வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !
தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா, கம்பம் நகரில் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 67) இவரது மனைவி மயில்தாய் . இவர்களுக்கு ஈஸ்வரன், அஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சின்னமனூர் அருகேயுள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் ரித்திஸ் (வயது 7), அபினவ் (5) ஆகியோர் கம்பத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை மயில்தாய் வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். வீட்டில் குருநாதன் மற்றும் பேரன்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது குருநாதன் அபினவ், ரித்திஷ் ஆகியோர் பலத்த காயங்களுடன் இரத்தம் சொட்ட சொட்ட கிடந்துள்ளனர்.
உடனே இது குறித்து அப்பகுதி மக்கள் கம்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு எந்த வகையான வெடி பொருட்கள் என தெரியவரும். அதன் பிறகு அந்த பொருட்களை யார் விற்பனை செய்தார் என்பது தெரியவரும். மேலும், குருநாதனிடமும் எதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அவர் மீது இன்றைய வழக்குகளும் ஆராய்வு செய்யப்பட்டு வருகின்றது. கம்பத்தில் குடியிருப்பு அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
— ஜெய்ஸ்ரீராம்