சூப்பர் சிங்கர் சீசன் 11 – மாகாபா ஆனந்தை மிஞ்சிய மிஷ்கின் !
நீண்ட காலம் கழித்து இந்த சீசனைப் பார்க்கத் துவங்கியிருக்கிறேன். போட்டியாளர்களை சென்னை, டெல்டா, கொங்கு, எங்கும் தமிழ் என்று நான்கு அணிகளாக பிரித்திருக்கிறார்கள். ரியாலிட்டி ஷோக்களுக்கேயுரிய கிம்மிக்ஸ்.
இந்த சீசனின் முக்கியமான வித்தியாசம் என்னவென்று பார்த்தால், ஜட்ஜ்களில் ஒருவராக இயக்குநர் மிஷ்கின் இணைந்திருக்கிறார். இசைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் எந்தவொரு ரியாலிட்டி ஷோவையும் பார்க்க முடியாது.
இளையராஜாவுடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் மிஷ்கின் பணியாற்றியிருக்கிறார். அதுவே போதும் என்று அவர் நினைக்கிறார். அது தவிர அவரே ஓர் இசையமைப்பாளர். நல்ல இசை ரசிகர். போதாது?
விஜய் டிவி ஷோக்களில் பிரியங்கா இருந்தால் அங்கு ஹைடெசிபலில் சத்தம் இருக்கும். இந்த ஷோவில் பிரியங்காவையும் மீறி அலப்பறைகள் செய்கிறார் மிஷ்கின். பெரும்பாலோனோரை அடேய். வாடா போடா என்று அழைத்து அநியாயம் செய்கிறார்.
மற்றவர்களை கலாய்க்கும் மாகாபா ஆனந்த் கூட மிஷ்கினின் அலப்பறைக்கு முன்னால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.
உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் எல்லாம் இந்த நிகழ்ச்சியின் ஆஸ்தான வித்வான்கள். புதிதாக தமனும் சேர்ந்திருக்கிறார். மிஷ்கினின் அலப்பறைக்கு ஒரளவிற்கு கவுன்டர் தந்து அடக்கும் திறமை தமனுக்கு இருக்கிறது.
ஆக ஜட்ஜ் பேனல் என்பது சம்பிரதாயமான அட்வைஸ்களைத் தாண்டி காலேஜ் ரீயூனியன் போல கலாட்டாவாக இருக்கிறது. இவர்களின் நடுவில் ஒரு வார்த்தை பேசுவதற்குள் உன்னி கிருஷ்ணன் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.
நான் பார்த்த பழைய சீசன்களில் போட்டியாளர்கள் பவ்யமாக, பயந்து பயந்து வருவார்கள். சிறப்பாகப் பாட முயற்சி செய்து தடுமாறி ஜட்ஜ்களிடம் குட்டும் பாராட்டும் வாங்குவார்கள்.
ஆனால் இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்கள் உள்ளே நுழையும் போதே பயங்கர தன்னம்பிக்கையுடன் வருகிறார்கள். போதாதற்கு நன்றாகவே பாடுகிறார்கள்.
தர்ஷனா என்று ஓர் இளம் பெண். ‘காக்க காக்க’ படத்திலிருந்து ‘தூது வருமா?’ என்று பாடலைப் பாடினார் பாருங்கள். அட்டகாசம். என்னவொரு attitude?
பாடகர் என்பதைத் தாண்டி ஃபர்பார்மர்களாக இருக்கிறவர்கள் அதிகமாக கவனத்தைக் கவர்கிறார்கள். அந்த வகையில் தர்ஷனா ஒரு முக்கியமான போட்டியாளராக இருப்பார்.
தவசீலி என்கிற வித்தியாசமான பெயரைக் கொண்ட பெண்ணும் அருமையாகப் பாடினார்.
இந்த launching ceremony நிகழ்ச்சியில் விஜய் ஆன்டனி, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஷான் ரோல்டன் என்று பல இசையமைப்பாளர்களின் பாடல்கள் பாடப்பட்டன.
அத்தனையும் அட்டகாசம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் – நெற்றியில் பட்டையைப் போட்டுக் கொண்டு கிராமத்தான் தோற்றத்தில் ஓர் இளைஞர் உள்ளே வந்தாரய்யா. பெயர் சரண்.
பூவையார் என்றொரு சிறுவன் கடந்த சீசன்களில் பாடினான் அல்லவா? அவனுடைய அடல்ட் வெர்ஷன் மாதிரி இருக்கிறார் சரண்.
‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ என்று ‘சின்னத்தாயி’ படத்திலிருந்து ஒரு பாடலை சரண் பாட ஆரம்பிக்கும் போது ஒட்டுமொத்த சூழலே மாறிப் போனது. மனதிற்குள் திடீரென்று ஏஸி காற்று நுழைவதைப் போன்ற பிரமை.
இளையராஜா என்கிற கலைஞன், தமிழ் சமூகத்தின் ஆன்மாவுடன் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறான் என்பதற்கான உதாரணம் இது.
நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்தின் சூழல் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பித்தவுடன் எங்கோ ஆற்றங்கரையில் கயிற்றுக்கட்டிலின் மீது படுத்திருப்பதைப் போன்ற உற்சாகம் வந்து விட்டது.
இந்தப் பாட்டோடு, ‘சிங்களத்து சின்னக் குயிலே’, ‘வளையோசை கலகலவென’ என்று மூன்று இளையராஜா பாடல்கள் பாடப்பட்டன. மற்றவர்கள் பாடிய அனைத்தையும் ஓவர்டேக் செய்து இந்தப் பாடல்கள் மட்டும் காதில் தனியாக ஒலித்தன. ராஜா மேஜிக்.
அதிலும் வளையோசை பாடலின் துவக்க இசை ஒலித்த போதே எனக்கு புல்லரித்தது. எத்தனையோ முறை கேட்ட பாடல். ஆனால் அதன் புத்துணர்ச்சி இன்னமும் கூட குறையவில்லை.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சீசனில் வந்திருக்கிற பெரும்பாலான போட்டியாளர்கள், இன்னமும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்குள் பல திரையிசைப் பாடல்களைப் பாடியிருப்பார்கள். அத்தனை ஃபுரொஃபஷனல் பாடகர்களாக இருக்கிறார்கள்.
பார்ப்போம், போட்டி எப்படி இருக்கிறதென.
— சுரேஷ் கண்ணன் – டிஜிட்டல் படைப்பாளி