திருநங்கைகள் போராட்டம்… சமூக நல அலுவலரிடம் வேலைவாய்ப்பு கேட்டு மனு..! அங்குசம் மின்னிதழின் பிரத்யேகப் பேட்டிகள்
திருநங்கைகள் போராட்டம்… சமூக நல அலுவலரிடம் வேலைவாய்ப்பு கேட்டு மனு..! அங்குசம் மின்னிதழின் பிரத்யேகப் பேட்டிகள்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களை கட்டாயப்படுத்தி பணம் பறிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனடிப்படையில் அங்குசம் மின்னிதழ் செய்திகள் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று இரவு காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இனி இதுபோல் நடக்கக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் சமூக நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை, மேலும் தங்குமிடம் வழங்கப்படுவதில்லை என்றும் தொடர்ந்து நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து திருநங்கைகளுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது குறித்து சமூக நலத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
வாழ்வாதாரத்திற்கு வழி இன்றியே சிலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கும் சமூகத்தில் சம உரிமை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
மேலும் அங்குசம் மின் இதழுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கருத்து கூறிய திருச்சி காவல் ஆணையர் லோகநாதன், திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு காவல்துறையும் சமூகநிலை துறையுடன் இணைந்து பிரத்தியேக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார்.
தொடர்ச்சியாக அங்குசம் சமூகநலத்துறை அலுவலரையும் தொடர்பு கொண்டது ; அவர், திருநங்கைகளுக்கான வாழ்க்கை முன்னேற்றத்திற்கான திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவோம், மற்றும் சிலரின் விலாசங்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது அவர்களை கண்டறிவதில் சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும். கூறியிருந்தார்.
இந்நிலையில் மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்களும், தங்களின் உரிமையை கேட்டு போராடி இருக்கின்றனர். இதில் அரசு உரிய கவனம் செலுத்தினால். அவர்களுடைய பொருளாதாரம் உயரும், வாழ்க்கையும் முன்னேற்றமடையும்.