எங்களை கேட்க யாரும் இல்லை…. தத்தளிக்கும் திருவண்ணாமலை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எங்களை கேட்க யாரும் இல்லை…. தத்தளிக்கும் திருவண்ணாமலை.

அண்ணாமலையார் கோவிலுக்கு பௌர்மணி தினத்தன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துக்கொண்டு இருந்தார்கள். அந்த நிலைமாறி கடந்த 4 வருடங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா பக்தர்கள் வந்து குவிகிறார்கள். அதிலும் மாற்றமாக கடந்த சிலமாதங்களாக வாரம் முழுவதும்மே பக்தர்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். பகல் நேரத்தைவிட மாலை, இரவு நேரங்களில் கிரிவப்பாதை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது, நகரம் தத்தளிக்கிறது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் மாடவீதியை சுற்றியே வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. கார் நிறுத்துபவர்கள் குறைந்தபட்சம் கூட சாலைவிதியை மதிப்பதில்லை. அதைவிட அராஜகம் என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் செய்வது. எல்லா ஊர்களிலும் ஆட்டோ ஸ்டான்ட்கள் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் தான் இருக்கும். ஆனால் திருவண்ணாமலை நகரத்தில் மட்டும் தான் பிரதான சாலைகளில் சாலையையே ஆக்ரமித்து ஆட்டோ ஸ்டான்ட்களாக மாற்றி வைத்துள்ளார்கள்.

இந்த பிரதான சாலைகள் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் செல்லவேண்டும், இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடியாக இருக்கிறது. குறைந்தபட்சம் சாலை விதிகளை மதிக்காமல் மின்னல் வேகத்தில், பிறர் மீது மோதுவதுபோல் ஆட்டோ ஓட்டும் டிரைவர்களை பார்த்து யாராவது கேள்வி கேட்டால் உள்ளுர் மக்களிடம்மே ரவுடிகளைப்போல் பல ஆட்டோ டிரைவர்கள் நடந்துக்கொள்வது தான் அதைவிட அராஜகம். இவைகள் தெரிந்தும் நாம் ஏன் கேள்வி கேட்கவேண்டும் என போக்குவரத்து போலிஸ் கண்டுக்கொள்வதில்லை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மாடவீதி எனப்படும் நான்கு சாலைகள், சின்னக்கடை வீதி, செங்கம் சாலை, சன்னதி தெரு போன்றவை ஒவ்வொரு மணித்துளியும் நெருக்கடியால் சிக்கி தவிக்கின்றன. இரவு நேரங்களில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் கார், வேன் போன்ற வாகனங்கள் சாலையோரம், கடைகள், வியாபார நிறுவனங்கள், வீடுகள் முன்பு நிறுத்திவிட்டு போய்விடுகிறார்கள். காலையில் கடை திறக்க வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கடைக்காரர்களும், வாகன உரிமையாளர்கள் தினம் தினம் மாடவீதியில் சண்டையிட்டுக்கொள்வதை உள்ளுர் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காவல்துறையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டிய வர்த்தக வியாபார சங்கங்கள் என்கிற பெயரில் இயங்குபவர்கள் அதிகாரவர்க்கத்துக்கு அடிபணிந்து, தங்கள் சங்க உறுப்பினர்களின் பிரச்சனைகளுக்கே வலிமையாக குரல் கொடுக்காமல் நமக்கேன் வம்பு என இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபத்திருவிழாவுக்கு மட்டும் நகரத்தின் ஒவ்வொரு தெருவையும் சீல் வைத்த காவல்துறை இப்போது வாரத்தில் நான்கு நாட்கள் சீல் வைத்துவிடுகிறார்கள். இதனால் உள்ளுர் மக்கள் எங்கும் செல்லமுடிவதில்லை, படுசிரமத்துக்கு ஆளாகின்றனர். வயதானவர்கள், நோயாளிகள் நிலையை அதிகார வர்க்கம் நினைத்து பார்ப்பதில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இன்னும் சிலதினங்களில் தீபத்திருவிழா வருகிறது. 12 நாள் திருவிழா, அதன்பின் தீபம் எரியும் நாட்கள் என மொத்தமாக 20 நாட்கள் திருவண்ணாமலை நகரை மொத்தமாக சீல் வைப்பதற்கான வாய்ப்பு இந்தாண்டு உண்டு. அதன்பின் சபரிமலை பக்தர்கள் தை மாதம் வரை வருவார்கள், தொடர்ந்து மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள் என வரிசைக்கட்டி வருவார்கள்.

மே மாதம் இறுதிவரை இந்த நகரம் படப்போகும் பாடு அதிகம். தங்களின் பிரச்சனைகளுக்காக தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசிடம், அதிகாரிகளிடம், ஆட்சியாளர்களிடம் பேசுவார்கள், குரல் கொடுப்பார்கள் என நினைக்கிறார்கள், அவர்கள் சம்பாதிப்பதிலும், மிரட்டி சொத்து சேர்ப்பதிலும் தான் கவனமாக இருக்கிறார்கள். பணம் தந்தால் ஓட்டு போட்டுவிடுவான்கள், பிச்சைக்கார மக்கள் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் இங்கு எதுவும் இல்லாதது இவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

ஓராண்டுக்கு முன்பு நகரத்தின் இந்த போக்குவரத்து பிரச்சனையை சரிச்செய்ய என்ன செய்யலாம் என ஆலோசித்து கருத்து தெரிவிக்க மாண்புமிகு துணைசபாநாயகர் தலைமையில் ஒரு கமிட்டி அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய அந்த குழு இதுவரை எனக்கு தெரிந்து 3 முறை கூடியுள்ளது. கடைசியாக கடந்த மாதம் கூடிய அந்த குழுவில் நடந்ததை சொன்னால், சம்மந்தப்பட்டவர்களுக்கு தான் சங்கடம். சங்கடம் என்பதோடு அவர்களுக்கும், ஆட்சிக்கும்மே அவமானம் என்பதால் இங்கு அதனை சொல்லாமல் தவிர்க்கிறேன்.

நகரத்தின் மிக முக்கிய இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கான நீண்டகால திட்டங்கள் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, அறநிலையத்துறையிடம் இருக்கிறதா என்றால் எனக்கு தெரிந்து கண்டிப்பாக இல்லை. பேருந்து நிலையம் இடமாற்றம், காய்கறி, பூ மார்க்கெட் இடமாற்றம் போன்றவை பிரச்சனைகளை இப்போதைக்கு தீர்ப்பதற்கான திட்டங்கள் மட்டுமே. அது அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக உள்ளுர் மக்களின் இன்னல்களை தீர்த்து வைத்துவிடாது.

பக்தர்கள் இங்கு வருவதால் வருமானம் வருகிறதே என கேள்வி கேட்பவர்களின் வாயை அடைக்கப்பார்க்கிறார்கள். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களால் அண்ணாமலையார் கோவில், குறைந்தளவு மக்கள் பொருளாதர வளர்ச்சி பெறுகிறார்கள் அதை மறுப்பதற்கில்லை.  ஆனால் அதைவிட அதிகமாக இங்கு வாழும் உள்ளுர் மக்களுக்கு பெரும் சிரமம் உள்ளது. உள்ளுர் மக்கள் ஒவ்வொருவரிடமும் இதுக்குறித்த கோபமும், ஆற்றாமையும் இருக்கிறது. மக்களின் கோபம் என்றும் வெடிக்காது, ஏன் எனில்………….. ஏன் எனில்………..

Raja Rajpriyan –

முகநூலில்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.