சென்சார் கெடுபிடி! செல்போனில் டீஸரை ரிலீஸ் பண்ணிய வெற்றிமாறன்!
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனர் வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான ‘Bad Girl’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஜனவரி 26-ஆம் தேதி காலை சென்னை சத்தியம் திரையரங்கில் நடந்தது.
இதில் அதிமுக்கியமான சங்கதி என்னன்னா…. நிகழ்வு துவங்குவதற்கு முன்பாக பேசிய வெற்றிமாறன், “சோஷியல் மீடியாவில் சினிமா டீஸரை ரிலீஸ் பண்ணுவதற்கும் சென்சார் சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால் இப்படத்தின் டீஸருக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் மேடையில் எனது செல்போனில் டீஸரை ரிலீஸ் பண்ணுகிறேன். இதுபற்றி பிறகு விரிவாக பேசுகிறேன். எனவே பத்திரிகை நண்பர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று சொல்லிவிட்டு தியேட்டரில் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு திரையில் படத்தின் ஸ்டில்ஸ் மட்டும் ஃப்ளாஷ் ஆக தனது செல்போனில் ‘ பேட் கேர்ள் ‘ படத்தின் டீஸரை ரிலீஸ் பண்ணினார் வெற்றி.
அதன் பின்னர் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹிர்து ஹாரூண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலைப்புலி S தாணு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் பேசினர்.
வெற்றிமாறன்
“கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில்,
எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் காஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார்.
ஆக அனுராக் காஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். மேலும் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு . இப்படி பல ‘முதல்’ விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது”.
எடிட்டர் ராதா ஸ்ரீதர்
” இயக்குனர் வர்ஷா பரத் நிறைய காட்சிகளை எடுத்துட்டு வந்தார். ஒவ்வொரு தடவையும் ஒரு வெர்ஷன் ரெடி பண்ணும் போது, அதைவிட இன்னொரு வெர்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மாறி மாறி உழைத்தோம். இப்பொழுதும் இன்னும் சிறப்பான வெர்ஷன் வர வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்”.
மூத்த நடிகை சாந்தி பிரியா
” செண்பகமே செண்பகமே” பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு நன்றி. இப்பொழுது ‘Bad Girl’ படத்தின் மூலம் மீண்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் சினிமாவில் ஒரு come back கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில், வர்ஷாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியதும், நான் ஓகே சொல்லிட்டேன். இந்தக் கதை, எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள உறவு மற்றும் எனக்கும் எனது மகனுக்கும் உள்ள உறவு என்று பல நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. படம் வெளிவந்தவுடன், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையிலும் இந்தக் கதை கனெக்ட் பண்ணக்கூடியதாகவே இருக்கும்”.
கதை நாயகி அஞ்சலி சிவராமன்
” இயக்குனர் இந்தக் கதையை எனக்கு சொல்லும் பொழுது, ஒரு உண்மைத் தன்மை இருப்பதை உணர்ந்தேன். கதையில் வரும் ரம்யா கதாபாத்திரம், எனது ரியல் லைஃப் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போல் இருந்தது. முதல்முறையாக ‘ஒரு முழுக் கதையும் என்னை வைத்து நகர்கிறது’ எனும்போது எனக்கு சிறிது தயக்கமாக இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சார் மற்றும் வர்ஷா பரத் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது”.
இயக்குனர் மிஷ்கின்
“இந்தப் படத்தின் டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. வெற்றிமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை கற்றுத் தெரிந்து,தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் வர்ஷா பரத் தெரிகிறார். இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வர வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நடிகை டாப்ஸி பண்ணு
“இந்தப் பதினைந்து வருடத்தில் வெற்றிமாறன் சார் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லையே என்று யோசிப்பேன். ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றி பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குனரே பெண்ணாக இருப்பது தனி சிறப்பு. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
அனுராக் காஷ்யப்
” படத்தின் முதல் பாதியை பார்க்கும் பொழுது, நான் பிரமித்து போயிட்டேன். இந்தப் படத்தை பார்க்கும் பொழுது இயக்குனர் வர்ஷா பரத்தால் மட்டுமே இப்படி எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டது போல் இருந்தது. இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ”
இயக்குனர் வர்ஷாபரத்
“பொதுவாக வெற்றிமாறன் சாரிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவை சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டுவிட்டு feed back கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையை சொன்ன பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் “Bad Girl” படத்தின் கதை உருவானது.
நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதை சொல்லக்கூடிய கதை தான் இந்த Bad Girl. பெண்களை புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாக பாருங்கள் என்று தான் இந்த படம் கூறுகிறது”.
விழா நிறைவாக இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது, நிகழ்ச்சியில் படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.
— மதுரை மாறன்.