‘3 பி.எச்.கே.’ வெற்றிக்கு நன்றி சொன்ன நிகழ்வு! சரத்குமார் கொடுத்த ஸ்வீட் ஷாக்!
‘சாந்தி டாக்கீஸ்’ அருண் விஸ்வா தயாரிப்பில் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த 04—ஆம் தேதி ரிலீசானது ‘3 பி.எச்.கே’. நடுத்தர வர்க்கத்தின் சொந்த வீடு கனவை திரை மொழியில் அருமையாக பேசியிருந்தார் டைரக்டர் ஸ்ரீகணேஷ். இதனால் அந்த வர்க்கத்தின் பேராதரவுடன் ‘3 பி.எச்.கே’. பெரிய வெற்றியைப் பெற்றதால், படத்திற்கு ஆதரவாக இருந்த மீடியாக்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொன்ன நிகழ்வு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.07—ஆம் தேதி நடந்தது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்விஸ்வா, டைரக்டர் ஸ்ரீகணேஷ், படத்தின் ஹீரோக்களான சித்தார்த், சரத்குமார், ஹீரோயின்களான மீத்தா ரகுநாத், சைத்ரா, சரத்குமாரின் மனைவியாக நடித்த தேவயானி மற்றும் படத்தில் பணிபுரிந்த கேமராமேன்கள், மியூசிக் டைரக்டர் அம்ரித் ராம்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசும் போது,
“ராம் சாரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து எனது முதல் தயாரிப்பான ‘மாவீரன்’ மூலம் கோலிவுட்டில் என்னை அடையாளம் காட்டிய சிவகார்த்திகேயன் சாருக்கு என்றென்றும் நன்றி. அந்தப் பட விசிட்டிங் கார்டு தான் இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தெரிந்து கால்ஷீட் கொடுத்தார்கள். இப்போதுள்ள 35 வயது நடக்கும் சரத் சாருக்கு மிகவும் நன்றி. இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கிய மீடியாக்களுக்கும் மக்களுக்கும் எனது நன்றி” என்றார்.
ஹீரோயின்கள் இருவருமே இந்தப் படம் மூலம் நடுத்தர குடும்பங்களின் அன்பைப் பெற்றதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தனர். அதே போல் முதல் படமே தனக்கு பெரிய அடையாளத்தையும் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றதை நெகிழ்ச்சியுடன் பேசினார் மியூசிக் டைரக்டர் அம்ரித் ராம்நாத்.
சித்தார்த் பேசும் போது,
“இந்தப் படத்தின் கரு தான் ஹீரோ. எனது 40-ஆவது படமாக இது அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் என்ன உணர்வுடன் படத்தை எடுத்தோமோ, அதே உணர்வு மக்களுக்கும் இருந்ததால் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. தயாரிப்பாளர் அருண்விஸ்வா, தனது குழந்தையைப் போல இப்படத்தைப் பார்க்கிறார். இது எங்கள் படமல்ல, உங்கள் படம்” என்றார்.

”படம் ரிலீசானதும் பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் சென்ற போது, தாய்மார்களும் பெரியவர்களும் என் மீது அன்பு மழை பொழிந்தது எனது சினிமா வாழ்க்கையில் இப்ப தான் நடந்துள்ளது” என்றார் தேவயானி.
டைரக்டர் ஸ்ரீகணேஷ்,
“இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீடியோகாலில் வாழ்த்திய கார்த்தி, உட்பட் பல பிரபலங்களுக்கும் இந்தக் கதையை தயாரிப்பாளர் அருண் விஸ்வா சாரிடம் சொல்லி எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்த பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா சாருக்கும் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அதே போல் சீனியர் நடிகர் சரத் சார், மேடம் தேவயானி, ஹீரோ சித்தார்த் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கும் நன்றி”.
சரத் கொடுத்த ஸ்வீட் ஷாக்!
தயாரிப்பாளர் அருண் விஸ்வா குறித்து மிகவும் பெருமிதமாகவும் உயர்வாகவும் பேசிய சரத்குமார், அடுத்தும் இவரின் கம்பெனியில் இதே கூட்டணி நடிக்கப் போவதையும் சூசகமாக குறிப்பிட்டார். தனது மகன் பிரபுவாக நடித்ததால் மேடையிலும் சித்தார்த்தை ”பிரபு” என்றே குறிப்பிட்ட சரத்குமாரின் பேச்சில் கலகலப்பும் உற்சாகமும் இருந்தது.

“பிரஸ் ஷோ முடிந்து வெளியே வந்ததும் மீடியா நண்பர்களின் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம் தெரிந்தது. படத்தின் சில குறைகளைச் சொன்னார்களே தவிர, யாருமே நெகட்டிவாக சொல்லவில்லை. அப்பவே எனக்குத் தெரிந்துவிட்டது, படம் கண்டிப்பாக ஹிட்டாகும்னு. இந்த மேடையில் மியூசிக் டைரக்டர் அம்ரித் ராம்நாத் பேசும் போது என்னுடைய வாட்ச் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார். எனவே ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து எனது வாட்ச்சை அவருக்கே பரிசளிக்கிறேன்” எனச் சொன்னபடி, கையில் கட்டியிருந்த வாட்சைக் கழட்டி அம்ரித்துக்கு அன்புப் பரிசாக வழங்கி ஸ்வீட் ஷாக் கொடுத்தார் சரத்குமார்.
— மதுரை மாறன்