பரந்தூர் ஓர் பாலைவனம் அல்ல ! விமான நிலையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு !
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கரூர் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்த அன்னலெட்சுமி என்பவர், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இங்கு தொடுத்த வழக்கை அப்படியே சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்கை தொடுத்த அன்னலட்சுமியிடம் பேசினோம். “முதலைப்பட்டி ஏரி மீட்பு போராட்டத்துல எங்க அப்பா வீரமலையும் அண்ணன் நல்ல தம்பியும் வெட்டி கொல்லப்பட்டாங்க. அன்று முதல் தொடர்ந்து பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறேன். அந்த வகையில், பரந்தூர் விமான நிலையத்தால் சுற்று சூழலுக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்து சொல்லி அந்த திட்டத்திற்கு தடை விதிக்கனும்னு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன்.
சென்னை விமான நிலையம் என்பது நான் உட்பட அனைத்து மாவட்ட மக்களும் பயன்படுத்தக் கூடியது . மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது அமையவுள்ள இடமானது இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறும் வகையில் இருக்கக் கூடாது என்கிற மூன்று பிரதான காரணங்களை எழுத்து மூலமாக சான்று அளித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் பதிமூன்று கிராமங்களை அழித்து வரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிராக பொது நல மனு ஒன்றை 09-06-2025 அன்று தாக்கல் செய்தேன்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் TIDCO தயாரித்த படிவம் ஒன்றில் தமிழக அரசு தனது கட்டாய கடமைகளை மறந்தும், உண்மைகளை மறைத்தும், தவறான தகவலை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டி திட்டத்தை தற்போது உள்ள நிலையிலேயே நிறுத்த வேண்டியும், பரந்தூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினரை வெளியேற்ற வேண்டியும் இப்பொதுநல மனுவை தாக்கல் செய்தேன்.
எனது மனுவில் எந்த பிழையும் இல்லை என்ற போதும் இப்பொதுநல மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரிக்க முடியுமா எனும் தீர்வை காண 26-06-2025 அன்று நீதியரசர் எஸ். எம். சுப்ரமணியம் அவர்களின் தலைமையிலான முதன்மை அமர்வு விசாரித்தது.
இறுதியில்,
- The party-in-person, after arguing the matter for some time, made a submission that she may be permitted to file the present case before the Principal Seat.
- In view of the said submission, Registry is directed to return the papers presented by the party-in-person enabling her to file it before the principal seat if she has chosen to do so. என, இப்பொதுநல வழக்கை அப்படியே திரும்பப் பெற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் தகவல் கேட்டு அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கும் விரைவாக பதில் வந்து சேர்ந்திருக்கிறது. அடுத்த கட்டமாக நானே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட இருக்கிறேன்.” என்கிறார், அன்னலெட்சுமி.
அன்னலெட்சுமிக்கு ஆதரவாக, இவருடன் இணைந்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் வை.தங்கவேல், பரந்தூர் திட்டம் தொடர்பாக பல்வேறு தகவல்களை சொல்கிறார். அவரிடமும் பேசினோம். “ தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் TIDCO. வெளியிட்ட, பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்தான மார்ச் 2024 முன்மாதிரி சாத்தியக்கூறு அறிக்கையில், நீர் நிலைகளின் முக்கியத்துவத்தை பிரதானப் படுத்தும் ஈர நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் , 2010 & 2017 மற்றும் உயிர் பல்வகைமை சட்டம், 2002 மற்றும் வன (உயிர்) விலங்கு பாதுகாப்பு சட்டம்- 1972 மற்றும் விவசாயத்தின் அருமைகள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் குறிப்பாக சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் குறித்தான தீர்ப்பு 2020 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய கோட்பாடுகளை, சட்டமன்றத்தின் மேலாதிக்கத்திலிருந்து பாதுகாத்தல் குறித்தான தீர்ப்பு 1973 மற்றும் தனி மனித மற்றும் அரசின் கட்டாய கடமைகளை பிரதானப்படுத்தும் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் ஆகியவை இடம் பெறவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து, இது சட்ட விதி மீறல்கள் ஆகும்.
எனவே, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ஒத்திவைக்க அல்லது நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் TIDCO மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகிய இருவருக்கும் ஓர் உத்தரவு அல்லது சுற்றறிக்கை பிறப்பிக்கும் படி வேண்டுகோள் விடுத்து குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை செயலாளர் (கேபினட்), புது டெல்லி, தமிழக ஆளுநர், மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் தமிழகத்தின் தலைமை செயலாளர் ஆகியோருக்கு விரிவான மனு ஒன்றை ஜூலை-01 அன்று அனுப்பி வைத்திருக்கிறேன்.
நாம் மேலே முன் வைத்த சட்ட விதிகளை முறையாக பின்பற்றினால், 1425 ஏக்கர் நீர் நிலைகளை அழித்து ஒரு திட்டத்தை கொண்டு வருவது என்பது அதாவது 100-க்கு 26.5 சதவிகிதம் நீர் நிலைகள் அழிப்பு என்பது எக்காலத்திலும் சாத்தியம் கிடையாது.
பதிமூன்று கிராமங்களுக்கு தமிழக அரசு வைத்திருப்பது பரந்தூருக்கு நான்கு, வளத்தூருக்கு இரண்டு, அக்கமபுரத்துக்கு இரண்டு மற்ற கிராமங்களுக்கு ஒன்று என மொத்தம் பதினெட்டு வரைபடங்கள். இவை அனைத்தும் கொத்து கொத்தாக நீர் ஆதார நிலங்கள் & நீர் நிலைகளை பிரதிபலிக்கின்றன.
ஆதலால், இந்தியாவின் மற்றும் தமிழகத்தின் முதன்மையானவர்கள் இந்த கோரிக்கையை பரிசீலித்து நிச்சயம் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தடுத்து நிறுத்துவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ” என்கிறார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளை செய்யப் போகிறார்களா? யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
— கலைமதி