நாய்க்கு விஷ பிஸ்கட் … கையில் பட்டாக்கத்தி … முகமூடி கொள்ளை கும்பலை தட்டித் தூக்கிய தனிப்படை !
திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளைக்கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். காவலுக்கு இருக்கும் நாய்களுக்கு விஷ பிஸ்கட் போட்டு கொன்றுவிட்டு சுவர் ஏறி குதித்து திருடுவதை பாணியாக வைத்துள்ளனர். கையில் பட்டாக்கத்தியுடன் முகமூடி அணிந்தபடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறது இந்த கும்பல் இதே பாணியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது தனிப்படை போலீசில் வகையாய் சிக்கியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாவட்ட போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் …
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் பகுதிகளில் சோ்ந்த மகாலிங்கம் (74/25), த/பெ. கிருஷ்ண கோனார், களத்துவீடு, தளவாய்பட்டி, மருங்காபுரி, துவரங்குறிச்சி என்பவர் மற்றும் அவரது மனைவியான கமலவேனி (60/25) ஆகியோர் மேற்படி முகவரியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேற்படி மகாலிங்கம் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 08.04.2025-ம் தேதி மேற்படி இருவரும் இரவு 08.40 மணிக்கு வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருந்த போது, முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிந்து ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டினுள் வந்து அவர்களைக் மிரட்டி கட்டிப்போட்டு, மேற்படி கமலவேனி என்பவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க செயின், தோடு மற்றும் மகாலிங்கம் பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ரூ.5000/- த்ததையும் கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளனர். இது சம்மந்தமாக மகாலிங்கம் என்பவர் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக துவரங்குறிச்சி 1.84/2025, / 329(4), 127(2), 309(4) BNS-σότ படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வந்தது.
அதேபோல், பிச்சையம்மாள் (46/25), க/பெ. அமரஜோதி, கோசிபட்டி, மணியங்குறிச்சி, மருங்காபுரி, புத்தாநத்தம் என்பவர் அவரது கணவர் அமரஜோதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மேற்படி முகவரியில் வசித்து வருகிறார். அமரஜோதி விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 06.08.2025-ம் தேதி இரவு 10.45 மணிக்கு மேற்படி பிச்சையம்மாள் மற்றும் அவரது இரு குழந்தைகளும் வீட்டில் உள்ளேயும், இவரது கணவரான அமரஜோதி வீட்டின் வராண்டாவில் கட்டிலிலும் படுத்து உறங்கிகொண்டிருந்தனர். அச்சமயம் முகமூடிகள், கையுறைகள் மற்றும் ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்புறம் வழியாக முன்பக்கம் வந்து அமரஜோதியை அடித்து, கட்டிப்போட்டுவிட்டு, வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்று பிச்சையம்மாள் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 9 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1,00,000/- ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளனர். இது சம்மந்தமாக பிச்சையம்மாள் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் புத்தாநத்தம் காவல் நிலைய குற்ற எண். 244/25, ச/பி 310(2), 333, 127(7), 311, 351(3), 332(b) BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வந்தது.
மேற்படி கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப உத்தரவின் பேரில் மணப்பாறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் K.V. காவ்யா மேற்பார்வையில் 4 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி காவல் ஆய்வாளர்கள் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு தீவரமாக கொள்ளையர்களை கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். கொள்ளை சம்பவத்தின் போது மேற்படி வீட்டின் நாய்களுக்கு விஷம் கலந்த பொருட்கள் கொடுக்கப்பட்டதன் காரணமாக கொள்ளை நடத்த சில நாட்களில் இரண்டு நாய்களும் இறந்துள்ளன. இதன் அடிப்படையிலும் தீவிரமான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், 11.08.2025-ம் தேதி இரவு மேற்படி தனிப்படையினர் துவரங்குறிச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப்பின் முரனாக பதிலளித்துள்ளார். மேலும், அவரை தீவர சோதனை செய்ததில், அவரது பெயரானது குட்டி @ சங்கப்பிள்ளை என தெரியவந்தது.
மேற்படி குட்டி @ சங்கப்பிள்ளை (23), த/பெ. ஆறுமுகம், தெற்கு தெரு, புத்தாநத்தம் என்பவரை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், தான் மற்றும் தனது கூட்டாளிகளான (1) ஹரிஹரன், அரியாணிப்பட்டி, (2) பாலமுருகன், கொட்டாம்பட்டி, (3) ஸ்ரீராம், கொட்டாம்பட்டி, (4) அரவிந்த், கொட்டாம்பட்டி, (5) கரண்குமார், காளப்பட்டி கோவை, (6) முகேஷ் குமார், காளப்பட்டி கோவை, (7) சுபாஷ் சந்திரபோஸ், மடபுரம், (8) அழகேசன், குளத்துப்பட்டி, (9) தர்மராஜ், கருமலை, (10) நவநீதகிருஷ்ணன் @ ராஜ்குமார், நல்லகண்டம் ஆகியோருடன் சேர்ந்து 08.04.2025 மற்றும் 06.08.2025 ஆகிய தேதிகளில் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையடித்த வீட்டில் இருந்த நாய்களுக்கு விஷம் கலந்த மாமிச பொருள் கொடுத்ததையும் ஒப்பு கொண்டுள்ளனர். அதன் பேரில் மேற்படி அனைத்து எதிரிகளையும் கைது செய்து நிலையம் அழைத்து வந்து அவர்கள் துவரங்குறிச்சி கொள்ளை வழக்கில் கொள்ளையடித்த 6 சவரன் தங்க நகைகள், ஒரு இணை வெள்ளி கொலுசு மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்கள். ஆகியவற்றையும், புத்தநத்தம் கொள்ளை வழக்கில் கொள்ளையடித்த ½ பவுன் தங்க தோடு, ரூ. 25,000/- ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேலும், குற்றம் நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட குரங்கு தொப்பிகள், கையுறைகள், இரண்டு பட்டா கத்திகள், நைலான் கயிறுகள், ஒட்டக்கூடிய டேப்புகள், DVR மற்றும் குற்றவாளிகளின் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி கொள்ளையர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தயார் செய்யப்பட்டு வருகிறது.
கொள்ளையர்களில் கரண்குமார், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நவநீதகிருஷ்ணன் (எ) ராஜ்குமார் ஆகியோர்களுக்கு கோயம்புத்தூர் நகரம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் வழிப்பறி, கொள்ளை, கடத்தல் மற்றும் ஆயுத வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், விலங்குளை விஷம் வைத்து கொன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்டப்பிரிவுகளை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இரு வழக்குகளிலும் கொள்ளையர்களை கண்டுபிடித்து வழக்கு சொத்துகளை பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் அலுவலகம் வரவழைத்து வெகுவாக பாராட்டினார்.