நியோமேக்ஸ் – அடுத்து செட்டில்மென்ட் தான் !
NEOMAX | நியோமேக்ஸ் ! அடுத்து செட்டில்மென்ட் தான் !
நியோமேக்ஸ் தொடர்புடைய இடங்களை மதிப்பிடும் பணியை மையப்படுத்தியதாக அமைந்திருந்த நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரம், தற்போது செட்டில்மெண்ட்டை நோக்கி ஒரு படியை முன்னெடுத்து வைத்திருக்கிறது.
அடுத்தடுத்து அறிவுரைகளையும், தகுந்த வழிகாட்டுதல்களையும், போதுமான வாய்ப்புகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையிலும், நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பிடும் பணி இன்று வரையில் முழுமையாக நிறைவடையவில்லை. முதற்கட்டமாக மதிப்பிடும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 16 மாவட்டங்களில், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களுக்கான அறிக்கைகள் இன்னும் தயாராகவில்லை.
இவ்விரு மாவட்டங்கள் தவிர்த்த மற்ற 14 மாவட்டங்களுக்கான அறிக்கைகளை நியோமேக்ஸ் தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், அவர்கள் தரப்பு ஆட்சேபனைகளை செப்-19 ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக செட்டில்மெண்டை எவ்வாறு செய்து முடிக்கப்போகிறோம்? என்ற ஆலோசனைகளுடன் அனைத்து தரப்பு கவுன்சில்களும் செப்-19 அன்று முன்மொழிவுகளோடு வர வேண்டும் என்றும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மானாமதுரை சங்கம் சார்பில், பார்ட்டி இன் பெர்சனாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த திருச்சியை சேர்ந்த அழகுமலை, திருச்சி மொராய் சிட்டியில் சுமார் 4 இலட்சம் சதுர அடி நிலங்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் இன்னும் கையகப்படுத்தவில்லை என்ற தகவலை நீதிமதியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்றிருந்தார். இது தொடர்பான, ஆவணங்களை கடந்த 23/07/2025, 25/07/2025, 18/08/2025 ஆகிய தேதிகளில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள போலீசாருக்கு வலியுறுத்தியது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் லாவண்யா, திருநெல்வேலி நான்குநேரியில் ஆர்.கமலா என்பவர் கே.டி.செல்வமணி என்பவருக்கு பவர் எழுதி கொடுத்த; கபில் மற்றும் ரவி ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள் ஆவணத்தின் படியான 38 ஏக்கர் நிலம் குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது தவிர, தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூர் கிராமத்தில் சர்வே எண்கள் 1244/6, 1245/5, 1245/6, 1255/4 ஆகிய சர்வே எண்களில் அமைந்துள்ள ”கிரீன் வெல்த் கிரேப் சிட்டி”யில் 96 பிளாட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. நியோமேக்ஸுக்கு சொந்தமான இந்த நிலமும் இதுவரையில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரால் அடையாளம் காணப்படாமல் இருப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்று, நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்கள் தொடர்பான விடுபடல்கள் இருப்பின், வழக்கு காலத்தில் கைமாற்றிய சொத்துக்கள் இருப்பின், அவற்றையும் பட்டியலில் சேர்த்து மதிப்பிடும் பணியை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
செப்-19 அன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காகவே, நியோமேக்ஸ் வழக்கை எடுத்துக் கொள்வதாக நீதியரசர் பரத சக்ரவர்த்தி தெரிவித்திருக்கும் நிலையில், அன்றைய நாளில் நடைபெறும் விவாதம் அணல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு தடைகளை, இடையூறுகளை கடந்து செட்டில்மெண்ட் நோக்கிய பயணத்தில் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது, நியோமேக்ஸ் வழக்கு.
செட்டில்மெண்ட்டை எவ்வாறு செய்யப்போகிறார்கள்? அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்கள் குறித்து அடுத்த பதிவில் / வீடியோவில் பேசலாம்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.