திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பில் குளம் மறுசீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா !
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் உள்ள ஏழரை ஏக்கர் பொன்னையன் குட்டை என்ற குளத்தை தூர்வாரி, மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து, குளக்கரைகளை பலப்படுத்தி குளம் மறுசீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா 12.01.2025 அன்று நடைபெற்றது.
இத்திட்டத்தை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை, திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஆர்ச்சம்பட்டி கிராம மக்கள் இணைந்து செயல்படுத்தினர். இக்குளம் சீரமைக்கப்பட்டதன் மூலம் கிராமத்திலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இக்குளத்தில் மழைகாலங்களில் சுமார் இரண்டரை லட்சம் கன அடி நீர் சேமிக்கமுடியும். இத்திட்டத்திற்கு சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் அருள்தந்தை முனைவர் பவுல்ராஜ் தலைமையேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார். கோட்டை ரோட்டரி சங்க திட்ட இயக்குநர் நாகராஜ் விளக்கவுரையாற்றினார். செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் அருள்தந்தை மரியதாஸ், செயின்ட் ஜோசப் கல்லூரி செயலர் அருள்தந்தை அமல், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை இயக்குநர் அருள்தந்தை சகாயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா கோவிந்தராஜ் ஏற்புரை வழங்கினார். ரோட்டரி சங்க தலைவர்கள், நிர்வாகிகள், செப்பர்டு
ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் ஒன்றியத் தலைவர், கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். செப்பர்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் கல்லூரி வேதியியல் துறை மாணவர்களை களப்பணி செய்ய ஊக்கப்படுத்தினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முன்னதாக, கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ராமகணேசன் வரவேற்றார். இறுதியில், கோட்டை ரோட்டரி சங்க செயலர் ரமேஸ் நடராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
— அங்குசம் செய்திகள்.