தமிழக வரலாற்றில் முதல் முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றவாளி கைது !
தமிழகத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்துபவர்கள், குண்டர்கள், பாலியல் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், ஆக்கிரமிப்பு செய்து நிலத்தை அபகரிப்பவர்கள் போன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதைப்போலவே, நிதி மோசடியில் ஈடுபடுபவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க வகை செய்யும் வகையில் கடந்த ஜூன்-08 ஆம் தேதியிட்ட உத்தரவில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், நிதிமோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிரடி மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த அறிவிப்பின்படி தமிழகத்திலேயே முதல்முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொருளாதாரக்குற்றவாளி ஒருவரை கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறார்கள், விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு போலீசார்.
ராஜபாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய மரக்கர் பிரியாணி நிறுவன உரிமையாளர்கள், ட்ரூல் டோர் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் கேத்தல் கஃபே போன்ற நிறுவனங்களை தொடங்கியவர்கள் மீது பொதுமக்கள் அளித்த குற்றச்சாட்டின் படி சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கின் குற்றச்சாட்டில் முதலீட்டாளர்களுக்கு 10% லாபம் மற்றும் மாத வருமானம் ரூ.50 ஆயிரம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா முழுவதும் 21 மாதிரி விற்பனை நிலைய கிளைகளை திறந்து உளளனர்.
பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா முழுவதும் மொத்தம் 239 நபர்களிடமிருந்து தலா ஒரு முதலீட்டாளர்களிடம் மட்டும் இருந்து, ரூ.5,18,000 வசூலித்து, மொத்தம் ரூ.12 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். பின்னர் சுதாரித்து கொண்ட முதலீட்டாளர்கள் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள விஜயரங்கபுரத்தைச் சேர்ந்த கங்காதரன், சங்கர நாராயணன் மற்றும் அவரது மனைவி மரியநாயகம், ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட கங்காதரனை 07.07.2025 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்து விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தார்.
பின்னர் இந்த வழக்கு சம்பந்தமாக தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி 03-08-2025 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறைச்சாலையில் குற்றவாளி அடைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையானது, தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் ஒரு பொருளாதார குற்றவாளி இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. இது போன்ற கடுமையான நடவடிக்கையால் பொருளாதார குற்றங்கள் குறையும் என்கிறார்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.0
— மாரீஸ்வரன்.