அங்குசம் பார்வையில் ‘மிராய்’
தயாரிப்பு : பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி.ஜி.விஸ்வபிரசாத், கீர்த்தி விஸ்வபிராசத். தமிழ்நாடு ரிலீஸ் : ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட். டைரக்ஷன் & ஒளிப்பதிவு : கார்த்திக் கட்டம்னேனி, ஆர்ட்டிஸ்ட் : தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதிபாபு, கெட்டப் ஸ்ரீனு. இசை : கெளரா ஹரி, எடிட்டிங் : ஸ்ரீகர்பிரசாத், வசனம் : மணிபாபு கரணம், ஆர்ட் டைரக்டர் : ஸ்ரீநாகேந்திர தங்கலா, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : சுஜித்குமார் கோலி, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
கலிங்கத்துப் போரில் மாபெரும் வெற்றி கண்டாலும், ஏராளமான மனித உயிர்கள் பலியானதைக் கண்டு மனம் கலங்குகிறான் மன்னன் அசோகன். அதனால் மனித சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒன்பது புத்தகங்களை எழுதி, அதை தன்னிடம் இருக்கும் ஒன்பது போர் வீரர்களிடம் ஒப்படைத்து பாதுகாக்கச் சொல்கிறான். அந்த ஒன்பது புத்தகங்களும் தீயவன் கையில் சிக்கினால் உலகம் சர்வநாசமாகும், மனித சமூகம் பேரழிவைச் சந்திக்கும் என்பதையும் சொல்லிவிட்டுச் சாகிறான் அசோகன்.
அந்த ஒன்பது புத்தகங்களையும் அந்த வீரர்களின் வாரிசுகளும் பாதுகாத்து வருகின்றனர். இதைத் தெரிந்து கொள்ளும் தீயசக்தி மனோஜ் மஞ்சு, அந்த வாரிசுகளைப் போட்டுத் தள்ளிவிட்டு, ஒன்பது புத்தகங்களையும் அபகரித்து தனக்கு மாபெரும் சக்தி கிடைக்க களத்தில் இறங்குகிறான். எட்டு புத்தகங்களை அபகரித்த பின் ஒன்பதாவது புத்தகத்தை அபகரித்தானா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த மிரட்டலான ‘மிராய்’.
இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஆசிரமம் ஒன்றில் இருக்கிறார் அம்பிகா [ ஸ்ரேயா சரண்] என்ற பெண். காசியில் உனது ஆண் வாரிசை [ தேஜா சஜ்ஜா] ஈன்றெடுத்து, அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடு. அவன் தான் மிராய் என்னும் ஆயுதம் மூலம் அந்த தீயசக்தியை அழிப்பான் என சாமியார் ஜெயராம், ஸ்ரேயாவிடம் சொல்கிறார். அதன்படியே செய்கிறார் ஸ்ரேயா. 24 ஆண்டுகளில் எட்டு புத்தகங்களையும் மனோஜ் மஞ்சு கொள்ளையடித்துவிட்டு ஒன்பதாவது புத்தகத்தைக் கைப்பற்ற நினைக்கும் போது தேஜா சஜ்ஜாவுக்கும் மனோஜ் மஞ்சுவுக்கு மாபெரும் யுத்தம் நடக்கிறது.
இது சங்கிகளின் படம் தான் என்றாலும் முழுக்க முழுக்க அதைமட்டுமே நம்பினால் வேலைக்கு ஆகாது, காசுக்கு உதவாது என்பதால், மன்னன் அசோகன் காலத்திலிருந்து கதையை ஆரம்பித்து இப்போதைய டிஜிட்டல் உலகத்துடன் கனெக்ட் பண்ணி, விஷுவல் ட்ரீட்டுக்காக கடுமையாக உழைத்து செம இண்ட்ரஸ்டிங்கான எண்ட்ர்டெய்ன்மெண்டாக வசீகரிக்கிறது இந்த ‘மிராய்’.
சமீப காலங்களில் நாம் பார்த்த சினிமாக்களில் வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை இந்தளவுக்கு மிகமிக நேர்த்தியாக பயன்படுத்தி, பார்வையாளனை மிரளச் செய்த சினிமான்னா அது ‘மிராய்’ தான். சில பல லைவ் லொக்கேஷன்கள், பிரமிக்க வைக்கும் செட்டுகள்[ நாகேந்திர தங்கலா] இவற்றை சிசிஜி ஒர்க் மூலம் சீராக ஒருங்கிணைத்து சிறப்பான படத்தைத் தந்துள்ளார்கள்.
ஹீரோ தேஜா சஜ்ஜா துருதுருன்னு இருக்கார். ஸ்டண்ட் சீன்களிலும் புகுந்து விளையாடியிருக்கார். எட்டு ஃபைட்டும் எட்டு விதம், ஒவ்வொண்ணும் மிரள வைக்கும் ரகம். அதிலும் க்ளைமாக்ஸ் ரயில் ஃபைட் ஹாலிவுட் ஆக்ஷன் சீக்வென்ஸையே தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. அந்த லொக்கேஷனை எங்கப்பா பிடிச்சீங்க? சும்ம மிரட்டுது போங்க.
மிராய்.ன் முக்கிய தூண் என்றால் தேஜா சஜ்ஜாவுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரணும் வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சுவும் தான். ஜெகபதி பாபுவின் இனமக்களைக் காப்பாற்ற தன்னையே தீக்கிரையாக்கும் காட்சி உட்பட எல்லா காட்சிகளிலுமே அசத்திவிட்டார் ஸ்ரேயா சரண்.
அதே போல் மனோஜ் மஞ்சு. அடேங்கப்பா.. மனுஷன் குரூரப்பார்வை, மிரட்டலான நடை என தீயசக்திக்குரிய அத்தனை அம்சங்களும் அவருக்கு ரொம்பவே பொருந்தியிருக்கு. மனோஜ் மஞ்சுவின் அடியாளாக வரும் அந்த நடிகையும் மிரட்டிவிட்டார். சில காட்சிகள் தான் என்றாலும் சாமியாராக ஜெயராம் நடிப்பும் மனதில் நிற்கிறது. தேஜா சஜ்ஜாவை யுத்த களத்திற்கு அழைத்து வரும் தேவதையாக ஹீரோயின் ரித்திகா நாயக் கண்களே பல சீன்களில் பேசிவிடுகிறது. பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருக்கிறார்.
டைரக்டர் கார்த்திக் கட்டம்னேனியே ஒளிப்பதிவாளராக இருப்பதால் பனிமலைப் பிரதேசம், க்ளைமாக்ஸ் ரயில் ஃபைட் லொக்கேஷன்களில் அபாரமாக உழைத்திருக்கிறார். சில வரிகள் தான் பாடல்கள். ஆனால் பின்னணி இசையில் பின்னிவிட்டார் மியூசிக் டைரக்டர் கெளரா ஹரி. குறிப்பாக மனோஜ் மஞ்சு ஒன்பதாவது புத்தகத்தைத் தொட்டதும் வரும் பிஜிஎம். சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.
100% எண்டெர்டெய்ன்மெண்டுக்கு இந்த ‘மிராய்’ க்யாரண்டி.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.