தமிழ்நாட்டின் தலைச்சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ரமேஷ் பேட்டி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் தற்போது பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நல மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பணிகளின் தற்போதைய நிலை, அவற்றை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து, திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர், மாநகர காவல் ஆணையர் காமினி, காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆய்வுக் கூட்டம் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் நிலை, தற்சமயம் நடந்து வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்காகக் கொண்டு வரப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் பொதுமக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மக்களுக்காகப் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் எவ்வித ஊழலோ, சுரண்டலோ இன்றி, தங்கு தடையின்றி நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். சுயநலத்திற்காக இல்லாமல், பொதுநல நோக்கோடு மட்டுமே மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மக்களின் கோரிக்கைகளுக்கும், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் கட்டாயம் நடைபெறும்.
மக்கள் பிரதிநிதிகள் மூலம் பெறப்படும் பொதுமக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகச் சிறந்த மாவட்டமாகத் தரம் உயர்த்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.