”நானே டிரெய்லரை இப்பதான் பார்த்தேன்” – ‘கயிலன்’ தயாரிப்பாளர் சொன்னது!
பி.டி.கே.பிலிம்ஸ் பேனரில் பி.டி.அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகி, வரும் ஜூலை.25—ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘கயிலன்’. இதில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், கு.ஞானசம்பந்தம், மனோபாலா, அனுபமா குமார், அபிஷேக் ஜோசப் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு அமீர், பாடல்கள் இசை : கார்த்திக்ஹர்ஷா, பின்னணி இசை : ஹரி எஸ்.ஆர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘கயிலன்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் ஜூன்.30—ஆம் தேதி காலை நடந்தது.
சிறப்பு விருந்தினர் கே.பாக்யராஜ் டிரெய்லரை வெளியிட்டார். வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் கெளரவ் நாராயணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முதலில் வரவேற்புரை ஆற்றிய பி.டி.அரசகுமார், “சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 1989-ல் சென்னைக்கு வந்து டி.ராஜேந்தரைப் பார்த்தேன். 2001-ல் சினிமா தயாரிக்க நினைச்சு இந்த 2025-ல தான் அது நடந்துருக்கு. டிரெய்லரைப் பார்ப்பதற்கு முன்பு அண்ணன் கே.ராஜன் என்னிடம் ,”இது என்னமாதிரியான சப்ஜெக்ட் படம்” என்று கேட்டார். தெரியலண்ணே.. நானே இப்பதான் டிரெய்லரைப் பார்க்கிறேன். ஒரு நாள் கூட ஷூட்டிங் போனதில்லை. ஏன்னா டைரக்டர் மேல அவ்வளவு நம்பிக்கை. அவரு வற்புறுத்திக் கூப்பிட்டதால கடைசி நாள் ஷூட்டிங்கனைக்கு மட்டும் போனேன்” என ஓப்பனாகப் பேசினார்.
இசையமைப்பாளர்கள் இருவரும் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். டைரக்டர் மேல் நம்பிக்கை வைத்து ஷூட்டிங்கிற்கே போகாத அரசகுமார் குறித்து ஆச்சர்யமாக பேசினார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
”ஒரு படத்திற்கு கதை எழுதுவதில் ஆரம்பிக்கும் போராட்டம், அந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வரை இருக்கும். இந்தப் படத்தின் இயக்குனர் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் இந்த மேடையில் நிற்கிறார்” என்றார் இயக்குனர் கெளரவ் நாராயணன்.
கு.ஞானசம்பந்தம்,
“விருமாண்டியில் மதுரை வட்டார பேச்சு வழக்கிற்காக கமலுக்கு உதவியாக இருந்தேன். அந்தப் படத்தில் நடிக்கிறீர்களா? என கமல் கேட்ட போது, இது மாடு பிடிக்கிற படமாச்சே, எனக்கு சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன். அதுக்கு கமல், “நான் மாடு பிடிக்கிறேன், நீங்க மைக்கைப் பிடிங்கன்னு சொன்னார். எனக்கும் செட்டாகிருச்சு. இப்படத்தின் முன்னோட்டத்திலேயே கதை இருக்கு. யார் அந்த கயிலன்? அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது”.
ஹீரோயின் ஷிவதா,
“வருசத்துக்கு ஒரு படம் தான் தமிழில் நடிக்கிறேன். இருந்தும் மீடியாக்கள் என்னை தொடர்ந்து ஆதரிக்கின்றீர்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்”.
கே.ராஜன்,
“படத்தின் முன்னோட்டம் ஆங்கிலப் படங்களைப் போல உள்ளது. எடிட்டிங், கேமரா, ரீரிக்கார்டிங் எல்லாமே சிறப்பு. படமும் சிறப்பாக இருக்கும்”.
டைரக்டர் அருள் அஜித்,
“என்னை நம்பி பணம் போட்டது மட்டுமல்லாமல், எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்த தயாரிப்பாளர் அரசகுமாருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தில் நமக்கு வாய்ப்பு தருகிறார்கள். அந்த வாய்ப்பு தான் நம் வாழ்க்கை. கயிலன் என்றால் தவறு செய்யாதவன், சாதிப்பவன், நிலையானவன் என்று அர்த்தம். சங்ககால தமிழ்ச் சொல் இது”.
கே.பாக்யராஜ்,
’இப்படத்தின் சாராம்சமே போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது தான். எங்க டைரக்டரின் முதல் படமான 16 வயதினிலே படத்தை ஆரம்பிக்க எவ்வளவு போராட்டம், அதே போராட்டம் தான் கிழக்கே போகும் ரயில் படத்திற்கும். இந்தப் படத்தின் இயக்குனர் அருள் ஐடி கம்பெனி வேலையவிட்டு, பல போராட்டங்களுக்குப் பிறகு இப்படத்தை டைரக்ட் பண்ணியுள்ளார். அவருக்கு ஆதரவாக இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்”.
— மதுரை மாறன்