“தந்தை பெரியாரை விடுதலை செய்யுங்கள்” – ‘விசிறி சாமியார்’ வேண்டுகோள் !
“தந்தை பெரியாரை விடுதலை செய்யுங்கள்” –
‘விசிறி சாமியார’; வேண்டுகோள் !
பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினரால் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள தந்தை ஈவெரா பெரியாரை அக் கூண்டை அகற்றி விடுதலை செய்யுங்கள் என ‘விசிறி சாமியார’; வி. முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் ஈ.வெ.ரா. சிலை 1969-ம் ஆண்டு தந்தை பெரியார் முன்னிலையில் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் சில தினங்களுக்கு முன்பு அச் சிலையை காவல் துறையினர் கூண்டு வைத்து அடைத்தனர். அதைத் தடுக்க முயன்ற திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி கூண்டை அகற்றக்கோரி வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ‘விசிறி சாமியார்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் முருகபக்தரான வி. முருகன் அடிகளார் கலந்து கொண்டு, தந்தை பெரியார் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கூண்டை அகற்றி பெரியாரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தனது கைப்பட எழுதிய மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தார்.
“நல்ல கருத்துக்களும், நல்ல உழைப்பும் இருக்கும் மனிதர்களுக்கு சிலை வைப்பது மரபு. அச் சிலைகளைப் பார்த்து மக்கள் தங்களை நெறிப்படுத்தி பண்போடு வாழ்வார்கள். அந்த அடிப்படையில் தந்தை பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே (கூண்டை அகற்றி) அவரது சிலைக்கு விடுதலை தந்து மக்கள் மனதில் ஆனந்தம் ஏற்படுத்த வேண்டும் என மிக மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்,” என் அம் மனுவில் ‘விசிறி சாமியார்’ முருகன் கூறியுள்ளார்.
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி நீலமேகம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் கோ.உதயக்குமார், காங்கிரஸ் மாநகர செயலாளர் அலாவுதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுல் ஆபிதீன், ஐஜேகே மாவட்ட தலைவர் சிமியோன் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.