கூட்டுறவு சங்க உதவியாளராக சேர வேண்டுமா ? இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் !
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அவர்களின் அறிவிப்புக் கடிதத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
இப்பணிக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். SC/ST/MBC/DNC/BC/BCM/இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகுப்புகளைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினருக்கு (OC) 32 வயது.
இப்பணிக்காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.08.2025. இப்பணிகாலியிடத்திற்கான எழுத்துத்தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. விண்ணப்பப்படிவம் https://www.drbtry.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித்தேர்வர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 22.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் துவங்கப்பட உள்ளது.
மேற்கண்ட பயிற்சிவகுப்பில், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.