அண்ணல் அம்பேத்கரின் கருத்துகள் எல்லா மக்களும் உரியது – பேராசிரியர் பிரிட்டோ ஸ்டாலின் பெருமிதம் ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 11
அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 11ஆம் நிகழ்வு 14.12.2024 ஆம் நாள் மாலை 6 மணிக்கு அங்குசம் அறக்கட்டளை அலுவலகத்தில் “வரலாற்றில் அண்ணல் அம்பேத்கர்” என்னும் பொருண்மையில் நடைபெற்றது.
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் பிரிட்டோ ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனடைகள் அணிவித்து சிறப்பு செய்தார்.
“அம்பேத்கர் இந்திய அரசமைப்பின் தந்தையாக, மனித உரிமைகள், சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அதனை வடிவமைத்தார். அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகள் சமுதாய நீதி மற்றும் சகோதரத்துவம் குறித்த நிலைத்திறனைக் கொண்டுள்ளன. இன்றும் அவரது கருத்துக்கள் ஒரு வழிகாட்டியாக விளங்குகின்றன”என்பதை சுட்டிக்காட்டினார், நிகழ்வை ஒருங்கிணைத்த பேராசிரியர் நெடுஞ்செழியன்.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய பேராசிரியர் பிரிட்டோ ஸ்டாலின், “ஒரு காலத்தில் அண்ணலின் சேவை ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுநிலை உயர்ந்தபோது அண்ணல் அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட மக்கள் மறந்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துகள் ஒருசாராருக்கு மட்டுமே உரியது என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்படியல்ல, அம்பேத்கரின் கருத்துகள் எல்லா மக்களுக்கும் உரியது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவர் என்ற முழக்கத்தை முன்வைத்தவர் முசோலினி. இது ஒருவகையான பாசிசம். இனி இந்தியாவில் தேர்தல் என்பது இருக்காது. நாம் ஜனநாயகத்தைவிட்டு விலகி வந்துகொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான் அண்ணல் அம்பேத்கர் குறித்து பலரும் பேசிவருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கரை நாம் அறிவாளர் என்றுதான் சொல்ல வேண்டும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்ணல் படித்தபோது அவருடைய ஆய்வு என்பது ‘பண்டைய இந்தியாவில் வர்த்தகம்’ என்பதாகும். இந்தியாவில் 8 மணி நேரம்தான் வேலை என்பதை வரையறுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர் உருவாக்கியதுதான் ரிர்சவ் பேங்க் ஆப் இந்தியா என்பதும்.
இந்த நிகழ்வின் முழுமையான வீடியோ பார்க்க.
சுந்திர இந்தியாவில் அண்ணல் சட்ட அமைச்சராக இருந்தார். குடும்ப சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு, உரிமை உண்டு என்று சட்டத்தை முன்மொழிகிறார். இதனை உயர்சாதி இந்துகள் எதிர்க்கிறார்கள். இந்து சட்டம் இதற்கு வழிவகை செய்யவில்லை என்று உயர்சாதி இந்துகள் ஏற்க மறுத்தநிலையில், தன் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து அண்ணல் அம்பேத்கர் விலகினார் என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட செய்தியாக உள்ளது. ” என்பதாக அம்பேத்கர் குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை பதிவு செய்தார்.
நிறைவாக, சிறப்பு விருந்தினருக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜேடிஆர் சான்றிதழை வழங்கினார். பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் தந்தை பெரியார் குறித்த இருநூல்களை வழங்கினார். நிகழ்வின் புரவலர் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து நன்றியுரையோடு நிகழ்வு நிறைவுற்றது.
-ஆதவன்
[…] […]