ZEE தமிழ் சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் மலையாள ஆதிக்கம்
இன்றைய நிலையில் பல டிவிக்களில் பாட்டுப் போட்டிகள் மியூசிக் ரியாலிட்டி ஷோக்களாக வந்தாலும் அதில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கரும் ZEE தமிழ் சேனலின் சரிகமபாவும் பெஸ்ட் .
இந்த இரண்டிலும் குழந்தைகள் பாடும் நிகழ்ச்சி ஒரு படி மேல். காரணம் இளைஞர்களை விட குழந்தைகள் பாடல்களை மிக அருமையாகப் பாடும் போது அதில் கிடைக்கும் மேஜிக் எல்லாரையும் ஒருபடி மேலே கவர்கிறது .
இதில் என்ன அழகு என்றால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பார்க்க ஆரம்பித்தவர்கள் அதிலேயே செட்டில் ஆகி விடுவார்கள். ZEE தமிழின் சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் பார்க்க ஆரம்பித்தவர்கள் அதிலேயே செட்டில் ஆகிவிடுவார்கள். ரொம்ப ஆர்வம் உள்ளவர்கள் இரண்டுமே பார்ப்பார்கள்.
தவிர முகநூலில் இரண்டு டிவிக்களின் காணொளிகளும் வருவதால் இரண்டிலும் அசத்தும் பிள்ளைச் செல்வங்கள் பலரும் இசை ரசிகர்களுக்கு பரிச்சயம் .
விஜய் டிவியின் ரீச் வேறு . அது ஒரு ராட்சஷ ரீச்.
அதை நெருக்கமாகப் பின் தொடரும் ZEE தமிழின் சரிகமபாவில் ரிச்னெஸ் , புரடக்சன் வேல்யூ, கலர் , டோன், ஸ்கிரிப்ட் , புரோக்ராம் புரடியூசிங் , அர்ச்சனாவின் வர்ணனை , ஸ்வேதா மேனனின் அழகு, எஸ் பி பி சரணின் பாசாங்கில்லாத பாராட்டுகள், பாடகர் ஸ்ரீனிவாசின் ரியாக்ஷன், சைந்தவியின் TRUE AND LOYAL TO THE CORE ஜட்ஜ்மென்ட் எல்லாம் சிறப்பாக இருக்கும்.
விஜய் டிவி மாஸ் என்றால் ZEE தமிழ் கிளாஸ். இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் முந்தலாம்.
அதுவும் ZEE தமிழில் யோகஸ்ரீயும் , திவினேஷும் நம்மை முழுசாக ஆக்கிரமித்து விட்டார்கள்.
திருவனந்தபுரம் தியா நயனின் தாய்மொழி மலையாளம் என்ற போதும் மலர்ந்தும் மலராத பாடலின் பெண் குரலை அவர் பாடிய விதம் சிலிர்க்க வைத்தது . விஷ்ணுவின் அலசல் அசத்தல் , ஊட்டி பட்டுட்டி புவனேஷ் இதயம் கொள்ளை கொள்ளும் மழலை எல்லாம் வேற லெவல்.
பளிங்கினால் ஒரு மாளிகை பாடல் மூலம் அக்ஷதா ஆச்சர்யப்படுத்தினார் என்றால் மலேசிய தமிழ்ப் பெண் ஹேமித்ரா போறாளே பொன்னுத்தாயி என்ற ஒற்றைப் பாடல் மூலம் திவினேஷ் யோகஸ்ரீ வரிசையில் ஹை ஜம்ப் செய்து உட்கார்ந்து விட்டார்.
இவர்களில் பலரின் தாய்மொழி என்ன என்று நமக்குத் தெரியாது . எல்லோரும் குழந்தைகள் என்று ஆன பிறகு நமக்கு எல்லோரும் ஒன்றுதான் .
அதுவும், ” மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் ” என்று சுசீலாவுக்கும் சாவித்ரிக்கும் இணையாக தேம்பிய தியா நயனை, எப்படி மலையாளப் பெண் என்று பிரித்துப் பார்க்க முடியும் .
ஆனால் நாம் பிரித்துப் பார்த்து யோசிக்கும் அளவுக்கு ஜட்ஜ்கள் சீனிவாசும் ஸ்வேதா மேனனும் நடந்து கொள்கிறார்கள். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இவர்கள் தரும் சலுகை முகச் சுளிப்பை உண்டு பண்ணுகிறது . ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்க வைக்கிறது .
சீனிவாஸ் மலையாள வெறியோடு பலமுறை கண்ணதாசனையே இருட்டடிப்பு செய்தவர் . கண்ணதாசன் எம் எஸ் வி இவர்களில் ஒருவரை உயர்த்த ஒருவரை தாழ்த்துவதை இருவரும் மன்னிக்க மாட்டார்கள் .
சினிமாவில் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி சொல்வார்களே … அதை விட பெரிய கெமிஸ்ட்ரி கண்ணதாசன் – எம் எஸ் வி கெமிஸ்ட்ரி . உலக அளவில் சினிமாவில் ஒரு கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி வேறு எங்கும் இருந்திருக்காது .
ஆனால் மலர்ந்தும் மலராத பாடலை திவினேஷும் தியா நயனும் பாடி முடித்த பின்பு, அந்தப் பாடலுக்காக எம் எஸ் வியை மட்டும் ஆகா ஓகோ என்று கொண்டாடினார் ஸ்ரீநிவாஸ். கண்ணதாசன் பெயரை ஒரு தடவை கூட சொல்லவில்லை சீனிவாஸ்.
இப்போதும் அந்தப் பாடலைப் பாருங்கள். பாடப்படும்போது அதைக் கேட்டுக் கண்ணீர் விடும் பல ஜூரிக்கள் பாடல் வரிகளுக்காக கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பார்கள் . ”சிறகில் எனை மூடி அருமை மகள் போல..” என்ற வரியை தியா நயன் பாடும்போது ஸ்வேதா மேனனே அந்த வார்த்தைகளுக்காக மெய்மறந்து கண் மூடி இருப்பார் . ஆனால் சீனிவாஸ் எம் எஸ் வியை மட்டும் பாராட்டியபடி , “இந்தப் பாட்டின் இசையில் இருக்கும் உண்மையாகப்பட்டது … அதாகப் பட்டது .. அப்படியாகப் பட்டது … ” என்று எம் எஸ் வியைப் பற்றி மட்டுமே கொண்டாடிக் கொண்டு இருந்தார் .
இசையில்தான் உண்மையாகப் பட்டது இருக்கா சீனிவாஸ்? அந்த வரிகளில் உண்மை இல்லையா? உண்மைக்கும் மேலான காவிய வரிகள் அய்யா அது . உலகிலேயே அப்படி ஒரு பாடலாசிரியன் வேறு எங்கும் பிறக்கவில்லை. இனி பிறக்கவும் முடியாது .
அவர்தான் அப்படி என்றால் வரிகளில் நெகிழ்ந்து கிடந்த ஸ்வேதா மேனனும் கண்ணதாசன் பற்றி சொல்லவில்லை.
எம் எஸ் வியைப் பாராட்டுவது தப்பில்லை. எம் எஸ் வியின் தனிப்பட்ட அன்புக்கு பாத்திரமானவன் நான் . அவரைப் பாராட்டுவது என்னைப் பாராட்டுகிற மாதிரி எனக்கு அவ்வளவு சந்தோசம் தரும். ஆனால் இவர்கள் கண்ணதாசனை ஏன் புறக்கணிக்க வேண்டும் ?
கண்ணதாசன், எம் எஸ் வி , பாடியவர்கள்… என அனைவர்க்கும் சம முக்கியத்துவம் உள்ள பாடல்கள் உண்டு . கண்ணதாசனை எம் எஸ் வி மிஞ்சிய பாடல்களும் உண்டு . எம் ஈஸ்வியை கண்ணதாசன் மிஞ்சிய பாடல்களும் உண்டு . இருவரையும் டி எம் எஸ் மிஞ்சிய பாடல்களும் உண்டு . மூவரையும் பீம்சிங், ஸ்ரீதர் ஆகியோர் மிஞ்சிய பாடல்களும் உண்டு . இவர்கள் எல்லோரையும் சிவாஜி தூக்கி சாப்பிட்ட பாடல்களும் உண்டு .
ஆனால் மலர்ந்தும் மலராத பாடலைப் பொறுத்தவரை முதலில் கண்ணதாசன் , அப்புறம் எம் எஸ் வி , அப்புறம் சுசீலா, அப்புறம் டி எம் எஸ் என்பதுதான் தரவரிசை .
ஜட்ஜ் ஆக இருப்பவர்கள் எல்லோரும் பாடகர்கள் தானே? பாடல் வரிகள் அதன் பொருள் அது தரும் எமோஷன் இல்லாமல் பாடகர்களுக்கு என்ன வேலை?
தி கிரேட் எஸ் பி பால சுப்பிரமணியம் , கண்ணதாசனை எந்த இடத்தில் வைத்திருந்தார் என்பது தெரியுமா?
சரி… ஒரு பாடல்… ஏதோ மூடில் இருந்திருப்பார்கள் போகட்டும் என்று பார்த்தால் அதன் பிறகும் சீனிவாஸ் அப்படியே செய்கிறார் .
லட்ச ரூபாய் கொட்டிக் கொடுத்து நீங்கள் போகும் சைக்கியாட்ரிக் மருத்துவர்கள் கூடத் தர முடியாத ஆறுதலை, நிம்மதியை, தன்னம்பிக்கையை மயக்கமா கலக்கமா பாடல் மூலம் கொடுத்தவர் கண்ணதாசன் . அந்த பாட்டுக்கு கண்ணதான் என்ன, அன்றைக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி இருப்பாரா?
தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல தமிழ் தெரிந்த எல்லோருக்கும் கண்ணதாசன் கொடுத்த ஆறுதல் கொடை , நிம்மதி வரம், தன்னம்பிக்கை தர்மம் அந்தப் பாடல் . கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பாடல் தரும் ஆறுதலை என்ற மனநல மருத்துவராலும் கொடுக்க முடியாது .
அது பற்றிப் பேசும் போதும் , “எம் எஸ் வி இசையில் இருக்கும் உண்மையாகப் பட்டது …. ” என்றுதான் பேசுகிறாரே தவிர கண்ணதாசனை குறிப்பிட மறுக்கிறார் .
அதே பல இன்னொரு அதி அற்புதமான கண்ணதாசன் பாடலின் போதும் , எங்கப்பா ஸ்கிரீன் ல எம் எஸ் வி போட்டோவைப் போடுங்கப்பா .. ” என்றுதான் குலவை போடுகிறார் சீனிவாஸ் . எரிச்சல் .
இப்போதுதான் நாம் இதுவரை அப்படி யோசிக்காத — யோசிக்கக் கூட விரும்பாத கேள்வியைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறோம் .
ஏன் சீனிவாஸ்.. எஸ் எஸ் வி மலையாளி என்பதால் நீங்கள் அவரை மட்டும் அப்படி கொண்டாடுகிறீர்களா? அல்லது கண்ணதாசன் பிராமணர் இல்லை என்பதால் உங்கள் ஆதிக்க சாதி மனசு அதை ஏற்கவில்லையா? இல்லை வேறு ஏதும் காரணமா?
அட என்னை விடுங்கள் .. கண்ணதாசனைக் கூட விடுங்கள். எம் எஸ் வியின் ஆன்மாவே இப்படி நீங்களை கண்ணதாசனைப் புறக்கணிப்பதை மன்னிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
”புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே …. எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே .. என்பதை மாற்றி “எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களே … ” என்று பாடிவிட்டு மேடையில் கதறி அழுதார் எம் எஸ் வி என்பது உங்களுக்குத் தெரியுமா?
மரணப்படுக்கையில் கண்ணதாசன், ” டேய் விச்சு.. இப்படி டியூன் போடுறா .. அப்படி மாத்துடா …” என்று புலம்பியதைக் கேள்விப்பட்டபோது எம் ஜி ஆர் எப்படி அழுதார் என்று உங்களுக்குத் தெரியுமா? எம் ஜி ஆரும் பிறப்பால் மலையாளிதானே ?
இதோடு கண்ணதாசன் புறக்கணிப்பு முடிந்ததா என்றால் அதுவும் இல்லை.
ஒரு பாடலின் போது கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் போட்டோக்கள் மாறி மாறிக் காட்டப்பட்டது . அப்போது கூட DISPLAY DURATION, எடிட்டிங் இரண்டிலும் கண்ணதாசன் புறக்கணிக்கப்பட்டார்.
அண்மையில் ஒரு பாடலின் போது வேறு வழி இல்லாமல் , ” எம் எஸ் வி சாரும் கண்ணதாசன் சாரும் … ” என்று ஒரு முறை மட்டும் குறிப்பிட்டார் சீனிவாஸ் .
நாங்கள் எம் எஸ் வியை மலையாளி என்று பிரித்துப் பார்த்தது இல்லை. ஒரு வேளை உங்கள் தாய்மொழி மலையாளம் இல்லை என்றாலும் கண்ணதாசன் என்றால் ஏன் உங்களுக்கு கசக்கிறது சீனிவாஸ் ?
தமிழர்கள் கலை அரசியல் வியாபாரம் என்று எதிலும் மொழி பேதம் பார்ப்பதில்லை. அதுவும் மலையாளிகளை அப்படி பிரித்துப் பார்க்க ரொம்பவே தயங்குவார்கள் . மலையாள சினிமாவை கொண்டாடுகிறார்கள் . ஆனால் உங்களுக்கு ஏன் கண்ணதாசன் பேரைச் சொல்ல வலிக்கிறது .
இந்த அர்ச்சனா கூட ” சீனு சார் , எம் எஸ் வி என்றால் உயிரை விட்டுருவார்.. எம் எஸ் வி என்றால் சீனு சாருக்கு ரொம்பப் பிடிக்கும் ..” என்று மாய்ந்து மாய்ந்து சொல்கிறார் .
ஆனால் ”உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலைக் கேட்டு அழுது விட்டு அப்போது கூட “பாடலின் வரிகள் அப்படி இருக்கு .. ” என்றுதான் சொல்கிறாரே தவிர , கண்ணதாசனின் வரிகள் என்று சொல்ல வாய் வரவில்லை.
ஏன் அர்ச்சனா .. எத்தனை ஸ்பான்சர் பெயர் என்றாலும் கடகவேன்று ஒப்பிக்கிற, உங்கள் வாய்க்குள் கூட நுழைய முடியாத அளவுக்கு, கண்ணதாசன் என்ற பெயர் அவ்வளவு பெருசாவா இருக்கு? இல்லையே .
உங்கள் அம்மாவின் போட்டோ காட்டப்பட்டபோது அப்படி அழுதீர்களே .. கண்ணதாசனுக்கு உரிய இடம் என்ற அங்கீகாரம் மறுக்கப்படும்போது நியாயத்தின் அழுகை உங்களுக்கு முக்கியம் இல்லை. அப்படிதானே ?
இது மட்டுமல்ல .. பாடுவோர் எல்லோரும குழந்தைகள்தானே … அவர்களிடம் கூடவா பேதம் காட்டுவீர்கள் சீனிவாஸ்? ஸ்வேதா மேனன்?.
நீங்கள் செய்யும் அநியாயம் பொறுக்க முடியாமல் ஒருமுறை எஸ் பி பி சரணே , ” என்ன இது ? மலையாளிகளுக்கு மட்டும் நீங்க ரொம்ப சலுகை தர்றீங்க? ” என்று கேட்டாரா இல்லையா? அது அப்படியே டெலிகாஸ்ட் ஆனதா இல்லையா? இன்னும் அது ZEE 5 தளத்தில் இருக்கா இல்லையா?
எஸ் பி பி சரண் அப்படிக் கேட்டதும் உடனே வம்படியாக ஸ்வேதா மேனன் மைக்கை எடுத்து ”மலையாளிகளும் தமிழர்களும்சகோதரங்கள் என்கிறார் .
ஏன் ஸ்வேதா மேனோன் ….. ? அப்படி சகோதரர்கள் என்றால் எம் எஸ் வி உங்களுக்கு பெரியப்பா என்றால் கண்ணதாசனும் உங்களுக்கு பெரியப்பாதானே? அதுவும் உங்கள் பெரியப்பா, ” கவிஞரே… கவிஞரே… ” என்று உயிரையே விட்ட பெரிய பெரியப்பா இல்லையா?
நீங்கள் சக்கரே சக்கரே …என்று சொல்லிக் கொண்டு, ஓவல் ஷேப்பில் வாயைப் பிளந்து அழகாக சிரித்துக் கொண்டு, கிளிவேஜ் தெரிய உடை அணிந்து வந்து (மலர்ந்தும் மலராத பாடல் சமயத்தில் ) , கண்களை சிமிட்டிச் சிமிட்டிச் சிரித்துக் கொண்டு , ஹார்ட்டீன் விட்டுக் கொண்டு எல்லோரையும் கவர்வதால், நீங்கள் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்று நம்புகிறீர்களா?
எஸ்பி பி சரண் அப்படிக் கேட்டதும் ”நாங்கள் சகோதரங்கள்…” என்று சமாளித்த நீங்கள் ,” சார்.. தியா நயன் அப்பா உங்க அப்பா எஸ் பி பி சாரின் ரசிகர் சார்” என்ற உடன் , உடனே எஸ் பி பி சரணும் சீரியசாகவோ அல்லது விளையாட்டாகவோ ,அல்லது நமக்கு எதுக்கு வம்பு என்றோ ”அப்ப சரி ..” என்று தலையாட்டி விட்டு நகர்ந்து விட்டார்.
என்னைப் பொறுத்தவரை பாடும் எல்லோரும் குழந்தைகள் . ஒரு வகையில் தெய்வங்கள் . அவர்களிடம் நாங்கள் மொழி பேதம் இன பேதம் பேதம் பார்ப்பது இல்லை. யார் தாய்மொழி எதுவாக இருந்தாலும் இங்கே வந்து தமிழ்ப் பாடலைத்தான் பாட வேண்டும் . அவ்வளவுதான். .
இத்தனைக்கும்மலையாள மியூசிக் ஷோக்களில் நிறைய மலையாளப் பிள்ளைச் செல்வங்கள் தமிழ்ப் பாடலை அருமையாகப் பாடுகிறார்கள் . வேறு வழி இல்லாமல் ஜட்ஜ் ஆக அமர்ந்து இருப்போரில் ஒரு சிலர் — எல்லோரும் அல்ல– முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து இருக்கிறார்கள் .
அதிலும் அந்த மலையாள டிவி ஷோக்களில் சில மலையாளப் பிள்ளைகள் தமிழை உச்சரிக்கும் விதம் கண்டு வியக்கிறோம். தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழ்ப் பிள்ளைகளுக்குச் சொல்கிறோம். அது எங்கள் பெருந்தன்மையின் உயரம்.
ஆனால் நீங்கள் இப்படி மலையாள ஆதரவுடன் ஒரு சார்பு ஓர வஞ்சனை மனோபாவத்துடன் ஒரு தமிழ் சினிமா பாடல் ரியாலிட்டி ஷோவில் நடந்து கொள்வதால் அது குழந்தைகளையும் கரப்ட் செய்கிறது .
ONE TO ONE ரவுண்டில் மலேசியத் தமிழ்ப் பெண் ஹேமித்ராவும் மலையாளப் பெண் தியா நயனும் மேடையில் நிற்கிறார்கள் .
”யார் முதலில் பாடுறீங்க/” என்று ஸ்வேதா கேட்டதும் ”நான்…” என்று சொல்ல வாயெடுக்கிறார் ஹேமித்ரா . உடனே ரொம்ப சலுகையாக உள்ளே புகுந்து “நான் முதல்ல பாடுறேன்” என்கிறார் தியா நயன் . அந்தக் குழந்தைக்கு கூட தெரிகிறது மலையாளியான நமக்கு இங்கே சலுகை , முன்னுரிமை , வசதி , வாய்ப்பு உண்டு . நம்ம மலையாள ஜட்ஜ்கள் நம்மை தூக்கி விடுவார்கள் என்று .
உடனே ஸ்வேதா சரி என்று தியா நயனைப் பாட வைக்கிறார். ஹேமித்ரா அமைதியாகிறார்.
தியா நயன் பாடினார் . நன்றாகவே பாடினார் . அவள் திறமையான குழந்தை . மறுப்பதற்கு இல்லை .
ஆனால் அடுத்து நடந்ததுதான் மேஜிக்
போறாளே பொன்னுத்தாயி பாடல் மூலம் அதிர வைக்கும் விஸ்வரூபம் எடுத்தார் ஹேமித்ரா. அவர் பாடும்போது தியா நயனுக்கே புரிந்து விட்டது நமக்கு இல்லை என்று..! அப்படி சும்மா அடிச்சுத் தூக்கினார் ஹேமித்ரா. முன்பே இதே நிகழ்ச்சி வேறு சீசன்களில் இந்தப் பாடலைப் பலர் பாடி இருந்தாலும் ஹேமித்ரா படைத்தது புதிய சரித்திரம் . சொர்ணலதாவையே தூக்கி சாப்பிட்டார் ஹேமித்ரா.
இப்போது மைக்கை எடுத்த சீனிவாஸ் , “இது சொர்ணலதா பாடிய பிரம்மாதமான பாட்டு” என்று சொல்லி விட்டு அப்புறம் ஹேமித்ராவைப் பாராட்டுகிறார் .
எந்த சீனிவாஸ்? பல பாடல்களில் கண்ணதாசன் பெயரை சொல்லாமல் இருட்டடிப்புச் செய்துவிட்டு , எம் எஸ் வியை மட்டும் கொண்டாடிய அதே சீனிவாஸ் . எப்படி இருக்கு கதை?
காரணம் என்ன ?
அந்த ONE TO ONE போட்டியில் மலையாளப் பெண்ணான தியா நயனை தமிழ்ப் பெண்ணான ஹேமித்ரா தோற்கடித்ததை சீனிவாசால் ஜீரணிக்க முடியவில்லை.
அதனால் என்னதான் ஹேமித்ரா சிறப்பாக இப்படிப் பாடி இருந்தாலும் இந்தப் பாடலை ஒரிஜினலாகப் பாடியது மலையாளியான சொர்ணலதா தானாக்கும் என்று அவரே ஒரு சேதியை சொல்லிக் கொள்கிறார் .
என்ன ஒரு இன்டல்லக்சுவல் அரகன்ஸ் பாருங்கள்.
அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றவராக தியா நயனையே சீனிவாசால் அறிவிக்க முடியாதா? ஏன் ஹேமித்ராவுக்குத் தர வேண்டும் என்று கேட்கலாம் .
வாய்ப்பே இல்லை. அப்படி மட்டும் சீனிவாஸ் எதுவும் செய்து இருந்தால், கொந்தளித்துப் போய் அந்த செட்டில் வேலை பார்க்கும் கார்பெண்டரே சுத்தியலை எடுத்து சீனிவாஸ் மேல் எறியும் அபாயம் நடந்து இருக்கும் .
அப்படி அடிச்சுத் தூள் கிளப்பினார் ஹேமித்ரா.
” சொர்ணலதா பாடகர் . நடப்பது பாடல் போட்டி . எனவே சொர்ணலதா பேரை சீனிவாஸ் சொல்கிறார் . கண்ணதாசன் பேரையோ வைரமுத்து பேரையோ ஏன் சொல்லணும்?” என்று , தமிழ் ரசிகர்களே இவர்களின் வஞ்சகம் அறியாமல் கேட்கலாம்
கரெக்ட்… ஏற்கிறேன் . எனில் ஒரு மாபெரும் திரைக்கவிஞனின் பேரைப் புறக்கணித்து விட்டு இசை அமைப்பாளரை மட்டும் ஏன் தூக்கி வைத்து ஆட வேண்டும்? இப்போது பாடும் பிள்ளைகளையும் படத்துக்காகப் பாடிய பாடகர்களை மட்டும் குறிப்பிட்டுக் கொண்டாடி விட்டுப் போக வேண்டியதுதானே .
சிம்பிள்..
மலையாளியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொண்டாடுவோம் .இல்லை என்றால் இப்போது எங்களுக்கு வாய்ப்புத் தரும் நிலையில் இருந்தால் கொண்டாடுவோம். கண்ணதாசன் எனக்கு என்ன செய்யப் போகிறார்? அவரை ஏன் நினைவு கூற வேண்டும் என்பது என்ன ஒரு மனநிலை?
நான் கேட்கிறேன் ….
ஜேசுதாஸ் , தக்ஷிணா மூர்த்தி , வயலார் ரவிவர்மா சம்மந்தப்பட்ட ஒரு விசயத்தில் இவர்கள் தட்சிணா மூர்த்தியை மட்டும் பாராட்டி விட்டு வயலார் ரவிவர்மாவின் பெயரைக் கூட சொல்லாமல் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியை மலையாளத்தில் நடத்த முடியுமா?
யோசித்துப் பாருங்கள். இது மட்டுமல்ல. ஸ்வேதா மேனனின் சக்கரே .. சக்கரே என்ற இனிப்புப் பூச்சு வேலையும் அண்மையில் கரைந்தது.
ONE TO ONE ரவுண்டில் வெற்றி பெறாதவர்களை நிறுத்தி அதில் எலிமினேட் செய்யும் நேரம் .
மிக நியாயமாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றும் தீர்ப்பை வழங்கினார் சைந்தவி. சல்யூட் மா !
” இன்னொருவர் யார் என்று அவர்கள் சொல்வார்கள்” என்று வேண்டா வெறுப்பாகவே மைக்கை தள்ளி விட்டார் சைந்தவி . மலையாள குரூப் ஏதோ ஓர வஞ்சனை செய்யப் போகிறது என்பது அவருக்குப் புரிந்து விட்டது போலும்
அதே வேலையை தப்பாமல் செய்தார் ஸ்வேதா மேனன்
தியா நயன் – அமனம்பாக்கம் தர்ஷினி .. இருவரில் யாரை எலிமினேட் செய்வது என்ற கேள்வி வந்த போது சற்றும் யோசிக்காமல் தயங்காமல் அமனம்பாக்கம் தர்ஷினியை எலிமினேட் செய்து , தியா நயனை மலையாள பாசத்தோடு காப்பாற்றினார் ஸ்வேதா மேனன். அநியாயம் .
நடப்பதைப் புரிந்து கொண்டு, தொடர்ந்து அங்கு நின்றால் மாற்றினாலும் மாற்றி விடுவார்கள் என்று, அந்த இடத்தில் இருந்து அடுத்த நொடியே தப்பித்து ஓடுவதைப் போல ஓடி விட்டார் தியா நயன் . புத்திசாலிக் குழந்தை .
ஒட்டு மொத்த பர்ஃபார்மன்ஸ் என்று பார்க்கும்போது தியா நயன் , தர்ஷினியை விட சிறப்பான பாடல்களைப் பாடியவர் . ஏற்கிறேன் ஆனால் நடப்பது ONE TO ONE ரவுண்டு. இதை வைத்துதான் முடிவு சொல்ல வேண்டும் . அப்படித்தான் பொதுவில் ஓவர் ஆல் நல்ல பர்ஃபார்மன்ஸ் கொடுத்த சில குழந்தைகளும் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள் .
இந்த ONE TO ONE ரவுண்டில் தர்ஷினி தியா நயனை விட நன்றாகவே பாடினார். குறைந்த பட்சம் இருவரும் சம அளவில் நன்றாகப் பாடினார்கள் என்றுதான் சொல்ல முடியும் .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்படி இருக்க தியா நயனைக் காப்பாற்றி அமனம்பாக்கம் தர்ஷினியை வெளியே வீசியது அநியாயம் இல்லையா ஸ்வேதா மேனன்? இல்லை இல்லை …. தர்ஷினியை விட தியா நயன் நன்றாகப் பாடினார் என்பது ஸ்வேதா என்ற ஜட்ஜம்மாவின் தீர்ப்பாக இருந்தால் ..அதை நாம் மறுக்க முடியாது. ஏன்னா அவங்கதான் ஜட்ஜ். கரெக்ட் .
ONE TO ONE ரவுண்டில் தோற்ற எல்லாரும் எலிமினேட் செய்யப்படவில்லை. தோற்றாலும் மகதியை எலிமினேட் செய்யாமல் தக்க வைத்தார்கள் . நூறு சதவீதம் சரி . பாராட்டுகள்.
சீனிவாஸ் சொன்னபடி பளிங்கினால் ஒரு மாளிகை பாடல் மூலம் திவினேஷின் பழைய பாடல் சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்து கலக்கிய அக்ஷதாவும்சம மதிப்புடன் தக்க வைக்கப்பாட்டார். . சபாஷ். அருமையான முடிவு பாராட்டுகிறேன்.
ஆனால் தர்ஷினி — தியா நயன் என்று வரும்போது மட்டும் தர்ஷினிக்கு விலக்குக் கொடுக்காமல் எலிமினேட் செய்தது ஏன் ?
காரணம் .. முதல் ரெண்டு விசயத்தில் அந்தக் குழந்தைகளில் யாரும் மலையாளி இல்லை. அதனால் உங்களால் நேர்மையாக நடந்து கொள்ள முடிந்தது . ஆனால் இங்கே தியா நயனுக்கும் தர்ஷினிக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் தர்ஷினியைத் தொடர்ந்து உள்ளே விட்டால்… இந்த வாரம் எப்படி ஹேமித்ரா தியா நயனை அடிச்சுத் தூக்கியது போல. அடுத்த வாரம் தர்ஷினியும் தியா நயனை அடித்துத் தூக்கும் ஆபத்து உண்டு .
அது நடந்து விட்டால் ஒரு தமிழ் மியூசிக் ஷோவில் கொஞ்சமும் மனசாட்சி இன்றி தைரியமாக மலையாளப் பெண்ணான தியா நயனை இந்த மலையாள ஜட்ஜ்கள் பைனல் வரை அநியாயமாக கொண்டு வந்து நிறுத்த முடியாது . அதுதான் தர்ஷினியை கருவறுத்து விட்டார்கள்
அதுவும் எப்பேர்ப்பட்ட தர்ஷினி? தினசரி பல மைல் தூரம் நடந்து போய் படித்து, அதோடு பாடல் திறமையை வளர்த்துக் கொண்டு பாட வந்து, நிகழ்ச்சியில் தன் ஊரின் நிலைமையை சொல்லி, அதை நீங்களே வேண்டுகோளாக வைக்க, அரசாங்கத்தின் இரும்பு இதயத்தையே அசைத்து , தனது ஊருக்கு பஸ் விட வைத்து , பல பிள்ளைகளின் கல்வி வாழ்வில் விளக்கேற்றி,
சரிகமபா நிகழ்ச்சிக்கே புது கவுரவத்தை ஏற்படுத்திய தர்ஷினியை . அதற்காகவது, மகதிக்கும் அக்ஷதாவுக்கும் உங்கள் தியா நயனுக்கும் கொடுத்த சலுகையை தர்ஷினிக்குக் கொடுத்து இந்த பஸ் விசயத்தையே காரணமாகச் சொல்லி தர்ஷினிக்கும் எலிமினேஷனில் இருந்து விலக்குக் கொடுத்து இருக்கலாமே
அட்லீஸ்ட்… அந்தப் பெண்ணை வெளியே அனுப்பும்போது பேருந்து விசயத்தைக் குறிப்பிட்டு , அதன் மூலம் இந்த நிகழ்ச்சிக்கும் சேனலுக்கும் தந்த கவுரவத்துக்காக தர்ஷினிக்கு ஒரு நன்றி சொல்லக் கூட உங்களுக்கு மனசு இல்லை.
சிம்பிள் .. தமிழ்நாட்டில் ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் தமிழ்ப் பாடல் நிகழ்ச்சியில் தமிழ்ப் பிள்ளைகள் என்னதான் புரட்சி படைத்தாலும், உயிரையே குரலாக ஒழுக விட்டு பாடினாலும் அவர்களுக்காந உங்கள் ஸ்கேல் வேறு . அதே ஒரு மலையாளப் பிள்ளை என்றால் உங்கள் சலுகை ஸ்கேல் வேறு .
இது நியாயமா?
நீங்கள் என்ன பிள்ளைகளுக்கு மார்க் போடுவது?
நான் உங்களுக்கு மார்க் போடட்டுமா ?
உங்களை தரவரிசைப் படுத்தட்டுமா?

- ஜட்ஜ்மென்டில் நூறு சதவீத நேர்மை . VERY MUCH PROFFESSIONAL . பாராட்டுகிறேன் என்ற பெயரில் உணர்ச்சிவசப்படுவது போல நடிப்பது இல்லை. அதே நேரம் தன்னை மறந்து பாராட்டும்போதும் அதில் இருக்கும் நேர்மை.
பெஸ்ட் ஜட்ஜ் நம்பர் 1. சைந்தவி . உங்களுக்கு பிளாட்டினம் ஷவர் சைந்தவி

- மலர்ந்தும் மலராத பாடலை திவினேஷ் பாடிக் கொண்டு இருப்பான். கையை ஆட்டாமல் தலையை ஆட்டாமல் அவன் பாடுவதை பிரம்மிப்பாக வியப்பாக சந்தோஷமாக FREEZE ஆகி ஒருவித தாய் மனதோடு பார்த்துக் கொண்டு இருப்பார் ஒரு முறை மட்டும் அல்ல.. பலமுறை ! திவினேஷ்க்கு மட்டுமல்ல பலருக்கும்!
வாயால் பேசுவதை விட மனசால் கண்களால் அணைப்பால் ஆத்மார்த்தமாக ஜட்ஜ்மென்ட் செய்வார். ஜட்ஜ் நம்பர் 2 எஸ் பி பி சரண் .உங்களுக்கு கோல்டன் ஷவர் சரண் .

- ஒருவனிடம் இருந்து பணத்தைத் திருடினால் கூட அவன் சம்பாதித்து விடுவான் . ஒரு கலைஞன் வாழ்வில் அங்கீகாரத் திருட்டு தான் பெரிய கொள்ளை. ஒரு நல்ல கலைஞன் அதைச் செய்ய மாட்டான். அதுவும் ,
” காவியத் தாயின் இளையமகன்- நான்
காதல் பெண்களின் பெருந்தலைவன் ..
பாமர ஜாதியில் தனி மனிதன் ..
படைப்பதனால் என் பேர் இறைவன் .
மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை. – எந்த
நிலையிலும் எனக்கு மரணம் இல்லை”
என்று குன்றேறி நின்று முழங்குவது போல , தானே எழுதி தானே நடித்து விட்டுப் போன கண்ணதாசனையே நீங்கள் புறக்கணிப்பதால் உங்களுக்கு சால்ட் வாட்டர் ஷவர்தான் .
ஆனால் குழந்தைகளைப் பாராட்டுவதில் உங்கள் குணம் பாராட்டத்தக்கது . எனவே நீங்கள் ஜெயிக்கவில்லை. ஆனால் எலிமினேஷனும் இல்லை.
- மலர்ந்தும் மலராத பாடலை திவினேஷும் தியா நயனும் பாடியதைப் பார்த்த உடன் , ‘ தெய்வங்களுக்காகப் பாடுவதைக் கேட்டு இருப்பீர்கள் . தெய்வங்களே பாடுவதைக் கேட்டு இருக்கிறீர்களா ? கேளுங்கள் என்று எழுதி அதை முக நூலில் பகிர்ந்தவன் நான். (அதற்கான இணைப்பு https://www.facebook.com/share/p/18rjkURFQ2/ ) .
காரணம் நான் இந்த பாட்டுப் பாடும் தேவதைப் பிள்ளைகளிடம் பேதம் பார்ப்பது இல்லை.

ஆனால் ஒரு ஜட்ஜ் ஆக பெண்ணாக இருந்து கொண்டு பெண் பிள்ளைகளுக்கு இடையிலேயே பேதம் பார்க்கும் ஸ்வேதா மேனன் .. நீங்கள் எலிமினேட் செய்ய்யப்படுகிறீர்கள் .
விருமாண்டி படத்தில் கமல்ஹாசனைப் பார்த்து ஒரு பெண் கேட்பார். “கெணத்துக்குள்ள இருந்தப்பா நல்லவனா இருந்தியே . வெளிய வந்ததும் ஏன் கெட்டுப் போயிட்ட ?” என்று சீனிவாசிடமும் ஸ்வேதா மேனோனிடமும் மாற்றித்தான் கேட்க வேண்டும்.
பொதுவில் நல்ல மனிதர்களாக பெருந்தன்மையாக கனிவாக நடந்து கொள்ளும் நீங்கள் மலையாள உணர்வு என்ற கிணற்றுக்குள் விழும்போது மட்டும் ஏன் கரெப்ட் ஆகி விடுகிறீர்கள் ?