விவசாய நிலஉடைமை விவரங்களை பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு!!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 1,83,115 விவசாயிகள் உள்ளனர். இதுவரை 1,00,633 விவசாயிகள் பதிவுசெய்து அடையாள எண் பெற்றுள்ளனர்.
பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,03,206 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதுவரை 62,563 விவசாயிகள் பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். மீதம் உள்ள 40,643 விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து பி.எம்.கிஸான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது
மேலும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட 24 துறைகளின் மானியத் திட்டங்களை எளிதில் பெறலாம். மேற்கண்ட துறைகளின் திட்ட பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்கள் சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை.

விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் வசிக்கும் பட்சத்தில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராமநிர்வாக அலுவலர் அலுவலகங்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவசாயிகளின் நிலஉடைமை விவரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களை விட்டு வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள அனைத்து அரசுஅங்கீகாரம் பெற்ற பொது சேவைமையங்களில்; தங்கள் நில உடைமைகளை இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் தங்கள் அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தை பயன்படுத்தி தங்களுடைய பட்டா, கூட்டுபட்டா, ஆதார் அட்டை, அலைபேசி கொண்டு சென்று பதிவு செய்து இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் இச்செயலி மூலம் விவசாயிகளின் நிலஉடைமைகள் மற்றும் இதர விவரங்களை விவசாயிகள் முன்னிலையில் சரிபார்த்து விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்து பெறப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயன்களை ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெறலாம்.
எனவே 15.04.2025 வரைகால நீட்டிப்பினை பயன்படுத்தி நிலஉடைமை விவரங்களை பதிவுசெய்து பயன்பெற திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.