தேசிய நெடுஞ்சாலையோரம் முகம் சுழிக்க வைக்கும் விளம்பர பேனர் ! அகற்ற கோரிக்கை !
திருச்சி – திருவெறும்பூர் அருகே பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ஆபாச விளம்பர பேனரை அகற்றுமாறு மக்கள் அதிகாரத்தின் சார்பில் திருவெறும்பூர் போலீசு நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அவ்வமைப்பின் திருச்சி மாவட்ட பொருளாளர் செ.கார்க்கி அளித்துள்ள போலீசு புகாரில், “திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே காட்டூர் பாலாஜி நகர் ஆற்றுப்பாலம் அருகில் வி-ஸ்டார் என்ற பெண்களுக்கான உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர பேனர் அளவில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பெண் மேல் உள்ளாடையுடன் இருப்பது போன்று அமைந்திருக்கும் காட்சி முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அண்ணன் தங்கையாகவும், தகப்பன் மகளாகவும், நண்பர்கள் தோழியாகவும், தாய் மகனாகவும் தினசரி நிமிடத்திற்கு நூற்றுக்கும் குறைவில்லாதோர் அந்த வழியே கடந்து செல்கிறார்கள்.
இதுபோன்ற விளம்பரங்கள் பெண்கள் மீதான தவறான சித்தரிப்பை உருவாக்குவதுடன், பெண்கள் மீதான மரியாதையையும் சீர்குலைத்திருக்கிறது. பெண்ணை சக மனிதராக பார்க்காமல், நுகர்வு பொருளாகவும் பெண் என்றாலே ஆணின் சொத்தாகவும், காமம் உடல் இச்சை பிள்ளை பேறுக்கான பண்டமாகவும் பார்க்கின்ற மிக மோசமான சிந்தனையும் சீரழிந்த கலாச்சாரத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த பின்னணியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த விளம்பரத்தை அகற்ற வேண்டுமாறு.” கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மாநகராட்சியின் உரிய அனுமதியோடு விளம்பரம் நிறுவப்பட்டிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் கருணாகரனும் உறுதியளித்திருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சாலையில், மற்றவர்களைப்போல தானும் பத்தோடு பதினொன்றாக கடந்து போகாமல், முகசுளிப்பை ஏற்படுத்தும் விளம்பர பேனரை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையுடன் போலீசை அணுகியிருக்கும் மக்கள் அதிகாரம் – கார்க்கியின் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.