காவல்துறையில் காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்கள் ஆயுதப்படையில் ஒப்படைப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் தேவையில்லாத காகிதங்கள் ஆகியவற்றை அவரவர்கள் தத்தம் காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவுகளில் உள்ள பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்களை எடை போட்டு மாவட்ட ஆயுதப்படையில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதத்தாள்கள் மொத்தமாக 21 மெட்ரிக் டன் மற்றும் 220 கிலோ சேகரிக்கப்பட்டது.
மேற்படி சேகரிக்கப்பட்ட பழைய காகிதங்களை புகழூர் காகித ஆலைக்கு அனுப்பி, அதற்கு பதிலாக Xerox பேப்பர் பண்டல்கள் வாங்குவதற்கு அங்குள்ள அதிகாரிகளிடம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசி பழைய காகிதங்களையும் ஆலையில் ஒப்படைத்து, அதன் எடை மதிப்பிற்கு ஏற்றவாறு 1220 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டுள்ளது.
காகித ஆலையிலிருந்து பெறப்பட்ட 1220 Reams பேப்பர் பண்டல்கள், அவரவர் கொடுத்த பழைய காகிதத்திற்கு ஏற்றார் போல் பிரித்துக் கொடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்.
இதுபோன்ற நடவடிக்கை, திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய முயற்சியினால் செயல்படுத்தப்பட்டு, Xerox பேப்பர் தட்டுப்பாட்டை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல இனிவரும் காலத்திலும் இதே நடைமுறையைக் கடைபிடிக்கும்பட்சத்தில் பழைய பேப்பர் காகிதங்களை அப்புறப்படுத்துவதற்கும், அதன் அடிப்படையில் Xerox பேப்பர் பெற்று அதன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும் இம்முறை வசதியாக இருக்கும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், இதனால் அலுவலகங்களை சுத்தமாக வைப்பதற்கும், இடப்பற்றாக்குறையைப் குறைப்பதற்கும் ஏதுவாக உள்ளது என அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.