சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மதகஜராஜா’ சுந்தர் சி & விஷால் நெகிழ்ச்சி!
12 வருடங்களுக்கு முன் தயாராகி சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இந்த ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது ‘மதகஜராஜா’.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) படம் ரொம்பவே லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிகொண்டு இருக்கிறது..
இப்போது வரை இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா, சோஷியல் மீடியா உள்ளிட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை ‘மதகஜராஜா’ படக்குழுவினர் ஜனவரி 17- ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று சென்னையில் நடத்தினர்.
இந்த நிகழ்வில் பேசியவர்கள்..
இயக்குநர் சுந்தர்.சி
“எனக்கு தெரிந்து என்னுடைய எந்தப் படத்திற்கும் நான் சக்சஸ் மீட் வைத்தது கிடையாது. கடைசியாக ஹிட்டடித்த’ அரண்மனை-4′ படம் உட்பட, என் படம் வெளியான பின்பு அடுத்த படத்திற்கு அப்படியே நகர்ந்து விடுவேன். ஆனால் இந்த படம் அதை எல்லாவற்றையும் மீறிய ஒரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மற்ற படங்களை விட இது ஒரு ஸ்பெஷல். 13 வருடம் கழித்து இந்த படம் வருகிறது, என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறது என்று கூட திரையுலகில் சிலர் சொன்னார்கள். ஆனால் மக்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சமயத்திலேயே எங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது. தயாரிப்பாளர் மனோகர் பிரசாத், இந்தப் படத்தைப் பார்த்து அதை ரிலீஸ் பண்ணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திருப்பூர் சுப்பிரமணியம். ஏ.சி சண்முகம், ஏ .சி. எஸ். அருண்குமார், உறுதுணையாக இருந்த மதன் உள்ளிட்ட பலருக்கு நான் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் வெற்றி பெறும் என நான் நம்பினேன். ஆனால் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் படம் பார்த்துவிட்டு இது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது என்னால் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு என்னால் திருப்பிக் கொடுக்க முடிந்தது என் நன்றியும் சில சொட்டு கண்ணீரும் தான். 13 வருடங்கள் கழித்தும் கூட இப்போதும் ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம் வரும் இந்த படத்தின் கதாநாயகிகளான அஞ்சலி, வரலட்சுமி ஆகியோருக்கும் நன்றி. கலகலப்பு, மதகஜராஜா என என்னுடைய இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்த ராசியான ஹீரோயின் அஞ்சலி. கார்த்திக், விஷால் போன்ற ஹீரோக்கள் என்னை முழுமூச்சாக நம்பி தங்களை ஒப்படைத்து விடுவார்கள். ஒரு கதாநாயகி அப்படி ஒப்படைப்பது என்பது சிரமம் தான். ஆனால் அஞ்சலி அப்படி இயக்குனரை நம்பி தன்னை ஒப்படைக்கும் நடிகை.
சந்தானமும் நானும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறோம். இந்த படத்திற்காக 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்து நடித்தார். 13 வருடம் கழித்து படம் சிறப்பாக இருக்கு என சொல்கிறார்கள். அதைப் போல பாடல்களும் பின்னணி இசையும் கூட அதே ஃபிரஷ்ஷாக இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். பாட்டு மட்டும் இல்லாமல், ஹீரோவுக்கான பின்னணி இசை ஆகட்டும், காமெடிக்கான பின்னணி இசை ஆகட்டும், என்னுடைய படங்களிலேயே இது அதிக பெஸ்ட் என்று சொல்லலாம். அதற்காக விஜய் ஆண்டனிக்கு நன்றி.
மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு ஏற்ப ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தில் எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கீடு செய்யாமல் என்ன கேட்டாலும் கொடுத்து உதவினார்கள். இந்த மதகஜராஜா மூலம் மீண்டும் ஜெமினி பிக்சர்ஸ் கொடி பறக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்திற்காக விஷால் பட்ட கஷ்டங்கள் ஏராளம். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் காரில் எல்லாம் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். இப்போது இந்தப் படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் வெற்றி, நாம் உண்மையாக, நேர்மையாக முழு உழைப்பை கொடுத்தால் மக்கள் நமக்கு திருப்பி அன்பை கொடுப்பார்கள் என்பதற்கு விஷாலின் உழைப்பும் மிகப்பெரிய உதாரணம். விஷாலின் மார்க்கெட் இப்போது வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த படத்தின் வெற்றி என் தம்பி விஷாலுக்கு மிகப்பெரிய மருந்தாக அமைந்துள்ளது”.
ஹீரோ விஷால்
“இந்த 12 வருடங்களில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்த படம் பற்றி பேசும்போது எனக்கு அவ்வளவு உற்சாகம் கொடுத்தார் அண்ணன் சுந்தர் சி அவருக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். சண்டக்கோழிக்கு பிறகு நான் ரொம்பவே விரும்பி எதிர்பார்த்த படம் மதகஜராஜா. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூட நிச்சயம் இந்த படம் வெளிவரும் என ஊக்கம் கொடுத்தார். 12 வருடம் கழித்து ஒரு படம் வந்து மெகா பிளாக்பஸ்டர் ஆனது இந்த படமாக தான் இருக்கும். காரணம் நான்கைந்து வருடங்களாக வெளிவராமல் இருந்து வெளிவரும் படங்களை கூட மக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள்.
இறைவன் இதை தாமதப்படுத்தினாலும், வேறு படங்கள் நீங்கள் பண்ணிக் கொண்டிருங்கள் உங்களுக்கு ஒரு நல்ல நேரத்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்லித்தான் இந்த 9 நாட்கள் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் இந்தப் படம் வெளியாகும் விதமாக செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். டாக்டரிடம் போவது என்றால் எனக்கு பயம். ஆனால் சுந்தர்.சி சார் படங்களில் நடிப்பது என்றால் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சீக்கிரமே குணமாகும். சந்தோஷமாக இருக்கும். சுந்தர். சி. யின் படங்களில் நடிப்பது என்பது ஒரு மருந்து போல தான். ஒரு இயக்குநர் 30 வருடங்களாக திரையுலகில் நீடித்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
தயாரிப்பாளர் மனோகர் பிரசாத்துடன் நாங்கள் குடும்ப ரீதியாக ரொம்பவே நெருக்கம். நீண்ட நாட்களாகிவிட்டது அவருடைய முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை பார்த்து. நீங்கள் மீண்டும் முழு வீச்சுடன் இந்த திரையுலகில் வரவேண்டும். உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் வர வேண்டும். உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தால் எங்களைப் போன்ற நடிகர்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த படத்தின் எழுத்தாளராக வேங்கட் மிகப்பெரிய பலம். மலையாளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் குறைவுதான். இந்த படத்தின் வெற்றிக்கு அவர் ஒரு தூணாக இருந்திருக்கிறார்.நான் பல பிரச்சினைகளை, தடைகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் எப்போதும் அழும் பழக்கம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டி சென்று விடலாம் என எனக்கு நானே பேசி தைரியம் சொல்லிக் கொள்வேன்.
மீடியாக்களில் மட்டுமல்ல சோசியல் மீடியாக்களிலும் சமீப காலத்தில் ஒரு படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள் என்றால் அது மதகஜராஜா படத்திற்கு தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளான இன்று எங்கள் எம்ஜிஆரின் (மதகஜராஜா) சக்சஸ் மீட் கொண்டாடுகிறோம். இதைவிட வேறென்ன வேண்டும்.
அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனனுடன் ஒரு படம் , அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் ஒரு படம், துப்பறிவாளன் 2 என வரிசையாக படங்கள் இருக்கிறது. மீண்டும் சுந்தர்.சி.யுடன் இணைந்தும் பணியாற்ற காத்திருக்கிறேன். அவர் சொல்லிவிட்டால் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த நாளே கிளம்பி வந்து விடுவேன்”.
— மதுரை மாறன்.