18 காரட் vs 22 காரட்: தங்க நகைகளில் எது சிறந்தது? எதை பார்த்து வாங்க வேண்டும்
தங்க நகைகள் 22, 18, 14 காரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. 22 காரட் தங்கம் அதிக தங்கம் கொண்டது, 18 காரட் தங்கம் அதிக வடிவமைப்புகளுடன் கவர்ச்சிகரமாக இருக்கும்.
தூய தங்கம் என்பது 24 காரட் தங்கம் ஆகும். ஆனால், 24 காரட் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. ஏனெனில், அது மிகவும் மென்மையானது. விரும்பிய வடிவமைப்பில் நகைகளை உருவாக்க முடியாது. எனவே, தங்கத்துடன் சிறிதளவு செம்பு சேர்க்கப்படுகிறது. செம்பு சேர்ப்பதால், நகைகளை பல்வேறு வடிவங்களில் வடிவமைக்க முடியும். இவ்வாறு சேர்க்கப்படும் செம்பின் அளவைப் பொறுத்து, தங்க நகைகள் 22 காரட், 18 காரட் மற்றும் 14 காரட் என வகைப்படுத்தப்படுகின்றன.
பொதுவாக, தங்கம் வாங்க நினைக்கும் பெரும்பாலானோர் 22 காரட் நகைகளையே விரும்புகின்றனர். ஏனெனில், அவற்றில் தங்கத்தின் அளவு அதிகமாகவும், செம்பின் அளவு குறைவாகவும் இருக்கும். ஆனால், 22 காரட் நகைகளை விட 18 காரட் நகைகள் அதிக அழகாகவும், கவர்ச்சிகரமான வடிவமைப்புகளுடனும் இருப்பதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.
மேலே குறிப்பிட்டபடி, தங்கத்தில் செம்பின் அளவு அதிகரிக்கும்போது, நகைகளை மேலும் நேர்த்தியாக வடிவமைக்க முடியும். சிறிய நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கூட மிக அழகாகச் செய்ய முடியும். செம்பின் அளவு குறைவாக இருந்தால், ஆழமான வடிவமைப்புகளைச் செய்ய முடியாது. எனவே, செம்பு அதிகமாக இருக்கும்போது, நகைகளின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு சிறப்பாக இருக்கும். இந்த காரணத்தினாலேயே, 22 காரட் நகைகளை விட 18 காரட் நகைகள் அதிக கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிக வடிவமைப்புகளுடன், அழகான நகைகளை அணிய விரும்புபவர்கள் 22 காரட்டை விட 18 காரட் நகைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதிக தங்கம் வேண்டும், வடிவமைப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் 22 காரட் தங்க நகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். 22 காரட் தங்க நகைகளில் 91.6% தங்கம் இருக்கும். மீதமுள்ள 8.4% செம்பு, வெள்ளி அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்கள் இருக்கும். 18 காரட் தங்க நகைகளில் 75% தங்கம் மற்றும் 25% பிற உலோகங்கள் இருக்கும்.
— கலிங்கா இளவழகன்.