இது ஓர் அறிவியக்கம் ! – பேராசிரியர் சுப.வீ
இது ஓர் அறிவியக்கம் !
ஒரு நூற்றாண்டைக் கடந்து நிற்கும் திராவிட இயக்கம், தன் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டாமா? வேண்டும், கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
அந்தப் பணியை மிகச் சரியாக, மிகப்பெரிய அளவில், மிகுந்த தொழில் நுட்ப நேர்த்தியுடன் நடத்தி இருக்கிறது, திமுக மகளிர் அணி! திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் வழிகாட்டுதலில், மகளிர் அணி அதனை ஒரு பெரும் பணியாக எடுத்து நடத்தி முடித்திருக்கிறது!
ஒரு வரலாற்று நிகழ்வு அறிவாலயத்தில் நடந்தேறி இருக்கிறது.
திரும்பத் திரும்ப ஏன் பழைய வரலாற்றையே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். எங்களுக்கு வரலாறு இருக்கிறது – அதனால் பேசுகிறோம்! வரலாற்றை அறிந்தவர்கள் தான் வரலாற்றைப் படைக்க முடியும் – அதனால் பேசுகிறோம்!
போட்டி நடத்துவதும், வரலாற்றைச் சொல்வதும் பெரிய செயல்கள்தான். ஆனால் அவற்றினும் பெரிது, இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இரண்டு லட்சம் பேர்களிடம், திராவிட இயக்க வரலாற்றைக் கொண்டு போய்ச் சேர்த்திருப்பது !
கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி போன்ற வடிவங்களைத் தாண்டி, வினாடி வினா என்னும் வடிவத்தில், மகளிர் அணி இந்தச் சாதனையை செய்து முடித்திருக்கிறது!
இந் நிகழ்விற்கான வினாக்களைத் தயார் செய்ய 15 பேர் கொண்ட குழுவை அமைத்து, 2000 பக்கங்களில் செய்திகளை வடிவமைத்து, தமிழ்நாடு முழுவதும் போட்டிகளை நடத்தி, இறுதியாகச் சென்னை அறிவாலயத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னிலையில் இறுதி நிகழ்வு நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்!
சென்னையில் இறுதிப் போட்டியை நடத்திய எழுத்தாளர் கோவி. லெனின், இனி வினாடி வினா நடத்துவதற்கு இவர்தான் என்பது போல ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறார்.
இறுதியாக வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி, பரிசளிக்க வந்த கழகத்தின் தலைவர், முதலமைச்சர் தன் பங்கிற்கு அவரும் பார்வையாளர்களைப் பார்த்து கேள்விகளை முன் வைத்தார். இதுவரையில் லெனின் கேள்வி கேட்டார், இப்போது ஸ்டாலின் கேள்வி கேட்கப் போகிறேன் என்றுசொல்லி அரங்கத்தை கலகலப்பாக்கினார்.
அறுவை சிகிச்சைக்கு முன்னால் எனக்கு ஒரு நாள் நேரம் கொடுங்கள். ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு வந்து விடுகிறேன் என்று அறிஞர் அண்ணா மருத்துவரிடம் சொன்னாரே, அவர் படித்துக் கொண்டிருந்த அந்தப் புத்தகம் எது என்று கேட்டார். மேரி கொரில்லி எழுதிய Master Christian என்ன அந்தப் பெயர் முயற்சி செய்தும் என் நினைவுக்கு அந்த நொடி வரவில்லை. கூட்டத்திலிருந்த ஒருவர் சரியாக விடை சொல்லி முதல்வரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.
திராவிட இயக்கம், அரசியல் கட்சி மட்டும் இல்லை, அது ஓர் அறிவியக்கம் என்பதை அந்தப் பேரரங்கம் மறுபடியும் ஒருமுறை உறுதிப்படுத்தியது !
மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதியின் வழிகாட்டலில், தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி நடத்திய பேச்சுப் போட்டிகளில் 17000 இளைஞர்கள் பங்கேற்றார்கள். அதன் மூலம், புதிதாக 182 இளம் பேச்சாளர்கள் இப்போது கழகத்திற்குக் கிடைத்திருக்கிறார்கள்.
கலைஞர் 100 – இல்லை – கலைஞர் 1000 இந்தத் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் சொன்னது உண்மையாகட்டும்!
– பேராசிரியர் சுப.வீ