அங்குசம் பார்வையில் ‘நாளை நமதே’
தயாரிப்பு : ’ஸ்ரீதுர்கா கிரியேஷன்ஸ்’ வீ.ரவிச்சந்திரன். வெளியீட்டில் பேருதவி: ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா. இயக்கம் : வெண்பா கதிரேசன். நடிகர்-நடிகைகள் : மதுமிதா[புதுமுகம்] ராஜலிங்கம், டைரக்டர் வேல்முருகன், மாரிக்கண்ணு, முருகேசன் கோவை உமா, ஒளிப்பதிவு : பிரவீன், இசை : வி.ஜி.ஹரிகிருஷ்ணன், எடிட்டிங் : ஆனந்த லிங்ககுமார், ஆர்ட் டைரக்டர் : தாமோதரன், பி.ஆர்.ஓ. : குணா
சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சி தலித் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் கடும் கொந்தளிப்புக்குள்ளாகும் மேலத் தெரு சாதி வெறியர்கள், தலித் சமூகத்திலிருந்து யாரும் போட்டியிடக் கூடாது என அவர்களை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். இதனால் கலெக்டர், உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து தலித் சமூக மக்களுக்கு தைரியமூட்டி போட்டியிடச் சொல்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரும் அம்மக்களிடம் பேசி சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரை போட்டியிடச் சொல்கிறார். அந்த சமூக மக்களும் தியாகிக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அதனால் தியாகியும் இன்னும் சிலரும் வேட்புமனு தாக்கல் செய்ய கிளம்புகிறார்கள். போகும் வழியிலேயே மேலத் தெரு சாதி வெறி மிருகங்கள், தியாகியையும் அவருடன் போகும் சிலரையும் வெட்டிச் சாய்க்கிறார்கள். ஒருவர் மட்டும் வெட்டுக் காயத்துடன் தப்புகிறார். இந்தக் கொடூரத்தால் தேர்தலே ரத்தாகிறது.
அடுத்த சுற்றுப்படி அந்த ஊராட்சி ஆதிக்க சாதிக்கு ஒதுக்கப்படுகிறது. ராமையா என்பவர் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்து தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருக்கிறார். மீண்டும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதும் மீண்டும் சாதி வெறிப் பகை நெருப்பு பற்றி எரிகிறது.
உயிருக்குப் பயந்து தலித் சமூகத்திலிருந்து யாருமே வேட்புமனு தாக்கல் செய்ய அஞ்சுகிறார்கள். இந்த நிலையில் தான் அதே ஊரைச் சேர்ந்த செவிலியர் அமுதா [ மதுமிதா] தனது சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அந்த இளம் போராளியால் ஊராட்சித் தலைவியாக முடிந்ததா? என்பதை 100% அறத்துடன், நேர்மைத் திறத்துடன் இயக்குனர் வெண்பா கதிரேசன் பதிவு செய்திருக்கும் உன்னத சினிமா தான் இந்த ‘நாளை நமதே’.
இப்போதைய டிஜிட்டல் இந்தியா, புண்ணாக்கு இந்தியா, புடலங்காய் இந்தியா என சங்கிக் கும்பல் வீண் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கு. ஆனால் இந்தியாவின் மூத்த குடிமகனான முன்னாள் ஜனாதிபதி மேன்மைமிகு ராம்நாத் கோவிந்த் அவர்களையும் இப்போதைய ஜனாதிபதியான பழங்குடியினத்தைச் சேர்ந்த மேன்மைமிகு திரெளபதி முர்மு அவர்களையும் கோவிலுக்கு வெளியே நிறுத்தி அவமதிக்கும் சனாதன வெறியர்கள், சாதி வெறி மிருகங்கள் நடமாடும் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில், இப்படியொரு சினிமா நமது தமிழ்நாட்டிலிருந்து வெளியாகியிருப்பது பாராட்டுக்குரியது, பெருமைக்குரியது. இயக்குனர் வெண்பா கதிரேசன் மிகவும் போற்றுதலுக்குரிய சிந்தனையாளர், படைப்பாளர்.
கதையின் நாயகியாக, தீரமிகு போராளியாக, பெரியாரிஸ்டாக அமுதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுமிதா புதுமுகம் என்பதை நம்பவே முடியவில்லை. அப்படியொரு அபார நடிப்பு. உடல்மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் அந்தப் புள்ள பிரமிக்க வைத்துவிட்டது. “எனக்கு சாமியும் இல்ல, சாதியும் இல்ல” என தாயிடம் சொல்லும் காட்சி, வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஆதிக்க சாதி வெறியன் முன்பாக சேரை இழுத்துப் போட்டு கம்பீரமாக உட்காரும் காட்சி, “நான் தேர்தல்ல நிக்குறது ஜெயிக்குறதுக்கு இல்ல, என்னோட ஒத்த ஓட்டைப் போட்டாவது தேர்தலை நடத்திக் காட்டுவேன்” என சாதி வெறியர்களிடம் சவால் விடும் காட்சி, “நான் தேர்தல்ல நிக்குறது உங்களுக்குப் பிரச்சனை இல்ல, நானெல்லாம் தேர்தல்ல நிக்கலாமான்றது தான் பிரச்சனை” என தனது மக்களிடம் ஆவேசமாக கேட்கும் காட்சி, என படம் முழுவதுமே மதுமிதாவின் நடிப்பு கண்கொள்ளாக் காட்சி. அந்த இளம் பெண்ணின் நடிப்புக் கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது.
படத்தில் மதுமிதாவின் அம்மாவாக நடித்திருக்கும் பெண்மணி, வீரபாண்டியாக நடித்திருப்பவர்,[ ராஜலிங்கம்னு நினைக்கிறோம்} டைரக்டர் வேல்முருகன் ஆகிய மூவர் தான் நமக்கு ஓரளவு தெரிந்த முகங்கள். மற்ற அனைவருமே அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் அனைவரையுமே திரையில் பளிச்சிட வைத்துள்ளார் இயக்குனர்.
’சிவதாணுபுரம் ஊராட்சி தலித்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என டிவியில் அறிவிக்கப்பட்டதும் சலீரென டி.வி. உடைக்கப்படும் முதல் காட்சியிலேயே நம் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டார் இயக்குனர் வெண்பா கதிரேசன். பெண்கள் தீபாராதனை காட்டி வழிபடும் நம்ம குலசாமி வழிபாடு, அமுதாவிற்கு பெண் போலீஸ் பாதுகாப்பு, அமுதா வீட்டில் அய்யா பெரியார் படம், கம்யூனிஸ்ட் தோழரின் எண்ட்ரி, ஒரு காட்சியில் கருப்பு-சிவப்பு சேலையில் மைநூட்டாக அமுதாவைக் காட்டியிருப்பது, அமுதாவுக்காக பாதிரியார் ஒருவரின் தீவிரப் பிரச்சாரம், சுதந்திர தினத்தன்று கொடியேற்றியதற்காக பக்கத்து ஊராட்சித் தலைவியின் வலது கையை வெட்டும் கொடூரம், காம இச்சைக்கு சாதி பார்க்காத கேவலம், அவள் கொடுக்கும் தண்ணீரைத் தீட்டாக நினைக்கும் சாதி வெறி ராமையா, தலைவர் கலைஞர் ஆட்சியில் மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி தேர்தலை நடத்திய அப்போதைய மதுரை ஆட்சியர் உதயசந்திரன் போல இப்படத்தில் வரும் மாவட்ட ஆட்சியர் என காட்சிக்கு காட்சி ஜொலிக்கிறார் வெண்பா கதிரேசன்.
“போராடணும், அடிவாங்கணும், ஆனா பின்வாங்கக் கூடாது” அமுதா சிறுமியாக இருக்கும் போது தியாகி பேசும் வசனம் தான் இந்த நாளை நமதேவின் அடிநாதம், சங்கநாதம். இதுபோல பல காட்சிகளில் வசனங்கள் மூலம் சாதி வெறியர்களின் தலையில் அனலைக் கக்கியுள்ளார் வெண்பா கதிரேசன்.
சிவகங்கை மண்ணின் குணம், மக்களின் வெள்ளந்தி முகம், சாதி வெறி மிருகங்களின் கோரமுகம் இவற்றை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன். அமுதா வேட்புமனு தாக்கல் செய்யக் கிளம்பும் போது வரும் உணர்ச்சிமிகு பாடலிலும் பின்னணி இசையிலும் அசத்திவிட்டார் இசையமைப்பாளர் வி.ஜி.ஹரிகிருஷ்ணன். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் இரண்டேகால் மணி நேரமும் செம க்ரிப்பாக படம் போவதற்கு உழைத்திருக்கிறார் எடிட்டர் ஆனந்த லிங்ககுமார். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணி என்றாலும் அங்கிருக்கும் சில வீடுகள், பஞ்சாயத்து அலுவலகம் இவற்றில் தெரிகிறர் ஆர்ட் டைரக்டர் தாமோதரன்.
படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரனும் இயக்குனர் வெண்பா கதிரேசனும். உருவத்தில் சற்றே உயரம் கம்மியானவராக இருந்தாலும் நேர்மைச் சிந்தனையிலும் அறச்சீற்றத்திலும் இமயத்தைவிட உயர்வாக தெரிந்தார் வெண்பா கதிரேசன். இவருக்கு அருகில் இன்னொரு இமயமாக தெரிந்தார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்.
இந்த ‘நாளை நமதே’ சினிமா நமதே..நமக்கானதே. இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அவசியம் பாருங்கள்.
— மதுரை மாறன்