பள்ளிக் கூடங்களில் தொடரும் சாதியப் பாகுபாடுகள் – சிறப்பு கட்டுரை
தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேரும்போது அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆறாம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கும்போது தான் அவர்களுக்குச் சாதி என்றால் என்னவென்று தெரியும். அன்றைக்கு அப்படி ஒரு நிலை இருந்தது. ஆனால் இன்று மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் முன்பே சாதியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதற்கு யார் காரணம்? மாணவர்களின் பெற்றோர்களா? இல்லை இந்தச் சமுதாயத்தில் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளா? என்று பார்த்தால் பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்குச் சாதி அடிப்படையில் சாயம் பூசுவதில்லை. அவர்கள் பிறந்த சமூகம்தான் அவர்களுக்குச் சாதி சாயத்தைப் பூசிவிடுகிறது.
மாணவர்கள் சாதிய அடிப்படையில் வகுப்பறையில் அமர்கிறார்கள். இந்த நிலை தொடர்வதற்கு அங்கே இருக்கும் சாதி வெறிப் பிடித்த ஆசிரியர்களும் காரணமாக இருக்கிறார்கள். சமத்துவம் போதிக்கக்கூடிய ஆசிரியர்களே மாணவர்களுக்குச் சாதி வெறியை ஊட்டி விடுகிறார்கள். இதனால் பள்ளியில் சாதியின் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு நடந்த தீண்டாமைக் கொடுமைகள் இன்று பரிணாமம் அடைந்து பல்வேறு நிலைகளில் பரவியுள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படிச் சாதி வெறி உருவாகுவதற்குக் காரணம் சாதிய மனநோய் பிடித்தவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காகவும், சுயதேவைகளுக்காகவும் மாணவர்களிடத்தில் சாதி வெறியைத் திணித்து விடுகிறார்கள். அதன் தாக்கம் அவர்களின் அடி மனதில் பதிந்துவிடுகிறது. இதனால் பள்ளிக்கு வந்ததும் அவன் சக மாணவர்களிடம் சமத்துவம் காட்டாமல் சாதியைக் காட்டி விடுகிறான். அருகில் உட்காரும் எண்ணம் இல்லாமல் தனியாக உட்கார்ந்து விடுகின்றான். இன்றைக்கு மாணவர்களிடத்தில் இது தொடர்ந்து நடக்கிறது.
மாணவர்கள் கையில் சாதி கயிறுகள்
தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கையில், காலில் சாதியின் அடையாளமாகக் கயிறு கட்டிக்கொண்டு வருகிறார்கள். இதுவே மேல்நிலை பள்ளிகளில் பார்த்தோம் என்றால், அங்கே சாதி வெறியின் உச்சம் மாணவர்களிடம் அதிக அளவில் இருப்பதைக் காணலாம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கையில் சாதி அடையாளமாகக் கயிறு கட்டியது மட்டுமல்லாமல் கையில் சாதியின் பெயரையும், சாதி தலைவரின் பெயரையும், சாதி தலைவரின் படத்தையும் பச்சை குத்திக் கொண்டு சாதி வெறியை வெளிப்படுத்துகிறார்கள். இதற்கு அங்கே இருக்கும் ஒரு சில ஆசிரியர்களும் துணையாக இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று கைக்குட்டை முதல் நோட், பேனா வரை சாதியின் அடையாளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள் இது தற்போது நவீனமாக இருந்து வருகின்றது.
“தீண்டாமை ஒரு பாவச் செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்”
என்று கற்பிக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் சாதி ரீதியாக மாணவர்கள் பிரித்துவைக்கப்பட்டிருப்பது பெரும் அவலம். நாம் அனைவரும் தமிழர்கள்; தமிழ்த் தாயின் பிள்ளைகள் என்று பெருமையாகக் கூறிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் எங்கோ ஓர் மூலையில் சாதி ரீதியாகத் தீண்டாமைக் கொடுமைகள், கொலைகள் என்று பல்வேறு பிரச்சனைகளைச் சாதி இந்துக்களால் தினமும் சந்தித்து வருகின்றோம். பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய மாணவர்கள் சாதியால், மதத்தால் வேறுபட்டிருக்கின்றார்கள். பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் மாணவர்கள் சாதி வாரியாகக் கையில் கயிறுகள் கட்டி தங்களை அடையாளப்படுத்தி வருகிறார்கள்.
வருகைப் பதிவேட்டில் சாதி குறியீடுகள்
மாணவர்களது வருகைப் பதிவேட்டில் சாதியைப் பதிவு செய்தல். அதிலும் வருகைப்பதிவேட்டில் கூட ஆதிக்கச் சாதியின் பெயரை ‘அர் விகுதியுடனும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிப் பெயரை ‘அன்’ விகுதியுடன் எழுதுதல் என்பது பல பள்ளிகளில் தொடர்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வருகைப் பதிவேட்டில் பெயருக்கு நேராக (SC, SCA, ST, DNC, MBC, BC, BCM) என்று குறிப்பது சாதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்குச் சமம். புள்ளிவிவரங்களை எளிமையாகத் திரட்டுவது என்ற பேரில் அகரவரிசை அல்லது சேர்க்கை எண் வரிசையில் மாணவர்கள் பெயர்களை எழுதாமல் சாதி வரிசையில் எழுதுவது என்பது தீண்டாமையின் வெளிப்பாடு.
வகுப்பில் நலத்திட்டங்களுக்காக(SC/ST)மாணவர்கள் எழுந்திருங்கள், அல்லது கையை உயர்த்துங்கள் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கணக்கெடுப்பது இன்றும் நடக்கிறது. மாணவர்கள் வருகைப் பதிவேட்டில் சாதி அடிப்படையில் எழுதுவது குறித்துப் பள்ளிகளில் இருக்கும் தலைமை ஆசிரியர்களே கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறார்கள். வருகைப் பதிவேட்டில் ஏன் சாதியை எழுதவேண்டும்? விவரங்கள் அனைத்தும் நமது சேர்க்கைப் பதிவேட்டில்தானே இருக்க வேண்டும்.

மாணவர்கள் பார்க்கும் விதத்தில் சாதிப் பெயரை ஏன் எழுத வேண்டும்? சாதி பெயர்களை எழு வேண்டும் என்று ஏதாவது நடைமுறை இருக்கிறதா? வருகைப் பதிவேடு என்பது பொதுவான ஒரு பதிவேடு. இதன் வேலை தினசரி வருகைப் பதிவு செய்வது மட்டுமே. அதைச் செய்யாமல் அதில் சாதியை எழுதுவது மிகவும் கேவலமான ஒரு நடைமுறை. நலத்திட்ட உதவிகள், அரசு சலுகைகள் போன்ற புள்ளி விவரங்களுக்குத் தேவையென்றால் அவற்றைத் தனியே எழுதி மந்தணமாகப் பராமரிப்பது தான் நடைமுறை.
வளர்ந்து வரும் நவீன உலகத்தில் சாதி ரீதியான பாகுபாடுகளை அதிக அளவில் பள்ளிக்கூடங்களில் தான் பார்க்க முடிகிறது. பிஞ்சுக் குழந்தைகளாக வளரும்போதே அவர்களுக்குச் சாதி என்னும் நஞ்சு ஊட்டி வளர்க்கப் படுகிறார்கள். கல்லூரி, பல்கலைக்கழகம் செல்லும் போது சக மாணவனைச் சமமாகப் பார்க்க வேண்டிய இடத்தில் சாதியாகப் பார்க்கிறார்கள். சில மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி கற்பதால் அவர்களை ஏளனமாகவும் அவர்களுக்குத் திறமையில்லாதது போன்றும் விமர்சிக்கிறார்கள். இதில் வெட்கித் தலைகுனிய வேண்டியது என்னவென்றால் இந்தப் புரிதல் கூடச் சாதிய மனநோய் பிடித்த ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இல்லை என்பது தான். இந்தப் புரிதல்கள் இருந்திருந்தால் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் சாதி ரீதியான பாகுபாட்டால் மாணவர்கள் சண்டை போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் கொலைவெறியுடன் தாக்குதல் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வும் சாதி ரீதியான பிரச்சனைகளும் தான் மாணவர்களின் கொலைவெறி தாக்குதலுக்கும், மரணங்களுக்கும், படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொள்வதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

பள்ளிகளில் தான் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அப்பட்டமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாதிவாரியாகக் கையில் கயிறுகள் கட்டி கொண்டு பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு அந்தந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் சாதிய மனநோய் பிடித்த ஆசிரியர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இன்றைய சமூகத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்கும், சாதிச் சண்டைகளுக்கும் சாதி வேற்றுமை தான் அடிப்படையாக உள்ளது.
இது மனித மனங்களில் மிகப் பெரிய கொடிய நோய் போலத் தொற்றிக் கொண்டு மனித நேயத்திற்கு எதிராகச் செயல்படத் தூண்டுகிறது. இது படிப்படியாக மாணவர்கள் மனதிலும் குடிகொண்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் அடித்து மிரட்டுவது, கை விரல்களை நசுக்குவது, அவர்களின் புத்தகங்களைப் பறிப்பது, மோட்டர் சைக்கிளில் வந்தால் டயரைக் கிழிப்பது. பெண் பிள்ளைகளாக இருந்தால் கேலி கிண்டல் செய்வது தொடர் கதையாகிவிட்டது. இந்த அளவுக்கு ஆதிக்கச் சாதி மாணவர்களின் போக்கு தொடர்கிறது. ஆசிரியர்களால் மட்டும் அல்லப் பெற்றோர்களாலும் தட்டிக்கேட்க முடியாத ஒரு நிலை இன்றைக்கு உள்ளது.
சாதியப் பாகுபாடுகள்
மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்கள் சாதிக் கொடுமைக்குப் பெயர்போன மாவட்டங்கள். பட்டியல் இன மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் அடிமைகளைப் போல வாழ்ந்து வருகிறார்கள். சாதியக் கொடுமை இன்றும் அந்த மாவட்டங்களில் அதிக அளவில் நடக்கின்றது. மதுரை, தேனி மாவட்டங்களில் சில அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சாதிய அடிப்படையில் தனியாகப் பிரித்து வைத்துப் பாடம் நடத்தப்படுகிறது. உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டி என்ற ஊரில் செருப்பு அணிந்து சென்ற தலித் மாணவனின் தலையில் செருப்பைச் சுமக்கவைத்து இழிவு படுத்தியிருக்கின்றனர். தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தில் தலித் மாணவன் கால்மேல் கால் போட்டுத் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்ததினால் “ஏண்டா நாயே, எம்புட்டு திமிர் இருந்தா நான் வரும்போது கால் மேலக் கால் போட்டு உக்கார்ந்திருப்ப” என்று சொல்லிக் கத்தியால் தலையில் வெட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தலித் மாணவர்கள் ஆதிக்கச் சாதியினர் முன்பு பேருந்தில் உட்கார்ந்து செல்ல முடியாத ஒரு நிலை இன்றும் தொடர்கிறது.
பொள்ளாச்சி அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றின் கணக்கு ஆசிரியர் தலித் அல்லாத குழந்தைகளைக் கூட்டல் என்றும், தலித் குழந்தைகளைக் கழித்தல் என்றும் அழைப்பார். கூட்டலை நம்பித்தான் கழித்தல் இருக்கிறது என்றும் பாடம் நடத்துவார். அந்த ஆசிரியருக்கு எதிராகப் புகார் எழுந்தது. விசாரணையில் அந்த ஆசிரியர் என்ன கூறினார் தெரியுமா? குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகத்தான் அப்படிக் கூறினேன் என்றார். சமத்துவத்தை வளர்க்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் சாதிக்கூடங்களாக மாறி வருகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன இருக்கப் போகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டி, மேட்டூர் பள்ளியில் சத்துணவு சமையல்காரராக மகேஸ்வரி என்ற தலித் பெண் வேலைக்குச் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த இரண்டு நாட்களில் மகேஸ்வரியின் சாதியைக் கண்டுபிடித்த அந்த ஊர் மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்கின்ற உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிட்டால் குழந்தைகளுக்குத் தீட்டு ஒட்டி விடும். ஆகவே மகேஸ்வரியை இடமாற்றம் செய்யுங்கள் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். முடிவு என்ன தெரியுமா? மகேஸ்வரிக்கு இடமாற்றம் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கே தண்டனையும் கொடுத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளிக்கூடத்தில் சாதி ரீதியாக மாணவர்கள் பனியன் அணிந்து வருவதும், கைகளில் சாதி அடையாளக் கயிறுகள் கட்டியிருப்பதும் இயல்பான ஒன்றாகிவிட்டது. இது பெரும்பாலும் வட மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் காணலாம். இந்த நிலை இன்றும் தொடர்கிறது. ‘சாதி ஒழிப்பு வீரன்’ என்கிற 16 வயது தலித் சிறுவனைப் பள்ளிக்கூடத்தில் ஐந்து மாணவர்கள் கடுமையாகத் தாக்கினார்கள் எதற்காகத் தெரியுமா? சாதி ஒழிப்பு வீரன் என்று எப்படிப் பெயர் வைக்கலாம். எங்களுக்கு எதிரான இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறி அடித்துள்ளனர். கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையான மாணவர்களும், ஆசிரியர்களும் சாதிய உணர்வோடுதான் இருக்கின்றனர். நகர்ப்புறத்திலும் இதே நிலை இருக்கின்றது.
சுதந்திரத் தினத்தன்று அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் சாதித் தலைவரின் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. அந்தப் பள்ளிக்கூடம் அமைந்துள்ள கிராமம் ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கிராமம். ஆகவே சுதந்திரத்தைக் குறித்துப் பாட வேண்டிய பள்ளிக்கூடத்தில் சாதி குறித்துப் பாடல் போடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே சோமனூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெறுகிறது. ஆண்டு விழாவில் மாணவர்கள் நடன நிகழ்ச்சியில் சாதி ரீதியான பாடலைப் போட்டுச் சாதி அடையாளத் துண்டைப் போட்டுக்கொண்டு நடனமாடுகின்றார்கள். பள்ளி நிகழ்வுகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றது.
திட்டக்குடி அருகில் எழுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவ – மாணவிகளைச் சாதி ரீதியாகப் பிரித்துத் தலித் மாணவர்கள், பிற மாணவர்கள் எனத் தனியாக அமர வைத்துள்ளார் தலைமை ஆசிரியர். இதனை மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளைச் சாதி ரீதியாகப் பிரித்து ஒரு தலைமை ஆசிரியரே இப்படி அமரவைப்பது சரியான செயலா? என்று கேட்டுள்ளனர். இதற்குத் தலைமை ஆசிரியை மாணவர்களுடைய பெற்றோர்களைத் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனால் மாணவர்களின் பெற்றோர்க்கும் தலைமை ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியை மாணவர்களின் பெற்றோர்களை அவமதிக்கும்படி தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் மீது காலணி எடுத்து வீசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பதிலுக்குத் தலைமை ஆசிரியை மீதும் காலணி வீசியுள்ளனர். இதனால், எழுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த திட்டக்குடி வட்டாட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் எழுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்குச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியையிடமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளித் தலைமை ஆசிரியை மாணவர்களைச் சாதி ரீதியாகப் பிரித்து அமர வைத்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை மறு ஆணை வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்தனர். மாணவர்களுக்குச் சமத்துவத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியையே இப்படி மாணவர்களைச் சாதி ரீதியாகப் பிரித்து அமரவைத்துப் பிரிவினை ஏற்படுத்துவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இப்படிதான் பல பள்ளிகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆசிரியர்களிடம் காணப்படுகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவன் சரவணக்குமார் வயது 14. அவனுடன் படிக்கும் உயர் சாதியைச் சேர்ந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவனால் நடுமுதுகில் பிளேடால் கொடூரமாக வகிரப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பானது.
நடந்த சம்பவத்தைப் பற்றி சரவணக்குமார் கூறியது. அன்றைக்கு (11.10.2019) சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும் பேருந்துக்காக நின்னுக்கிட்டிருந்தோம். என்னோட நண்பன் மோகன் ராஜாவின் புத்தகப் பையை எங்க கூடப் படிக்கிற மகா ஈஸ்வரன் ஒளிச்சு வச்சுட்டான். பையக் குடுடா சொங்கிப் பயலேன்னு சொன்னேன். மகாஈஸ்வரன் என்கிட்ட வந்து ‘ஏண்டா சக்கிலியக் கூதி மவனே உனக்கு அவ்வளவு திமிரான்னு திட்டி, அடிச்சு கையில் வச்சிருந்த பிளேடால் முதுகில கிழிச்சுட்டான். சட்டை ரெண்டா கிழிஞ்சி இரத்தமா கொட்டுச்சு. நான் கதறி அழுதேன். மகா ஈசுவரன் ஓடிட்டான். அங்க இருந்தவங்க என்னைய போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கு அப்புறம் என்னோட அம்மா வந்தாங்க. போலீஸ்காரங்க எங்க அம்மாவையும் என்னையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சாங்க” என்று கூறினான். கழுத்திலிருந்து அடி முதுகு வரை முதுகுத்தண்டு மேல் நீளமாகக் கிழிக்கப்பட்ட காயம் இருந்தது. பிளேடு என்பதால் பையன் தப்பித்தான். இதுவே கத்தியாக இருந்தால் என்னவாகியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.
அதன் பிறகு சரவணக்குமாரின் அம்மா ராஜாத்தி பேசியது. இதுக்கு முன்னாடியும் ரெண்டு முறை இதே பையன் என் பையனோட சண்டை போட்டுக் காயத்தை ஏற்படுத்தி இருக்கான். நான் இதைப் பெரிதுபடுத்தவில்லை. கேட்கப் போனால் நம்ம மேலதான் பழியப் போடுவாங்க. அவங்க மேல்சாதிக்காரங்க ஒன்னாச் சேர்ந்துக்கிட்டு அடிக்க வருவாங்க என்று பயந்துதான் நான் கேட்கவில்லை. என்னோட வீட்டுக்காரர் வெளியூருல பெயிண்டிங் வேலப் பாக்குறார். எனக்கு இவன் ஒரே மகன். இவனாச்சும் படிக்கட்டு-மேன்னுதான் பல பிரச்சினைகளுக்கு மத்தியில படிக்க வைக்குறோம். இப்பகூட இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சமரசத்துக்கு வந்தாங்க. காயத்துக்கு மருந்துபோட 500 ரூபாய் கொடுக்குறோம்னு சொன்னாங்க. சமுதாயத் தலைவர்கள் வந்து சமரசமாகப் போகச் சொல்லி வற்புறுத்தினாங்க. நான்தான் முடியாதுன்னு போலீசுல புகார் கொடுத்தேன். அதுக்கும் பல மிரட்டல் வந்தது. இந்தப் பிரச்சினை இத்தோட முடியட்டும்னு தான் நான் புகார் கொடுத்தேன்” என்று கூறியுள்ளார். மாணவன் சரவணகுமாரின் முதுகில் பிளேடால் சக மாணவர்கள் சாதிய வன்மத்துடன் கிழித்த சம்பவத்தைப் பார்க்கும்போது நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வைக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மாணவன் சின்னதுரை வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, “அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் சின்னதுரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர்.”இதைப் பார்த்த சின்னதுரையின் தங்கை, அதைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அவர் தற்போது அத்தனைத் தடைகளையும் கடந்து பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே கட்டாரிமங்கலத்தில் அரியநாயகபுரம் அணிக்கும் கெட்டியம்மாள்புரம் அணிக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் அரியநாயகபுரம் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அரியநாயகபுரம் அணியில் இடம் பெற்றிருந்த தேவேந்திர ராஜ் உள்ளிட்ட அனைவரும் கோப்பையுடன் கொண்டாடியுள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத காழ்ப்புணர்ச்சியால் தான் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜின் மீது சாதியக் கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. கெட்டியம்மாள்புரத்தைச் சார்ந்த மூன்று பேர் பள்ளிக்குத் தேர்வு எழுதப் பேருந்தில் சென்ற மாணவன் தேவேந்திர ராஜை பேருந்திலிருந்து கீழே இறக்கிக் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் மாணவன் தேவேந்திர ராஜின் இருகைகளிலும் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. நான்கு விரல்கள் துண்டாகியுள்ளன. அவற்றில் ஒரு விரல் கிடைக்கவில்லை. மற்ற மூன்று விரல்களையும் ஒட்டும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. தலையில் ஆறு இடங்களில் வெட்டியுள்ளனர். மண்டைஓடு வரை படுகாயம் பட்டுள்ளது. முதுகிலும் பல இடங்களில் வெட்டுக் காயத்துடன் மாணவன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கின்றான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பஞ்சமா தேவி. கள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாது சுந்தர் என்ற மாணவனை வி. அகரம் அரசு உயர்நிலை பள்ளி விளையாட்டு ஆசிரியர் செங்கேனி தாக்கியதில் மாணவர் மண்டை இரண்டாகப் பிளந்து உயிருக்கு ஆபத்தா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி மாணவர்கள் மீது இது போன்ற சாதியத் தாக்குதல்கள் தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கின்றது. இதற்கான தீர்வு என்பது எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை.
இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா என்று குருடன் செவிடனிடம் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இன்று நூற்றுக்கணக்கான தீண்டாமை வடிவங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. பள்ளிகளில் இந்தப் பாகுபாடுகள் என்பது ஒரு மிகப் பெரிய சமூக அவலம். சாதி வெறி கற்றவர்களிடமும் கல்லாதவர்களிடமும் ஒரே நிலையில் தான் இருக்கின்றது. இந்தச் சாதியை வைத்து மனிதனின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைக்கப்படுகின்றது என்பதை ஒவ்வொரு நாளும் நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.
— முனைவர் சீமான் இளையராஜா, கட்டுரையாளர்.