தி.மு.க. ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி… சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!
தி.மு.க. ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி… சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!
பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில், ஆளுநருடனான நீண்ட நெடிய போராட்டத்துக்குபின் தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தற்போது, அந்த வெற்றியை சீர்குலைக்கும் விதமாக தமிழக கல்லூரிக் கல்வி ஆணையாளரின் நிர்வாக செயல்பாடுகள் இருப்பதால், மீண்டும் ஆளுநரின் கைகளிலேயே பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கலாம் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிர்வாக சிக்கல்கள்: கல்வி, ஆராய்ச்சி மற்றும் பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பு.!

இதுகுறித்து மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பேசியபோது, ”மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தற்போது நிலவி வரும் நிர்வாக கோளாறுகள் பல்வேறு பல்கலைக்கழக செயல்பாடுகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன. துணைவேந்தர் தேர்வு குழு ஒருங்கிணைப்பராக பதவி வகிக்கும் சுந்தரவல்லி, ஐ.ஏ.எஸ்., பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் பல்வேறு ஆட்சிப் பிரச்னைகள் புதிய புதிய கோணத்தில் உருவாக தொடங்கியுள்ளது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இவர் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழகத்தின் 2000க்கும் மேற்பட்ட கல்லூரிகளையும் நிர்வகிப்பதில் பத்திரப்பற்று கொண்டுள்ளார். இதனால், இந்த பல்கலைக்கழகங்களில் ஒவ்வொன்றையும் நேரடியாக கவனிப்பதற்கான போதுமான நேரம் இல்லாமை குறிப்பிடத்தக்கது.
நிர்வாகத் தாமதங்கள் மற்றும் பணி சிக்கல்கள்
துணைவேந்தர் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனார் என்றாலும், பல்வேறு பொறுப்புகளால் பல்கலைக்கழக நடவடிக்கைகளை நடத்துவதில் மிகக் குறைந்த நேரம் செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஒரே ஒரு முறையே தலைமைத்துறை பேராசிரியர்கள் (HODs) கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசும் போது., “நான் மிகவும் பிஸியாக உள்ளேன்; உங்கள் பல்கலைக்கழகம் என் முக்கிய பணிகளுக்குள் இல்லை; இது எனக்கு கூடுதல் பணி,” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளரை சந்திக்க வாராந்திரம் தங்களின் அணி கொண்டு சென்னை செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆனால், பல நேரங்களில் நாள் முழுவதும் காத்திருந்தும் அவரை சந்திக்க முடியாமல் வருத்தப்படுகிறார்கள். அனைத்து நடவடிக்கைகளும் சென்னை நகருக்கு அனுப்பி வைக்கப்படுவதால், ஒப்புதல் மற்றும் கையெழுத்து பெறுதல் போன்ற செயல்களில் பெரும் காலதாமதங்கள் ஏற்படுகின்றன” என்றனர்.

ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு.!
மேலும் இதுதொடர்பாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் பேசியபோது, “பி.எச்.டி. ஆய்வுக் கல்வி மாணவர்கள் தங்கள் ஆய்வுத் தொகுப்புகளை சமர்ப்பித்த பிறகு பரிசோதகர் குழுவை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் மிகவும் நீண்டகாலமாக தாமதமாக நடைபெறுகின்றன. வாய்மொழி பரீட்சை நடத்தப்படும் நேரமும் அதிகமாக நீடிக்கின்றது. இதனால் கடந்த 6 மாதங்களாக ஆய்வாளர்கள் பட்டம் பெற முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள்.
2025- மாணவர் சேர்க்கை அறிவிப்பு கூட தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது. இது துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விளம்பர அனுமதியை தாமதப்படுத்தியதாலேயே ஏற்பட்டது. பேராசிரியர்களின் திட்டத் திட்டங்கள் (Project Proposals) மற்றும் நிதி உதவி கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், பல்கலைக்கழகத்திற்கு எதிர்கால நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றம் நிர்வாகம் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது” என்றனர்.

நிர்வாகத்தில் மரியாதை குறைவு மற்றும் பணியாளர்களின் நிலை
இதுகுறித்து பல்கலைக்கழக சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது, “துணைவேந்தர் குழு ஒருங்கிணைப்பாளர், பதிவாளர், குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பினர்களை மதிக்காமல் செயல்படுவது கடுமையான புகாராக உள்ளது. பணியாளர்கள் தினசரி மூன்று தினக்கூலி ஊழியர்களால் மட்டுமே மூன்று பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள வைக்கப்படுகிறார்கள்.
பணியாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளரை சந்திக்க நாள் முழுவதும் சென்னை சென்று காத்திருக்க வேண்டி வருகிறது. செல்போனில் தொடர்புக்கொண்டாலும் பதில் அளிப்பதில்லை. குறுஞ்செய்தி அனுப்பினாலும் அதற்கு பதிலும்மில்லை. இது அனைவருக்கும் பெரும் சிரமத்தையும் மனஅழுத்தத்தையும் உண்டாக்கி உள்ளது. பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் வழக்கமான சனட், சின்டிகேட் மற்றும் பாகமான (Faculty) கூட்டங்களை நடத்தாமல் இருக்கிறது. இது பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு பெரும் மீறல்.
நிர்வாகத்தில் தாமதங்கள் இல்லாமல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சிறப்பாக நடக்க புதிய ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும். அதற்கு பல்கலைக்கழகத்திலேயே உள்ள சீனியர் பேராசிரியர்களை நியமித்தால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிப்படையாமல் இருப்பார்கள்.” என்றனர்.

தமிழக முதவர்வருக்கு கோரிக்கை.!
மாணவர்கள், ஆசிரியர்கள் பிரச்னைகளுக்கு செவி கொடுக்காத உயர்க்கல்வித்துறை ஆணையரை, பல்கலைக்கழக துணை வேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழு பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
நிதி உதவி திட்டங்கள் மற்றும் ஆய்வு முன்மொழிவுகளை விரைவாக சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக முறையில் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியை முன்னெடுக்க அரசாங்கம் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகும். இங்கு நடைபெறும் கல்வி முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி பணிகள், தமிழகத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இருப்பினும், தற்போது மூன்று பல்கலைக்கழகங்களையும் ஒரே ஒருங்கிணைப்பாளர் கவனிக்கவிருப்பதால் நிர்வாக நிலவரம் மிக அதிக சிக்கல்களுக்கு உள்ளாகி, கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலைகளை பரிசீலித்து, பல்கலைக்கழக நிர்வாகத்தில் புதிய ஒருங்கிணைப்பாளரை நியமித்து, கல்வி, ஆராய்ச்சி மற்றும் பணியாளர்களின் நலன் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கல்வி நிறுவனங்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லியை தொடர்புக் கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியும் பதில் இல்லை.
-ஜெ. ஜான் கென்னடி
நல்ல கட்டுரை. வாழ்த்துகள். சில எழுத்துப் பிழைகள். நீக்கினால் கட்டுரையின் தரம் உயர்வாக இருக்கும். நன்றி.
[…] […]