பொய்ச் சேவலும் – புளுகுக் காளையும் !

0

பொய்ச் சேவலும் – புளுகுக் காளையும்

எண்ணிக்கைகளே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தீர்ப்பாக அமைகின்றன. அந்த முறையில், வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை, கடுமையான எதிர்ப்புக்கிடையிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

காலம், தவறுகளைத் திருத்தும் மற்றொரு திருத்தத்திற்கும் வாய்ப்பளிக்கலாம். சமூக நீதிக் காவலர் வி.பி.சிங், தன்னுடைய ஆட்சி கவிழ்க்கப்பட்ட நாளில் நாடாளுமன்றத்தில் உறுதியுடன் சொன்னார், “அரசியலில் கடைசிநாள் என்று எதுவும் கிடையாது.” -அதுதான் நினைவுக்கு வருகிறது.

தி.மு.க.வின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்ற ஆ.ராசா எம்.பி.யின் நேற்றைய மக்களவை உரை, ஜனநாயகத்தின் உரத்த குரலாக முழங்கியது. பா.ஜ.க அரசு இழைக்கும் துரோகத்தை சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ பொய்யாகப் பேசுகிறார் என்பதை நேருக்கு நேராக எடுத்துரைத்த ஆ.ராசாவின் துணிச்சலான சொற்கள், கலைஞர் சொன்ன ‘தகத்தகாய சூரியனாக‘ ஒளிர்ந்தது.

Cock and Bull story
Cock and Bull story

Cock and Bull story என்று அவர் பயன்படுத்திய மரபுத்தொடர் (idiom), அந்த அமைச்சரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒன்றிய பா.ஜ.க. அரசே பொய் மூட்டைதான் என்பதைத் தோலுரித்துக் காட்டியது. உண்மையைப் போலவே தோற்றமளிக்கும் கவர்ச்சிகரமான, பொருத்தமற்ற, நம்பமுடியாத கதைகளைச் சொல்லி, திசைதிருப்புவதையும், தவறான தகவல்களால் வழிநடத்துவதையும்தான் Cock and Bull story என்று ஆங்கிலத்தில்  சொல்வார்கள்.

Cock என்பதும் Bull என்பதும் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயரின் வர்த்தகப் பகுதியான ஸ்டோனி ஸ்டார்ஃபோர்டில் உள்ள இரண்டு விடுதிகள். இரண்டிலும் தங்குபவர்களை ஈர்க்கவும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், அந்தக் காலத்தில் போட்டிப் போட்டு அவிழ்த்துவிடப்படும் கதைகளைத்தான் Cock and Bull storyஎன்று  சொல்வார்கள். இதைத்தான் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜுவும், அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் செய்தனர்.

கதைவிடும் விடுதியைப் போல, ஜனநாயகத்தின் உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்தை பா.ஜ.க.  நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்ன ஆ.ராசா, “நான் சொல்வது தவறென்று நிரூபியுங்கள். நான் ராஜினாமா செய்து விடுகிறேன்” என்று அறைகூவல் விடுத்தார்.

கோவி லெனின் – மூத்த பத்திரிகையாளர் 

Leave A Reply

Your email address will not be published.