கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது … கியா ரே செட்டிங்கா ?
கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது …
முதன் முதலாக திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெக விஜய், முதல் கூட்டமே தமிழகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக அமைந்ததில் பேரானந்தப்பட்டு கிடக்கிறார்கள்.
திருச்சி ஏர்போர்ட்டில் விமானத்தில் வந்து இறங்கியது தொடங்கி, பிரச்சார இடமான மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை வரையிலான தூரத்தை, தொண்டர்கள் படை சூழ பவனியாக வந்தார் என்றே சொல்லலாம். இது ஒரு வகையில் அறிவிக்கப்படாத பேரணியாகவும் அமைந்து போனது. 23 நிபந்தனைகளுடன் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சுமார் 5 மணி நேரம் வேனில் இருந்தபடியே ரோட் ஷோவை நிகழ்த்தி காட்டிவிட்டார் தவெக விஜய்.
தானா சேர்ந்த கூட்டம் இது என்றும்; நடிகரை பார்க்க ரசிகர்களாக கூடியிருந்தார்கள் என்றும் இந்நிகழ்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், ”இது பக்கா பிளான்” என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.
தவெகவின் திருச்சியை சேர்ந்த நிர்வாகி செந்தில்குமார் என்பவர், பேசிய ஆடியோ தற்போது வைரலாகியிருக்கிறது. அதில், இது எல்லோருக்கான லைஃப் என்கிறார். சென்னையிலிருந்து கேட்கிறார்கள் என்கிறார். எல்லோரும் ஏர்போர்ட் வரவேண்டும் என்பது கட்டாயம் என்கிறார். புதியதாக ஐ.டி. கார்டு வாங்குபவர்கள் அவசியம் வரவேண்டும் என்கிறார். விஜய் பயணிக்கும் ஏரியா முழுக்க போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என்கிறார்.
இதோ அவர் பேசிய பேச்சின் முழுமையான உரையாடல் … “எல்லாருமே இந்த போஸ்டர நான் சொன்ன வழியில ஏத்துங்கப்பா. நம்ம போஸ்ட்டர இல்லன்னு சொல்லிட்டு இருக்காங்க. நீங்க உங்க ஏரியா சைடு ஒட்டிட்டு இருக்கீங்க. கேக்க மாட்டேன்றீங்க. காலையில இருந்து ஒரே பஞ்சாயத்தா போயிட்டு இருக்கு. கொஞ்சம் நம்ம சைடு ஏத்துங்க. ஏர்போர்ட்ல இருந்து ஹெட்போஸ்ட் ஆபீஸ், பாலக்கரை பிரபாத் தியேட்டர், ரவுண்டானா, மேலப்புதூர், டிவிஎஸ் டோல்கேட் இந்த சைடு கொஞ்சம் அதிகமா ஏத்துங்க. இந்த கமிஷனர் ஆபிஸ் சைடுல எங்கெங்க இருக்கோ ஏத்துங்க. தயவுசெய்து இந்த பக்கம் பால்பண்ணை வரைக்கும் போடணும். சொல்லியாச்சு இன்னும் யாரும் பண்ணல.
எல்லா ஒன்றிய செயலாளரும் அவங்க கிளை செயலருக்கு இன்டிவிஜுவலா போன் அடிங்க. கிளையில இருக்கற பதினைந்து பேருக்குமே இன்பார்ம் பண்ணுங்க. பகுதியில இருக்கறவங்க வார்டு செயலாளருக்கு இன்பார்ம் பண்ணுங்க. வார்டுல இருக்க அந்த பதினைந்து பேருக்கு இன்பார்ம் பண்ணுங்க. பகுதில இருக்க பதினைந்து பேரு நாளைக்கு கம்பல்சரி ஐடிகார்டு வாங்குற 2500 பேரு ஏர்போர்ட் வரணும்பா. அது யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க. வரல அது இதுன்னு சொல்லிட்டு இருக்காதீங்க. கண்டிப்பா புகைப்படம் எடுத்து நீங்க குரூப்ல அனுப்பி எத்தனை பேர் வரீங்க யார் யார் வரீங்க அப்படிங்கறத எனக்கு அனுப்பிச்சிருங்க. இதெல்லாம் கேக்குறாங்க, சென்னையில.
நீங்க ஏர்போர்ட் காலையில 7 மணிக்கு எல்லாருமே வரணும். கொடியோட வந்துருங்க. டூவீலர் வந்து அங்க வண்டிய போட்டு தலதளபதியை நம்ம ஊர்வலமா நம்ம கூட்டிட்டு வரணும். வந்துட்டு வரவழியில அந்த எஸ்பி ஆபீஸ்ல மகளிரணி நம்ம டீம்ல இருக்க எல்லாருமே கும்பம் வச்சிருக்கணும். அதை தளபதி அங்க வரவேற்பு ஏத்துக்கறாங்க. அதை முடிச்சிட்டு, அதுக்கப்புறம் அப்படியே அவர்கூட நம்ம ஸ்பாட் வரைக்கும் வரணும். இது நமக்கு கொடுத்திருக்கிறது மாநகர் மாவட்டம். இன்னொரு ஊர் மட்டும் இங்க நமக்கு இருக்காங்க. இதுல ஏதாவது கெட்டபேர் ஆச்சுன்னா, நம்மளால அடுத்த இது ஆயிரும்.
நீங்கதான் அதை பார்த்து சொல்லணும். இது எல்லாருக்கான லைஃப் இது. பிரிச்சிருக்கறாங்க. எல்லாம் வந்துருவாங்கன்னு நினைக்கிறோம். இன்டிவிஜுவலா ஒவ்வொரு ஒன்றிய செயலரும், பகுதி செயலாளரும், வார்டு செயலாளரும் இன்ஃபார்ம் பண்ணனும். அதுக்கு கேர் எடுத்து அந்தந்த டீம்ல இருக்கறவங்க அவங்கள கூட்டிட்டு வாங்க. தயவு செய்து எல்லாம் பண்ணிங்க. போஸ்டர இன்னைக்கு ஃபுல்லா இப்ப மதியத்துல இருந்து ஏத்த ஆரம்பிங்க. ” என்பதாக தொண்டர்களுக்கு அன்புகட்டளை விடுத்திருக்கிறார், செந்தில்குமார்.

ஆடியோ-வில் சிக்கியிருக்கும் செந்தில்குமார் விஜயின் தீவிர ரசிகர். திருச்சி மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர். புஸ்ஸி ஆனந்துக்கு ரொம்பவே நெருக்கமானவர். பலான குற்றச்சாட்டில் திருச்சியில் இயங்கி வந்த ஸ்பா ஒன்று வழக்கில் சிக்க, ஸ்பா-வை நடத்தியவர்களை போலீசார் கைது செய்திருந்த நிலையில், சம்பந்தபட்ட ஸ்பா செயல்பட்ட வளாகத்தின் உரிமையாளர் என்ற வகையில் செந்தில்குமாரும் கைதாகி சிறை சென்று பின்னர் ஜாமினில் வெளிவந்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.