“சினிமாவை அழிக்கும் யூடியூப் கூலிப்படை” -ஆர்.ஜே.பாலாஜி ஆவேசம்!
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் த்ரில்லர் ஜானரிலான இந்தப்படத்தை ‘ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘திங்க் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்திருக்கின்றன. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு ஆகியோர் உலகம் முழுவதும் ரிலீஸ் பண்ணுகிறார்கள்.
வரும் 29ம் தேதி ‘சொர்க்கவாசல்’ வெளியாவதையொட்டி படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நவம்பர் 23-ஆம் தேதி மதியம் நடந்தது. இதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு , திங்க் ஸ்டுடியோஸ் சந்தோஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் ஹக்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன், கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன்மற்றும் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்’ என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய ‘கைதி 2’ படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் ” என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “சொர்க்கவாசல் படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதினோரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரு விருப்பம் உண்டு. அந்த வகையில் அவர்களுடைய ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படமாக சொர்க்கவாசலை தயாரித்திருக்கிறார்கள்.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். இந்த படத்தினை பார்த்து விட்டேன், என்னுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்தப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது வாழ்விலும் சொர்க்கவாசல் திறக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், “இந்த திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இதை யார் எழுதினார்கள் எனக் கேட்டேன். இதனை படப்பிடிப்பு நிறைவு செய்யும் வரை கேட்டுக் கொண்டே இருந்தேன்.
ஏனெனில் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் இந்த தருணத்தில் சொல்வது சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கும், இருந்தாலும் படம் வெளியான பிறகு நீங்கள் அதை உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். இது போன்றதொரு திரைக்கதையை எழுதுவது சாதாரணமான விஷயம் அல்ல. வாசிக்கும் போது எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது.
நல்ல படம் வரவேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி செய்வதில்லை. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.” என்றார்.
எஸ் ஆர் பிரபு பேசுகையில், “இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. இப்பட உருவாக்கத்தின் தொடக்க நிலையில் இருந்து எனக்கு தெரியும். இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள்.
நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்பு என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் நண்பர்களாக இருந்து படைப்பை உருவாக்கும் போது அவர்கள் எந்த சவாலையும் எளிதாக எதிர்கொள்வார்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நாங்களும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம்.
இக்கதை நம்மில் பலரும் கேட்டு பார்த்த சம்பவங்களுடன் தொடர்புடையது. படம் பார்க்கும்போது அந்த சம்பவத்துடன் எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் அனைவரும் ரசிக்கும் வகையிலான த்ரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. அதனால் இந்தப்படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
நடிகை சானியா ஐயப்பன் பேசுகையில், “ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில்,
“இந்த மேடைக்காக,மேடைக்கு வருவதற்காக வழி அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவரிடம் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சொர்க்கவாசல் படத்தின் கதையை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுத திட்டமிட்டோம். ‘வடசென்னை’, ‘விருமாண்டி’ என இதற்கு முன் வெளியான கல்ட் திரைப்படங்களை பார்த்தோம். அதன் பிறகு இந்த படைப்பை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழங்கலாம் என தீர்மானித்தோம்.
இதற்காக ராஜமுந்திரியில் உள்ள சிறைக்குச் சென்று சிறைக் கைதிகளுடன் பேசினோம். அந்தத் தருணத்தில் தவறே செய்யாமல் ஏராளமானவர்கள் சிறையில் இருப்பதை கண்டோம். அவர்களை விசாரணைக் கைதி என குறிப்பிடுவார்கள். இந்தியாவில் 70 சதவீதத்திற்கு மேல் சிறையில் விசாரணைக் கைதிகள் தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் கிடைத்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவர்களுக்கு நீதிமன்றம் இதுவரை எந்த தண்டனையும் வழங்கவில்லை. இருந்தாலும் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் இருந்த ஒரே விஷயம் நம்பிக்கை. அவர்கள் என்றாவது ஒருநாள் இந்த சொர்க்கவாசல் திறந்து வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் வாழலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அந்த விஷயம் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன். எமோஷனல் வித் ஆக்ஷன் த்ரில்லராக இந்தப்படம் இருக்கும். இரண்டு மணி நேரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படைப்பை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வரவேற்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும், மக்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில்,
“இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.
நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஸ்வரூப். எல் கே ஜி படம் வெளியான தருணத்திலிருந்து என்னுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த படத்தின் கதையை இரவு 10 மணி அளவிற்கு கேட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இணைந்து பணியாற்றலாம் என சம்மதம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும். நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. ஆனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.
சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்” என கொட்டித் தீர்த்தார்.
— மதுரை மாறன்.