அகதிகள் வருகை : இந்தியா ஒன்றும் சத்திரமல்ல – உச்சநீதிமன்றம் !
“உச்சநீதிமன்றம் கடந்த வாரம் இந்திய அரசால் வலுக்கட்டாயமாக கைது செய்து மியான்மார் கடல் அருகே லைஃப் சாக்கெட் கொடுத்து நீந்தி கரை சேர்ந்து கொள்ளுங்கள் என கடலில் வீசி எரிந்த 43 ரோகின்யா முஸ்லீம்கள் நிலை குறித்து விசாரிக்க தாக்கல் செய்த மனுவை, இந்த சம்பவம் நடந்ததற்கான என்ன ஆதாரம் உள்ளது? என கேட்டு அகதிகள் நிலையை கணக்கில் கொள்ளாது, வழக்கை தள்ளுபடி செய்தது.
19.5.2025 ஈழத்திலிருந்து வந்திருந்த 2015 ஆண்டு க்யூ பிரிவு காவல்துறையால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறு உருவாக்கத்திற்கு நிதி திரட்டுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கைது செய்யப்பட்டு பத்தாண்டு தண்டனை பெற்று, உயர்நீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகளாக குறைக்க பட்டு, பின்னர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்த சுபசேகரன்(எ) ஜீவன் (எ)பிரபா என்பவர் இந்தியாவில் குடும்பத்துடன் தங்கி இருக்க தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. அது பிரச்சனை அல்ல. ஆனால் சுப சேகரன் மனைவி நோய் வாய்ப்பெற்றவர் . அவரின் மகனும் இருதய நோய் பாதிப்பு உள்ளவர். இலங்கை அரசாங்கம் தன்னை துன்புறுத்த வாய்ப்பு உண்டு என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை மனித நேயத்தின் அடிப்படையில் நீதிமன்றம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் நீதிபதி திபாங்கர் தத்தா “இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல” என மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த சொல்லாடல் நமது உணர்வுகளை இனம் புரியாமல் காயப்படுத்துகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இங்கு குடியுரிமை பெற முடியும்.ஆனால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் அந்த உரிமை இல்லை. மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து வரும் மக்களையும் அதே தர்ம சத்திரம் என்ற காயப்படுத்தும் சொல்லாடல் பொருந்தும் தானே?.
நீதிபதி குறிப்பிடும் தர்மசாலா என்ற பெயரில் உள்ள இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஊரில் 1959 ஆண்டு 80000 மக்களுடன் அகதியாக தலாய் லாமா வந்தார். கர்நாடகா மாநிலத்தில் ஒட்டர் பாளையம் உட்பட்ட மூன்று இடங்களில் அம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வாழ்நிலை ரோடு ஒப்பிடும்போது தமிழ் அகதிகள் முகாம்கள் சுதந்திரமானதாகவோ, தரமானதாகவோ கருத முடியாது.
இந்திய 1951 அகதிகள் மாநாட்டில் கையொப்பம் இடவில்லை. அதற்கு தங்கள் பொருளாதாரநிலை இடம் தரவில்லை என காரணம் கூறப்பட்டது. ஆனாலும் இந்திய அரசு கையெழுத்து இட்டுள்ள சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் அகதிகள் சொந்த நாட்டில் துன்புறுத்தபடுவோம் என்ற காரணங்களால் அண்டை நாடுகளில் தஞ்சம் புக முடியும். (everyone has the right to seek and enjoy asylum from persecution in other countries)
நீதிபதி ஒன்றை மறந்து விட்டார் அகதிகள் தஞ்சம் புகுந்த நாட்டில் கடுமையாக உழைத்து அதன் முன்னேற்றத்திற்கு பாடுபடுகின்றனர். அவர்கள் அந்த நாட்டு வளத்தை சுரண்டும் ஆட்கள் அல்ல. நமது சமூகம் உலகை தன் ஊராய் பார்த்த உயர் அறம் கொண்ட மண். இரக்கம், மனித நேயம் போன்றவை இயல்பான அறமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உயிர் வாழு இங்கே அனுமதிப்பது அறப்பணி. அது நீதிபதியின் வார்த்தையில் சிதைக்க பட்டுள்ளது.
தமிழக அரசு இங்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் நவீன சிறையை உருவாக்கி உள்ளது. அங்கு குற்றம் செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் நடைமுறை உள்ளது. இவை நீக்கபடவேண்டும்.
உச்சநீதிமன்றம் தனது தர்மசாலா என்ற வார்த்தையை திரும்ப பெற வேண்டும். அது ஒட்டுமொத்தமாக அனைத்து அகதிகளையும் காயப் படுத்துகிறது. இந்திய அரசு அகதிகள் நிலையில் இரட்டை நிலைப்பாடு காட்டுவது தவறானது. மனித உரிமைக்கு எதிரானது” என்று மனித உரிமைகள் ஆர்வலர் வழக்கறிஞர் பாலமுருகன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.