“குவிஸ் (QUIZ) பிதாமகன்” பேராசிரியர் பாலகிருஷ்ணன்
தெலுங்கு எனக்கு தாய்மொழி…
ஆங்கிலத்தால் பிழைக்கிறேன்…
தமிழால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்… என்று வெளிப்படையாகப் பேசியவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன்.
அவர் (12.06.2025) வியாழக்கிழமை காலை இயற்கை எய்தி விட்டார். அவருக்கு வயது 85.
திருச்சி, தூய வளனார் கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகவும், கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றியவர். பணியில் இருந்த போதும் சரி, பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் சரி, அவர் ஓய்வறியா உழைப்பாளியாக வாழ்ந்தவர்.
தான் கற்ற கல்வியும், தனக்கு ஒளி ஊட்டிய அறிவும், பள்ளி கல்லூரி மாணவச் செல்வங்களுக்கும் உயர் கல்விக்குப் பின்னர் அரசுப் பணித் தேர்வு மற்றும் அவர்களது நேர்முகத் தேர்வுகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும், அவர்கள் அனைவர்க்கும் புது வெளிச்சம் பாய்ச்சியவர்.

தினமலர் தினசரி பத்திரிகையின் பள்ளி, கல்லூரி பிள்ளைகளுக்கான “ஜெயித்துக் காட்டுவோம்”, “வழிகாட்டி” மற்றும் வேளாண் பயிற்சிக் கருத்தரங்குகள் பலவற்றிலும் தொடர்ந்து பங்கேற்று அவர்கள் அனைவரையும் மெருகேற்றியவர்.
வினாடி வினா எனப்படும் “குவிஸ்” நிகழ்ச்சிகளை தினமலர் தினசரி பத்திரிகை சார்பாக தமிழ்நாடு முழுவதுமாக பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்கள் மத்தியில் மிகச் சிறப்பாக நிகழ்த்தியவர்.
இதுவரை வினாடி வினா எனப்படும் குவிஸ் புரோக்ராம்களை ஆயிரத்து ஐநூறு தடவைகளுக்கும் மேலாக நடத்திக் காட்டியவர்.
இதற்கென தினமலர் நிறுவனம் பேராசிரியர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு “குவிஸ் பிதாமகன்” என்கிற சிறப்புப் பட்டமும் விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளது.
அந்தக் குவிஸ் பிதாமகனுக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு,
உழைக்கும் மூத்த பத்திரிகையாளர்.