“200 இலக்கு“ தடங்கல்கள் ஏராளம் – உஷார்….உஷார்… ஆளும் திமுக உஷார்..
அகில இந்திய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘இமேஜ்’ஜும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெயரும் மிகப்பெரிய அளவில் உயர்ந்து சங்பரிவாரக் கும்பலையும் அந்தக் கும்பலால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள வட இந்திய ஊடகங்களையும் நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால் அதே நேரம் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் வெற்றி இலக்கு என்ற முடிவுடன் களம் இறங்கியிருக்கும் திமுகவுக்கு ’தடங்கல்கள் ஏராளம் இருக்கு’ என்பதையும் மறுப்பதற்கில்லை.

அண்ணாமலை & கோ வெளியீடும் ஊழல் பட்டியல்கள் எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை. ”அட போங்கப்பா… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…” என்ற மனநிலைக்கு மக்கள் வந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. அப்ப வேறென்ன தான் திமுகவுக்கு தடங்கல்களாக இருக்கு?
இருக்கு…. இங்க பிரச்சனை இருக்கு. அதில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களை ரொம்பவே இம்சைக்குள்ளாக்கும் பிரச்சனைகள் வரிசைகட்டி நிக்குது.
1.சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல், மாவட்டத் தலைமை மருத்துவமனை வரை ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் படும்பாடும் அவமரியாதைகளும் சொல்லி மாளாது. சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களையோ, ஹாட் அட்டாக் ஆனவர்களையோ, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றால், அட்மிஷன் போடுவதற்கே சில மணி நேரங்கள் ஆகிறதாம். இதைவிடக் கொடுமை இப்படிப்பட்ட நோயாளிகளை மாலை நேரங்களில் அழைத்துக் கொண்டு போனால், அப்போதைக்கு ஒரு ஊசியைப் போட்டு, செவிலியர்களே ஒரு பெட்டில் படுக்க வைத்துவிடுகிறார்களாம். மறுநாள் காலை தான் டூட்டி டாக்டர் வருவாராம். அதுவரை அவர்கள் உயிரின் கதி? இதற்கு சாட்சி, கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம். நெஞ்சு வலியால் துடிதுடித்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாலை 4 மணிக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்திருக்கிறார்கள் அவரது உறவினர்கள்.
அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை என்பதால் டாக்டர்கள் வரமாட்டர்கள் எனச் சொல்லி , செவிலியர் ஒருவர் தற்காலிக நிவாரண ஊசியைப் போட்டு, ஐசியூவில் அட்மிட்டும் போட்டிருக்கிறார். மறுநாள் திங்கள் கிழமை காலை தான் இதயசிகிச்சை மருத்துவர் வந்து பார்த்து மேல் சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. நல்லவேளை அதுவரை அந்த இளைஞருக்கு எதுவும் விபரீதமாக நடக்கவில்லை.
2.வருவாய்த்துறை
இந்தத் துறையின் கீழ் வரும் வி.ஏ.ஓ.அலுவலகம், தாசில்தார் அலுவலகம், இவை தான் ஏழைகள், நடுத்தரவாசிகள் அதிகம் சென்று அல்லல்படும் அலுவலகங்களாகிவிட்டன. ”மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் இருக்கும் பெண்களுக்கும் வெகுவிரைவில் வழங்கப்படும்” என ஐந்து மாதங்களுக்கு முன்பு உறுதியளித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவரின் இந்த உறுதியால் லட்சக்கணக்கான பெண்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். விஏஓ, தாசில்தார் அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர். ஆனால் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாமல் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
அதே போல் உரிய ஆவணங்கள் இருந்தும் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், பெயர் மாற்றச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் இதையெல்லாம் பெறுவதற்கு விஏஓக்கள், தாசில்தார்களை சாமானியர்கள் அவ்வளவு சாதாரணமாக சந்தித்துவிட முடியாது. புரோக்கர்கள் மூலம் தான் போயாக வேண்டும் என்பதை விதியாகவே வைத்து, ஏழைகளின் விதியோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடெங்கும் இதே அவலம் தான். மிக சமீபத்தில் கோயம்புத்தூர் சூளக்கரை பகுதியைச் சேர்ந்த வி.ஏ.ஓ.ஒருவர் 5 ஆயிரம் லஞ்சப் பணத்துடன் தப்பி ஓடும் போது குளத்திற்குள் குதித்த சம்பவம் தான் இதற்கு சாட்சி.
3. போக்குவரத்துத் துறை
அதே தான்… இங்கேயும் அதே கதை தான். புதிதாக டிரைவிங் லைசென்ஸ் வாங்கினாலும் சரி, காலாவாதியாகிவிட்ட லைசென்ஸைப் புதுப்பித்தாலும் சரி, டூவிலர், கார்களின் ஆர்.சி.புக்கை வேறு நபர்களின் பெயருக்கு டிரான்ஸ்பர் பண்ணினாலும் சரி, எல்லா விண்ணப்பங்களும் புரோக்கர்கள் மூலம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும், வழங்கப்படும். நேரடியாக முயற்சி செய்தால், உங்களுக்கு தலைவலி, திருகுவலி, ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு வரலாம். அப்படி வந்தால் அரசு மருத்துவமனைக்குத் தான் போயாக வேண்டும். அங்கே போய் லோல்படுவதைவிட இங்கே புரோக்கர்களுக்கு ‘கட்டிங்’ வெட்டிவிட்டால், எல்லாம் சுமூகமாக முடிந்து கட்டாந்தரையில் கூட நிம்மதியாக தூங்கலாம்.
மிகமிக முக்கியமான பின்குறிப்பு : ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் நடக்கும் இந்த அவலங்கள், அவமரியாதைகள், அலைக்கழிப்புகள் எல்லாமே சங்கி மெண்டாலிட்டி அதிகாரிகள், ஊழியர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, அதை சோஷியல் மீடியாக்களிலும் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
உஷார்….உஷார்…ஆளும் திமுக உஷார்..
— கரிகாலன் .