‘டிரம்ப்’ மனசுல ‘ராமசாமி’ ! – அமெரிக்காவை கலக்கி வரும் இந்திய வம்சாவளி
நடிகர் வி.கே. ராமசாமியை கேள்விப்பட்டிருக்கிறோம். சினிமாத் துறையில் நகைச்சுவை, குணச்சித்திர வேஷத்தில் தன் நடிப்புத் திறமையால் அன்றைய கால கட்டத்தில் மக்களை கவர்ந்தவர். சரி அதை விடுங்க… இது தமிழ்நாட்டோட முடிஞ்சு போனது.
இப்போது அமெரிக்காவை கலக்கி வரும் இந்திய வம்சாவளி யார் தெரியுமா? நம்ம விவேக் ராமசாமி தான். அவரைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த கணபதி ராமசாமி – கீதா தம்பதியருக்கு 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் சின்சினாட்டி நகரத்தில் பிறந்தவர் தான் விவேக் ராமசாமி. இவரது தந்தை கணபதி ராமசாமி கேரள மாநிலம் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவரது தாய் கீதா மைசூர் மருத்துவக் கல்லூரியில் மூத்த குடிமக்களுக்கான உளவியல் பட்டம் பெற்றவர். இவர்களது சொந்த ஊர் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரி என்றாலும் பாலக்காடு மாவட்டத்திற்கு வந்து குடியேறியவர்கள்.
விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஒகையோவில் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படித்து வளர்ந்தார். 2003ல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் கோல்ட்மேன் சாங்ஸ் போன்ற நிதி நிறுவனங்களில் பணிபுரிந்தார். 2011ல் முதுநிலை படிப்பை முடித்தார். 2013ல் யேல் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். 2014ல் விவேக் ராமசாமி ரோயவன் அறிவியல் எனும் மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தை நிறுவினார். அதில் பெருந்தொகையை ஈட்டினார். 2017ல் தான் நிறுவிய நிறுவனத்தை 175 மில்லியன் டாலர் மூலதன ஆதாயத்துடன் விற்றார்.
விவேக் ராமசாமியின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவரின் மனைவி அபூர்வா திவாரி, குரல்வளை மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். இவர்கள் யேலில் சந்தித்தனர். அவர் சட்டம் படிக்கும்போது அபூர்வ மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். இவர்கள் 2015ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
விவேக் ராமசாமி தமிழ் மொழியை சரளமாக பேசக் கூடியவர். தாய், தந்தை கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர் மலையாள மொழியை புரிந்து கொள்வாரே தவிர பேச மாட்டார். மேலும் இவர் சைவ உணவு உண்பவர். சமையல் இன்பத்திற்காக உணர்வுள்ள விலங்குகளை கொள்வது தவறு என்று தான் நம்புவதாக தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் மரபுகளை புரிய முயன்றவர்.
2023ல் விவேக் ராமசாமி பங்குதாரர்கள் சேவை நிறுவனத்தை துவக்கினர். இதனால் விவேக ராமசாமியின் வருமானம் 750 மில்லியன் டாலராக உயர்ந்தது. மேலும் படைப்பாற்றல் மிக்கவராக இருந்ததால் சில நூல்கள் எழுதிய எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
டெல்டா ஏர்லைன்ஸ் ஜார்ஜியாவின் புதிய சட்டங்கள் அவை வாக்காளர்களின் எண்ணிக்கையை ஒடுக்கும் என்ற அடிப்படையில் விமர்சித்த போது, ஒரு வாக்களிக்கும் சட்டம் ஒரு விமான நிறுவனத்தின் மதிப்புகளுடன் பொருந்துமா என்பதை அமெரிக்கர்கள் ஏன் கவனிக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு நிறுவனம் தவறிவிட்டது என்று விவேக் ராமசாமி கூறினார்.
அரசியல் நிகழ்ச்சிகளை தள்ள நிறுவனங்களைக் கேட்காமல் முதலீடு நிதிகளை வழங்கும் என்று விவேக் ராமசாமி உறுதியளித்தார். 2023 செப்டம்பர் குடியரசு கட்சியின் முதன்மை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் ராமசாமி உயர்ந்து கொண்டிருந்தபோது ஸ்டிரைவ் நிறுவனம் தனது சொத்துக்கள் ஒரு பில்லியனை தாண்டி விட்டதாக அறிவித்தது. அதே நேரத்தில் ராமசாமியின் தனிப்பட்ட நிகர மதிப்பு சுமார் ஒரு பில்லியன் டாலராக இருந்தது.
குடியரசு கட்சி போட்டியில் ஏற்கனவே முக்கிய அரசியல் பிரமுகர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் நித்திஹேலி ஆகியோர் இருந்தனர். 2023 பிப்ரவரியில் விவேக் ராமசாமியின் ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது. கருக்கலைப்பு தடைகளுக்கான ஆதரவு மற்றும் உறுதியான நடவடிக்கைக்கு எதிர்ப்பு போன்ற நிலையான குடியரசு கட்சி நிலைபாடுகளுடன் விவேக் ராமசாமி தனது ஜனாதிபதி தேர்தலில் சில வழக்கத்திற்கு மாறான கொள்கைகளை ஆதரித்தார். வழக்கமாக வாக்களிக்கும் வயதை 25 ஆக உயர்த்தவும், பிறப்புரிமை குடியுரிமையை கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் விற்பனையாளர்களை அழிக்க, அமெரிக்க ராணுவத்தை மெக்சிகோவிற்கு அனுப்பவும் அவர் அழைப்பு விடுத்தார்.
கூட்டாட்சி பணியாளர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்வதாகவும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் கல்வித்துறை (ஆசிரியர் சங்கங்களை ஒழிக்க) ஆகியவற்றை கலைப்பதாக உறுதி அளித்தார் . அதிக கார்பன் வாழ்க்கை முறையை வாழ்வதில் மக்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
மேலும் உண்மையான கால நிலை மாற்றத்தை விட மோசமான காலநிலை மாற்ற கொள்கைகளால் அதிகமான மக்கள் இறக்கின்றனர் என்று கூறினார். பிரச்சாரம் தொடர்ந்தாலும் டிஸ்சாண்டிஸ் மற்றும் ஹேலியிடம் விவேக் ராமசாமி தோல்வி அடைந்தார். அயோவா குடியரசு கட்சி கூட்டத்தில் 4வது இடத்தை பிடித்தார். மேலும் விவேக் ராமசாமி, ஆதரவாளர்களிடம் கூறியது போல் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு நான் அவரை வாழ்த்துகிறேன் என்று சொல்லுங்கள் என்றார்.
2024 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பே வெற்றி பெற்றார். தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எக்ஸ் தல உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் தொழிலதிபரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமியை அரசாங்க திறன் துறைக்கு கண்காணிப்பு தலைவர்களாக நியமித்து டிரம்ப் கவுரவப்படுத்தினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இத்துறையின் நோக்கம் அதிகார குறுக்கீடுகளை குறைப்பது, அதிகப்படியான ஒழுங்குமுறைகளை நீக்குவது, தேவையில்லாத செலவுகளை குறைப்பது, அரசு நிறுவனங்கள்/அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது ஆகும். இப்பணிகளில் எலான் மஸ்க்குடன் இணைந்து விவேக் ராமசாமி செயல்படுவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும்
‘சேவ் அமெரிக்கா’ (Save America) பிரசாரத்திற்கு இது மிகவும் அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இப்படி படிப்படியாக உயர்ந்து வல்லரசு நாடான அமெரிக்க அரசாங்கத்தில் காலூன்றி இருக்கும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி விவேகம் உள்ள ராமசாமி தான்.
— மூவர் ரவீந்திரன்.