா? ஆமாம். தீர்மானித்துவிட்டேன். என்னை விட ஆகச்சிறந்த போராளி. களத்தில் நின்ற போராளி. களப்போராட்டத்தில் பல வழக்குகளை எதிர்கொண்ட போராளி.

காளியம்மாளைத்தானே சொல்கிறீர்கள்?

காத்திருந்து பாருங்கள். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

நேர்காணல்: வே.தினகரன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.