அங்குசம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் இலக்கிய விழா !
அங்குசம் அறக்கட்டளை சார்பில், “யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் ஆண்டு நிறைவு விழா” மற்றும் இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் சாதனை மனிதர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா ஜூலை-20 அன்று திருச்சி கலையரங்கம் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்ட அரங்கிற்கு திருச்சியின் அடையாளம் மறைந்த கவிஞர் நந்தலாலாவின் பெயர் சூட்டியிருந்தார்கள்.
அங்குசம் சமூக அறக்கட்டளையின் தலைவர் ஜெ.டி.ஆர். தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்நிகழ்வின் நோக்கம் குறித்து தலைமையுரையாற்றினார் யாவரும் கேளீர் அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன்.
யாவரும் கேளீர் இலக்கிய மலரை வெளியிட்டும் விருதுபெறும் சாதனை மனிதர்களை பாராட்டியும் வாழ்த்துரை வழங்கினார் மேநாள் மாவட்ட நீதிபதி விடியல் குகன் (எ) கு.கருணாநிதி எம்.ஏ. எம்.எல். இலக்கிய மலரின் முதல்படியை பெற்றும் சாதனை மனிதர்களை வாழ்த்தியும் விழாப்பேருரையாற்றினார் மூத்த பத்திரிகையாளரும் இலங்கை தமிழர் வாரிய உறுப்பினருமான கோவி.லெனின்.
எளிய கவிதைகளின் வழியே சமூக விழிப்புணர்வாற்றிவரும் ஆங்கரை பைரவி; 2010 ஆம் ஆண்டிலேயே தான் பணியாற்றிய பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய தலைமையாசிரியை சுமதி; தனித்து வாழும் பெண்களின் வாழ்வில் நம்பிக்கையூட்டும் காக்கும் கரங்கள் அமைப்பின் இயக்குநர் திலகா; சிறார் இலக்கியத்தின் வழியே பிஞ்சு நெஞ்சங்களில் நல் சிந்தணைகளை விதைக்கும் கார்த்திகா கவின்குமார்; பொன்மலை பணிமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னும் இலக்கிய பணியில் தடம்பதிக்கும் துரை.வெங்கடேசன்; சேவை மனப்பான்மையுடன் தனித்துவாழும் முதியோர்களின் நலன்சார்ந்து இயங்கி நல் மனிதர்களை சம்பாதித்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர் செல்வக்குமார் ஆகிய ஆறு பேருக்கு சாதனை மனிதர்களுக்கான பாராட்டு சான்றிதழையும் பொற்கிழியையும் வழங்கி சிறப்பித்தார் இலக்கிய வாசல் அமைப்பின் தலைவர் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி.

பெரியார் விருதாளர் தி.அன்பழகன், ரா.தங்கையா, விடியல் வினோத் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆய்வாளர் இரேவதி ஜெ.டி.ஆர். நிகழ்வை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், பேராசிரியர் ரெ.நல்லமுத்து, பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

திருச்சி மாவட்ட நலப்பணிக்குழுவின் தலைவர் சேவை கோவிந்தராஜன், பத்மஸ்ரீ சுப்புராமன், ஓய்வுபெற்ற ஆசியர் பீட்டர் நடேசன், உள்ளிட்டு பல்வேறு ஆளுமைகளால் நிரம்பியிருந்தது, கவிஞர் நந்தலாலா பெயர் தாங்கிய கூட்டரங்கம்.

கலைக்காவிரி நுண்கலை கல்லூரியின் குரலிசைக் கலைஞர்கள் ஆகாஷ், நவீன் பிரகாஷ் ஆகியோரின் பறையிசையும், பேராசிரியர் சதீஷ்குமாரின் வரிகளில் வள்ளுவனின் புகழ்பாடும் “உலகாளும் வள்ளுவம்” பாடலும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

சாதனை மனிதர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழாவில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் ஆகியோரின் “துணிப்பையை எடுப்போம்” என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலக்கிய மலர் அன்பிதழாக வழங்கப்பட்டதோடு, இரவு உணவும் தந்து நிகழ்வை நிறைவாக்கியிருந்தார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.