ஆறு மணிக் குருவி … தோட்டக் கள்ளன் … சருகு திருப்பிக்குருவி ! – தொடா் – 2
ஆறு மணிக் குருவி … தோட்டக் கள்ளன் … சருகு திருப்பிக்குருவி !
அது என்ன ஆறு மணிக்கு குருவி பிறகு பார்ப்போம். ஆனால், இதனை தோட்டக்கள்ளன் என்றும் ஆங்கிலத்தில்- Indian Pitta என்றும் அழைப்பார்கள்.
சென்னையின் அடையாறு கழிமுகப்பகுதியில் உள்ள பிரம்ம ஞான சபை கட்டிடத்தின் அருகே உள்ள பூங்காவில் ஒரே ஒரு முறை இந்த பறவையை நான் பார்த்துள்ளேன் அதன் பிறகு எங்கேயும் பார்க்க முடியவில்லை.
இந்த குருவிக்கு இந்த ஒரு பெயர் மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு வட்டார வழக்கிலும் இதற்கு நிறைய பெயர்கள் உள்ளது.
“ஆட்டான் குருவி ஆடாதே, காட்டுக்கு கரைக்கு போகாதே…
பிடிச்ச காட்டுல விடமாட்டேன், பிடிக்காத காட்டுல விட்டுவிடுவேன்…
பொன்னான் தட்டான் குருவியே, பொழுது பட்டால் வருவியே, சுக்குத்தானை கண்டவுடனே, சுருண்டு சுருண்டு விழுவியே. – நாட்டுப்புறப் பாடல்.
எம்மை மிகவும் கவர்ந்த பறவைகளில் இதுவும் ஒன்று. சமீபத்தில் நீண்ட நாட்களாக பார்க்க வாய்ப்புக் கிடைக்காத பறவைகளில் இந்த பிட்டாவையும் சொல்லலாம். அதன் மீதுள்ள ஈர்ப்புக்கு அதன் நிறங்கள்தான் காரணமாக இருக்க முடியும் அவ்வளவு வண்ணமயமான கலர்ஃபுல் பறவை இது.
இது வடக்கு இந்தியா அதை ஒட்டிய நேபாளம், பாகிஸ்தான் பகுதிகளில் மட்டுமே வாழுகின்ற பறவையாகும். இது ஒரு ஓரிடவாழ்வி-Endemic bird). இந்தியாவின் வட பகுதியில் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. அதனால் இது தென்னிந்திய பறவை இல்லை என்பார்கள். ஆனால், குளிர்காலம் நெருங்கத் துவங்கியவுடன் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு உள்நாட்டு வலசை செய்து, இந்தப்பக்கமும், இலங்கைக்கும் செல்லும் இந்தியப் பறவை இது.
நீண்ட தொலைவு பறந்து வருவதால் இதில் பல பறவைகள் மிக மிக களைத்துவிடுகிறது. தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பல சமயம் தாறுமாறாக வந்து வீடுகளுக்குள் எல்லாம் புகுந்து அடிபட்டு மயங்கி விடுகிறதாம். களைப்படைந்து வருபவற்றை வேட்டைப் பறவைகளும் எளிதாக வீழ்த்திவிடுகிறது. போதாக்குறைக்கு மனிதர்களாலும், சில பகுதிகளில் வேட்டையாடப்படும் சம்பவங்களும், அவ்வப்போது நடந்து விடுகிறதுங்க.
நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த பறவையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமக்கும் அதற்கும் நீண்ட தொடர்பிருப்பது, இவற்றிற்கு நம்மாட்கள் வைத்திருக்கும் பல பெயர்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
காலை மாலை வேளைகளில்தான் இது, உற்சாகமாக சப்தமிடும். அதாவது காலையோ அல்லது மாலையோ சுமாராக ஆறுமணியளவில்தான் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதால், இதற்கு, “ஆறுமணிக்குருவி” என்றும், “ஆட்டான் குருவி”, “தோட்டக் கள்ளன்”, “நிலக்கள்ளன்”, “பொன்னிக்குருவி” , “பச்சைக் காடை” , “பொன்னுத் தொட்டான்” , “பொன்னாந்தட்டான்” , “காசிகட்டிக் குருவி”, “கஞ்சால் குருவி”, “பஞ்சவர்ணக்குருவி” , “மஞ்சநெஞ்சான்”, “காளி”, “மொட்டைவால் குருவி”, “காச்சில்” “காச்சூள்”, “காச்சலா குருவி)”, “பித்தவண்ணக் குருவி” – பித்தம் என்பதற்கு மஞ்சள் என்ற பொருளாம் (பித்தக் காமாலை – மஞ்சள்காமாலை) அதிலிருந்தே “பித்தா-பிட்டா” என்கிற ஆங்கிலப் பெயர் உருவாகியிருக்கலாம்.
இந்தியில் இதன் பெயர் நவ்ரங் – ஒன்பது வண்ணங்கள். மேற்கண்ட ஒவ்வொரு பெயரிற்கும் ஒரு காரணத்தோடுதான் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெயரைவைத்து, நம்ம மக்கள் அழைத்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மரக் கிளைகளில் இரவில் அடைந்து கொள்ளும். இவை பொதுவாக பகலில் எளிதில் தென்படாமல், அதிகமாக பறக்காமல், அடர்ந்த மரங்களின் கீழாக தரைப் பகுதிகளிலேயே குப்பை / சருகுகளில் புழு, பூச்சி, சிலந்தி, நத்தைகளை தேடித்தேடி உண்ணும். அதனால், “சருகு திருப்பி” என்கிற பெயரும் இதற்குண்டு. ஆக, இது விவசாயத்திற்கு நன்மையே செய்கிற பறவை.
கள்ளனைப் போன்று மறைந்து/ஒளிந்து வாழ்வதால், மக்கள் இதைச் செல்லமாக “தோட்டக்கள்ளன்” என பெயர்சொல்லி அழைத்தனர்.
தொகுப்பு- ஆற்றல் பிரவீன் குமார்.
சுற்றுச்சூழல் ஆய்வாளர்.