அங்குசம் பார்வையில் ‘வணங்கான்’ திரைப்படம்
தயாரிப்பு : ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி. டைரக்ஷன் : பாலா. நடிகர்-நடிகைகள் ; அருண்விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா, சமுத்திரக்கனி, மிஷ்மின், யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், சேரன்ராஜ், தருண் மாஸ்டர், தயா செந்தில், சாயாதேவி, கவிதா கோபி, மை.பா.நாராயணன், முனீஸ்குமரன், பிருந்தா சாரதி. ஒளிப்பதிவு : ஆர்.பி.குருதேவ், பாடல்கள் இசை : ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : சதீஷ் சூர்யா, ஆர்ட் டைரக்டர் : ஆர்,.கே.நாகு, ஸ்டண்ட் டைரக்டர் : சில்வா. பி.ஆர்.ஓ. : ஏ.ஜான்.
ஏழைகளிடமும் எளியோர்களிடமும் தான் அறம் சார்ந்த வாழ்க்கை இருக்கும், மனிதம் சார்ந்த மனசு இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் டைரக்டர் பாலாவின் நேர்மைத் திறனான படைப்பு தான் இந்த ‘வணங்கான்.

கோட்டியாக அருண்விஜய், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார். காம மிருகங்களை வேட்டையாடிய பின், போலீஸ் ஸ்டேஷனில், அவரது தங்கை ரிதா, சைகை மொழியில் பேச, “ஆமா… நான் தான் அவனுகளைக் கொன்னேன். ஆனா எதுக்காக கொன்னேன்னு சொல்லமாட்டேன்” என அருண்விஜய் சைகையிலேயே சொல்ல, அதிர்கிறார் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“என்னோட கழுத்தை அறுத்தாலும் சரி உண்மையச் சொல்லமாட்டேன்” என அருண்விஜய் காட்டும் மன உறுதி பார்வையாளர்களை உலுக்கி எடுத்துவிடுகிறது. அதே போல் க்ளைமாக்ஸில் தங்கையின் பிணத்தைப் பார்த்து தலையிலடித்து கதறி பிதற்றும் காட்சியில் கல்நெஞ்சத்தானையும் கரைய வைத்துவிட்டார் அருண்விஜய். இவரின் சினிமா வாழ்க்கையில் இதுவே சிறந்த படைப்பு, பெருமைக்குரிய பரிசு.
இதற்கடுத்து நடிப்பில் நம்மை கலங்க வைக்கிறார், கதற வைக்கிறார், கண்ணீர் சிந்த வைக்கிறார் அருண்விஜய்யின் தங்கையாக நடித்த சிறுமி ரிதா. பல சீன்களில் அருண்விஜய்க்கே நடிப்புப்பாடம் எடுக்கும் அளவுக்கு சைகை மொழியில் பேசி, நமது இதயத்துக்குள் இறங்குகிறார் ரிதா.
கன்னடத்திலிருந்து வந்திருக்கும் ஹீரோயின் ரோஷினி பிரகாஷுக்கு, தமிழ் சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதற்கு படத்தில் பல காட்சிகள் சாட்சி சொல்கின்றன. பாலா ஸ்டைல் போலீஸ் ஸ்டேஷன் சீன்கள், கோர்ட் சீன்கள், நீதிபதியாக மிஷ்கினின் நடிப்பு, போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி, ஆதரவற்றோர் இல்லத் தலைவியாக சாயாதேவி, ‘ஒன்ஸ்மோர்’, ‘என் ஆசை ராசாசே’ படங்களில் வரும் நடிகர்திலகம் சிவாஜியைப் போல வரும் பாதிரியார் நடிகர் என அனைத்து கேரக்டர்களுமே பாலாவின் பக்கா வடிவமைப்பு.
பாதியாருக்கு குங்குமம் வைப்பது, விவேகானந்தர் புகழ் பேசிய அடுத்த சீனிலேயே வள்ளுவரின் ஆற்றலையும் திருக்குறளின் மேன்மையையும் சொல்வது, “இந்திய ஆண்மைக்கு… சாரி.. இந்திய இறையாண்மைக்கு” என வசனம் வைப்பது, குமரிக்கடலில் விவேகானந்தர் பாறை, அய்யன் திருவள்ளுவர், கடற்கரை ஓரத்தில் தேவாலயம் இந்த மூன்றையும் ஒரே பிரேமில் கேமராமேன் ஆர்.பி.குருதேவ்வை கொண்டு வரச் செய்தது, “இது கொலையல்ல, தர்மம் “ என்ற வசனம் வைப்பது… இதெல்லாமே பாலாவால் மட்டுமே முடியும்.
இடைவேளை வரை காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே படம் நகர்வதும், பல காட்சிகளில் பின்னணி இசையும் பலவீனமாக தெரிந்தாலும் இடைவேளைக்குப் பின் பாலா என்ற கலைஞன் வீறு கொண்டு எழுந்து ‘வணங்கானை’ வணங்கச் செய்கிறான்.
— மதுரை மாறன்.