பாழடைந்த அரசு கட்டிடம் இடிந்து எவன் தலையிலாவது விழுந்தால் என்ன ? அலட்சிய அதிகாரிகள் விராலிமலை அவலம் !
பொதுமக்கள் கூடும் முக்கியமான இடத்தில், எந்நேரமும் இடிந்துவிழும் அபாயத்தோடு பொதுமக்களை அச்சுறுத்திவரும் 75 ஆண்டுகால பழமையான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தாமல், கடந்த ஐந்தாண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம் காட்டிவருகிறார்கள் என்பதாக அதிர்ச்சியூட்டுகிறார், விராலிமலையைச் சேர்ந்த பூபாலன்.
பூபாலன்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அஞ்சலகம் எதிரில், மணப்பாறை – மதுரை மார்க்கத்தில் பேருந்து செல்லும் சந்திப்பு அருகில், முனியப்பசாமி கோயிலை ஒட்டி அமைந்துள்ள 80 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடம் பொதுசுகாதாரத்துறைக்கு சொந்தமானது. ஒருகாலத்தில், ஆரம்ப சுகாதார நிலையமாகவும், பின்னர் மருத்துவர்களின் குடியிருப்பாகவும் செயல்பட்டு வந்த கட்டிடம் அது. கடந்த 25 ஆண்டுகளாகவே, பயன்பாடு இல்லாமல் இருந்துவரும் கட்டிடம்.
“முனியப்பசாமி கோயிலை ஒட்டி அமைந்த அந்த கட்டிடத்தின் அடி ஆழம் வரை அரசமரம் வேர்விட்டு வளர்ந்து கட்டிடத்தை பிளந்து நிற்கிறது. 25 ஆண்டுகளாகவே பயன்பாடு அற்ற பாழடைந்த கட்டிடம் என்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. அக்கட்டிடத்தின் ஒரு பகுதி கோயிலின் சுவரோடு சாய்ந்து நிற்கிறது. கட்டிடம் இடிந்து விழுந்தால் கோயிலின் கட்டுமானத்தையும் பாதிக்கும். அன்றாடம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அருகிலேயே பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. எதிரில் அஞ்சலகம் செயல்படுகிறது. மக்கள் அதிகம் புழங்கும் மையமான பகுதியில் இந்த கட்டிடம் அபாயகரமாக இருந்து வருகிறது.
முனியப்பசாமி கோவில் விராலிமலை
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, எந்நேரமும் இடிந்தும் விழும் அபாயம் நிறைந்த இந்த கட்டிடத்தை இடித்து தருமாறு அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்திருக்கிறோம். மாவட்ட ஆட்சியர், பொது சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, இறுதியாக முதல்வரின் தனிப்பிரிவு வரையில் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை. கடந்த ஆண்டில்கூட, முன்னணி பத்திரிகைகளில்கூட படத்துடன் செய்தியாக வெளியாகியிருந்தது. அதிகாரிகள் வந்தார்கள் விசாரித்தார்கள் செய்கிறோம் என்றார்கள். ஆனாலும், இதுவரையில் கட்டிடம் இடிக்கப்படவில்லை.
நாளுக்குநாள் எந்த நேரத்தில் அசம்பாவிதம் ஏற்படும் என்ற அச்சத்தின்பிடியிலேதான் அந்தப் பகுதியை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டிய அவலநிலையில் இருக்கிறது.” என்பதாக, வேதனை தெரிவிக்கிறார் முனியப்பசாமி கோயில் நிர்வாகியும் முன்னாள் பத்திரிகையாளருமான பூபாலன்.
இந்த விவகாரம் தொடர்பாக, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆர்.ராகவி எம்.பி.பி.எஸ்., உதவி செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, கட்டிடம் (ம) கட்டுமானப்பிரிவுக்கு கடந்த 7.10.2024 தேதியிட்டு அனுப்பிய கடிதம் ஒன்றில், “பார்வை 1 இல் கண்ட கடிதங்களின் படி விராலிமலை மருத்துவ அலுவலர் குடியிருப்புக்கு Condermned Certificate வழங்கக்கோரி தங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் பார்வை 2-இல் கண்ட கடிதங்களின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் புதுக்கோட்டை அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனவே, தாங்கள் இவற்றை உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்பதாக குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும், அந்த பார்வை 1 இல் கண்டுள்ள கடிதங்கள் என்பது, “கடித நாள்: 24.08.2022, 01.12.2022, 05.01.2023 மற்றும் 05.04.2024” என்பதாகும். அதாவது, பாழடைந்த கட்டிடம் என்று பொதுப்பணித்துறையிடமிருந்து (Condermned Certificate) சான்றிதழ் பெறும் நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இறுதியாக, கடந்த 25.10.2024 தேதியிட்ட பொ.ப.து, கட்டட கட்டுமானம் (ம) பராமரிப்புக் கோட்டம், செயற்பொறியாளர் பொறி.தி.நாகவேலு என்பவர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், “மேற்படி புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மனு தொடர்பாக திருமயம், கட்டட கட்டுமானம் (ம) பராமரிப்பு உபகோட்டம், உதவி செயற்பொறியாளரின் அறிக்கையின்படி, மேற்படி கட்டடம் உறுதித்தன்மையற்று வசிக்க இயலாத நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே, வட்டார மருத்துவ அலுவலகத்திலிருந்து கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த அனுமதி அளிக்கும்பட்சத்தில் பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்பதாக பதில் அளித்திருக்கிறார்.
இவர்களது அதிகாரப்பூர்வ கடிதங்களின்படியே பார்த்தாலும்கூட, கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே இவர்களின் கவனத்திற்கு வந்த விவகாரம் இது. கட்டிடம் சுகாதாரத்துறைக்கு சொந்தமானது. அதன் அனுபவத்தில் இருந்து வந்தது. கட்டிடம் பராமரிப்பு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பொதுப்பணித்துறையிடமிருந்து Condermned Certificate வரப்பெறவில்லை என்று சுகாதாரத்துறையும்; சுகாதாரத்துறையிடமிருந்து இடித்து அப்புறப்படுத்த முறையான அனுமதி வரவில்லை என்று பொதுப்பணித்துறையும் மாறி மாறி கடிதங்களிலேயே இந்த விவகாரத்தை கையாண்டு வந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
சம்பந்தபட்ட பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் பாலசூர்யாவிடம் பேசினோம். “ஆமாம், எங்களது கவனத்திற்கும் வந்தது. அதற்கான நடைமுறையில் இருக்கிறது. நான் இந்த பொறுப்புக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏ.இ. பத்மநாபன் சாரிடம் பேசுங்கள்.” என்றார்.

உதவி செயற்பொறியாளர் பத்மநாபனிடம் பேசினோம். “எங்களது தரப்பில் Condermned Certificate கொடுத்துவிட்டோம். பொதுசுகாதாரத்துறை சார்பில் இணை இயக்குநர் (பொதுசுகாதாரம்) அவர்களிடமிருந்து உரிய அனுமதி வழங்க வேண்டும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். அந்த அனுமதி கடிதம் வந்துவிட்டால், 15 நாளில் இடித்துவிடுவோம்.” என்கிறார்.
புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் (பொதுசுகாதாரம்) மருத்துவர் ராம்கணேஷ் மற்றும் நிர்வாக அலுவலர் புவனேஷ்வரி ஆகியோரை அவர்களது தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோம். நம் அழைப்பை ஏற்கவில்லை.
தனிச்சிறப்பான கருவிகளை கொண்டு ஆய்வுக்குட்படுத்தி கண்டறிய வேண்டியதில்லை. வெறும் கண்ணால் பார்த்தாலே, பாழடைந்த கட்டிடம் என்பதை எவர் ஒருவரும் அறுதியிட்டு சொல்லிவிட முடியும். இல்லை, பொதுப்பணித்துறையின் ஆவணங்களின் அடிப்படையில்கூட இது 80 ஆண்டுகால பழமையான கட்டிடம் என்பதையும் உறுதிபடுத்திவிட முடியும். கடந்த 25 ஆண்டுகாலமாக, எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத கட்டிடம் என்பதை பொதுப்பணித்துறை – சுகாதாரத்துறையின் ஆவணங்களே சொல்லிவிடும். ஆனாலும், அதை இடித்து அப்புறப்படுத்துவதற்கு இத்தனை ஆண்டுகள்? இத்தனை கடிதப் போக்குவரத்துகள்?
உண்மைதான். அவசரம் ஒன்றுமில்லை ஆபிசர்ஸ்! அந்த வழியே கடந்து செல்லும் அப்பாவிகள் தலையில் அந்தக்கட்டிடம் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டால், அதன்பிறகு இடிப்பது குறித்து பார்த்துக்கொள்ளலாம். அதுவரை நீங்கள், ஹாயாக, பாதுகாப்பான ஏசி அறையில் அமர்ந்துகொண்டு அலுவலக கோப்புகளை புரட்டிக்கொண்டேயிருங்கள்!
ஆதிரன்.