தொடரும் அவதூறு பேச்சுகள் … அறுவெறுப்பின் உச்சம் சீமான் ! கைது தாமதம் ஏன் ?
பெரியாரை மீண்டும் சீண்டிய சீமான் ! வலுக்கும் கண்டனங்கள் ! கைது எப்போது ?
”பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று, கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று கடலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திருவாய் மலர்ந்திருந்தார், திருவாளர் சீமான்.
தந்தை பெரியார் குறித்து சீமான் பேசிய அந்த சர்ச்சை பேச்சுக்கு எதிராக, தமிழகம் முழுவதிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் கண்டனங்கள்:
”பெரியாரால் கிடைத்த நன்மைகள் ஏராளம், அதை எல்லாம் மறந்து விட்டு சீமான் இப்படி பேசியிருக்க கூடாது” என்றிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
“தந்தைப் பெரியாரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்பதாக கண்டனம் தெரிவித்திருக்கிறார் பா.ம.க. அன்புமணி ராமதாஸ்.
”பெரியாரை அம்பேத்கரோடு ஒப்பிடக்கூடாது என்று சொல்லி, பெரியாரை அவமதிப்பது ஏற்புடையதல்ல; அம்பேத்கரை இதற்கு துணைக்கு அழைப்பது தவறான அணுகுமுறை” என்றிருக்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
”பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்; எல்லை மீறி, மனம்போன போக்கில் பெரியாரை சீமான் கொச்சைப்படுத்தி உள்ளார்.” என்பதாக கொந்தளித்திருக்கிறார் மதிமுகவின் நிறுவனர் வைகோ.
”பெரியாருக்கு யாரும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம்; பைத்தியக்காரன் கொடுத்தால் சர்டிபிகேட் செல்லாது.” என்று காட்டமாகவே தாக்கியிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
”வாய் இருக்கிறது என்பதற்காக கொச்சையாக பேசக்கூடாது; வாழ்ந்து மறைந்த தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாக பேசுவதை தேமுதிக நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது.” என்பதாக தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த்தும் தமது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
”தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழ்நாடு அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.” என்பதாக குறிப்பிடுகிறார், காங்கிரசு கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை.
”சீமான் இன எதிரிகளுடன் இணைந்துகொண்டு, அவர்களுக்கு கருவியாக செயல்படுவதால்தான் பெரியார் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.” என்பதாக கண்டனம் தெரிவித்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு.ராமகிருஷ்ணன்.
”பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டி, பேசப்பட்ட பின்னணியை மறைத்தும் திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.” என்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகமும்; ”மூடப்பழக்க வழக்கங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபடும் சீமானின் தரம் தாழ்ந்த செயல் கண்டிக்கத்தக்கது.” என்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசனும் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

“இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி உள்ளனர்; பெரியார் குறித்து பேசியவர்கள் குறித்து பேசி அவர்களுக்கு நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை.” என்பதாக திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்து செல்ல, “ பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன; அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம்; சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை; பெரியார் சொல்லாதவற்றையும் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்புகிறார்கள்.” என்பதாக தனது பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
“பெரியாரின் கருத்தியலுக்கு எதிரானவர்கள் அவரை எதிர்த்து பேசி ஓய்ந்து போகட்டும்; சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்.” என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
நாதகவிலிருந்தே கிளம்பிய எதிர்ப்புக்குரல் !
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் அடுத்தடுத்து கண்டனங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், ” ஆரிய, வைதிக, பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியர்களின் முதல் கடமை. பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம்; நமது உயிர் மூச்சான தமிழீழத்தையும் பிரபாகரனையும் தமிழை ஆட்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்துத்துவாவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா? அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்; இந்துத்துவாவாதிகள் எதிர்க்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்; இந்துத்துவாவாதிகள் திணிக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ், பாஜக திணிக்கிறது; பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள். திராவிடக் கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும் தமிழர்களையும் அழித்து வந்தது ஆரியம்தான். நாம் தமிழர் கட்சியை துவக்கியதும் அன்றைக்கு அரவணைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியர்கள்தான். திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்தக் கருத்துதான்; நாம் தமிழர் கட்சியின் ஒட்டுமொத்த கருத்து அல்ல. ஆரியம்தான் தமிழனின் முதல் பகை; சீமானின் கருத்து ஆர்.எஸ்.எஸ், பாஜக சங்க பரிவார அமைப்புகளுக்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ்த் தேசியம் வெல்ல உதவாது.” என்பதாக சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
கொந்தளிப்பில் பெரியாரிய உணர்வாளர்கள் :
வெறுமனே அறிக்கைகள் வழி கண்டனங்களாக மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில், சீமானின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, குறிப்பாக தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்று சர்ச்சை பேச்சுக்களை பேசிவரும் சீமான் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி 70-க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. சீமானுக்கு எதிரான வழக்குகள் பதிய மறுக்கப்பட்ட இடங்களில் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், சீமானின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜன-20 ஆம் தேதியன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நிர்மல்குமார்.

இவ்வளவுக்குப்பிறகும், வழக்கம்போல செய்தியாளர்களை சந்தித்த சீமான் மீண்டும் பெரியார் குறித்து சர்ச்சை பேச்சை தொடர்ந்திருப்பதுதான் தமிழகத்தில் பெரியாரிய உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மீண்டும் பெரியாரை சீண்டிய சீமான் :
ஜன-12 அன்று சென்னை வளசரவாக்கத்தில் நாதக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மாநிலக்கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பிய விவகாரம், பொங்கல் திருநாள், ஈரோடு இடைத்தேர்தல் குறித்தெல்லாம் பேசியவர் பெரியார் சர்ச்சை குறித்த பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில்தான் பதிலளித்திருக்கிறார்.
மிக முக்கியமாக, ” உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு.” என்று பெரியார் எங்கே? எப்போது சொன்னார்? அதற்கான ஆதாரம் எங்கே? என பலரும் கேட்ட நிலையிலும்கூட, இதுவரையில் அதற்கான ஒற்றை ஆதாரத்தைக்கூட சீமான் காட்டவில்லை. மாறாக, பெரியாரின் எழுத்துக்களை அரசுடமையாக்கிவிட்டு கேளுங்கள் என்றார்.
இன்று, அதை மீண்டும் அழுத்தமாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரிடம், “இதுபோல் வேறு எந்த அரசியல் கட்சி தலைவருடனும் விவாதம் பன்னுவியா” என்று சண்டைக்கு இழுத்திருக்கிறார். வடிவேலு பாணியில், “நீ என்ன திரும்ப திரும்ப பேசுற”… “நான் சொல்றதுதான் பதில். அதோட நிறுத்திக்க.” என்ற ரீதியில் அணுகியிருக்கிறார், அண்ணன் சீமான்.
அதோடு விட்டாரா? “ஆரியத்தோடு கை கோர்த்தவர்தான் பெரியார்” என்றும்; ”பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உள்ளது. வள்ளலார், ஐயா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார், சீமான். மேலும், “பெரியார் குறித்து பேசும் விவாதத்திற்கு நான் இருகரம் நீட்டி தயாராக இருக்கிறேன்” என்றும் சவால் விட்டிருக்கிறார்.
இதையெல்லாம்விட ஒரு படி மேல், “பொதுத்தேர்தலில் பெரியார் பற்றி பேசி, பெரியாரின் சித்தாந்தங்கள், தத்துவங்கள் பற்றி பேசி வாக்கு சேகரிக்க ஒருத்தன் தயாராக இருக்கிறீர்களா?” என்று பகிரங்க சவால் ஒன்றையும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
சீமான் ஒரு கையாள் – வழக்கறிஞர் அருள்மொழி பதிலடி !
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, “நாட்டுல இப்போ என்ன பிரச்சினை நடந்துகிட்டு இருக்கு. நம்ம தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளப்போகிற ஆபத்து என்ன? மிக முதன்மையான இரண்டு விசயம் சொல்றேன் கேளுங்க. ஏற்கெனவே நீட் தேர்வு தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரியில நம்ம ஊரு பிள்ளைங்க நம்ம பாடத்தை படிச்சி பாஸ் பண்ணி சேருவதற்கு இவ்வளவு பெரிய போராட்டம். அதை எதிர்த்து நம்மால வெற்றி கொள்ள முடியல. இன்னும் எதிர்த்து போராடிகிட்டிருக்கிறோம்.

இந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்கிற கல்லூரிகள், பல்கலை கழகங்கள் எல்லாத்தையும் சென்ட்ரல் கவர்மெண்ட் கன்ட்ரோலுக்கு கொண்டு போகிற மாதிரி, யு.ஜி.சி. ஒரு புதிய ஆணையை போட்டிருக்கிறது. அதன்படி, இன்றைக்கு தமிழ்நாட்டு கல்லூரிகள், பல்கலை கழகங்கள் எல்லாம் பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அதே மாதிரி நீதித்துறையில பாஜக தத்துவங்களை கொண்டவர்களாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, நீதிமன்றத்தில்கூட மக்கள் மாநில உரிமையைக் கேட்க முடியாது. தமிழ்நாட்டு குழந்தைகளோட கல்வி, வேலை, எதிர்காலம் எல்லாத்தையும் அவங்க கையில எடுத்து அழிக்கிற வேலையில மத்திய அரசு இறங்கியிருக்கு. இந்தப்பிரச்சினையை பேச வேண்டிய நேரத்துல, இந்த மாதிரி ஒரு நபரை விட்டு, தேவையில்லாமல் பெரியாரை பற்றிய விமர்சனம், பெரியார் பற்றிய அவதூறு பொய் ஆகியவற்றை பரப்பவிட்டு, மாநில உரிமையை கேட்க வேண்டிய, தமிழக உரிமையை கேட்க வேண்டியவர்களையெல்லாம், இந்த மாதிரி அரைகுறை ஆட்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது தமிழ்நாட்டுக்கு ரொம்ப ரொம்ப ஆபத்து.
இந்த மாதிரி ஆட்களின் பேச்சுக்கு விளம்பரம் கொடுக்கிறது. இந்தப் பேச்சை விவாதப்பொருளாக்குறது. இதையெல்லாம் கொஞ்சம் நிறுத்திகிட்டு, உளர்றவங்க உளறிகிட்டேதான் இருப்பாங்க. தமிழகத்தை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்த பத்தி பேசுங்க. அதுல கவனம் செலுத்துங்க. இந்த நேரத்தில சீமான விட்டு திசை திருப்புறாங்க. இந்த இடத்தில் சீமான் ஒரு கையாள்தான்.” என்பதாக கருத்தை பதிவு செய்திருக்கிறார், வழக்கறிஞர் அருள்மொழி.
தொடரும் அவதூறு பேச்சுகள் … அறுவெறுப்பின் உச்சம் சீமான் !
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மெரினா கடற்கரையில் ”இரண்டு திராவிடர் தலைவர்களுக்குமிடையில் ஒரு பெண்ணை படுக்கவச்சியிருக்கீங்கல்ல” என்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கொச்சையான முறையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடங்கி, ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மீதான தனிநபர் தாக்குதல் முதலாக, அதிலும் உச்சமாக வருண்குமார் – வந்திதாபாண்டே ஆகியோரை டி.ஐ.ஜி.யாக பணி உயர்வு பெற்று பொறுப்பேற்ற நிலையில், ”ஹனிமூன் டிரிப் போல பக்கத்து பக்கத்து மாவட்டத்துல போஸ்டிங் போட்டிருக்கீங்க” என்பதாக விமர்சித்தது முதலாக, தற்போது பெரியார் பற்றிய கொச்சையான விமர்சனங்கள் வரையில் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிவரும் சீமான் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கையை சவுக்கு சங்கர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டது போல துணிச்சலான கைது நடவடிக்கையை மேற்கொள்ள ஏன் தயங்குகிறது? என்ற கேள்வி பலரிடையே எழுந்திருக்கிறது.
ஆதிரன்.