மாநில அளவில் பதக்கங்களை வென்ற காவலா்கள்! பாராட்டிய எஸ்.பி!
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களது பணிகளில் திறம்பட செயல்படுவது தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும் திறனாய்வு போட்டியின் 69-ம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டிகள் கடந்த 30.07.2025-ஆம் தேதி துவங்கி 04.08.2025-ஆம் தேதிவரை சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை உயர் பயிற்சியகத்தில் நடைபெற்றது.
மேற்படி திறனாய்வு போட்டிகளில், திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக பங்கேற்று தடய அறிவியல் புலனாய்வு பிரிவில் (Scientific Aids to Investigation Portrait Test) திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் விஜயகுமார் (காவலர் எண் 3025) என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும்,
வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவில் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய இரண்டாம் நிலைக்காவலர் ராம்கி (காவலர் எண். 1786) என்பவர் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கமும், சிறுகனூர் காவல் நிலைய தலைமை காவலர் முருகானந்தம் (காவலர் எண் 1145) என்பவர் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கமும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களிடம் பெற்றனர்.
மேற்படி, மாநில அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டிகளில் பதக்கம் பெற்ற மூன்று காவலர்களின் திறமையினை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., (18.08.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி காவலர்களை ஊக்குவித்தார்.