பவளக்காரத் தெரு முதல் பவளவிழா வரை !
தத்துவத் தந்தையின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று அவரது தலைமகனும் அந்தத் தலைமகனின் தம்பியரும், தந்தையிடமிருந்து பிரிந்து தனியாக ஆலோசனை நடத்துகிறார்கள்.
நீதிக் கட்சி காலத்திலிருந்து திராவிட இயக்கப் பயணம் மேற்கொண்ட திருவொற்றியூர் சண்முகம் அவர்களுக்கு சொந்தமான மண்ணடி- பவளக்காரத் தெரு 7-ஆம் எண் வீட்டில்தான் பிரிந்து வந்தோர் ஒன்று கூடினர்.
”பெரியாரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும். திராவிடர் கழகத்தை நம் வசமாக்கி நடத்த வேண்டும். நிர்வாகக் குழுவினர் நம் பக்கமே இருக்கிறார்கள்” என்கிறார்கள் தம்பியர் பலர்.

தந்தையை நன்கறிந்தவர் தலைமகன். தம்பிகள் சொல்லும் எதுவும் தந்தையிடம் செல்லுபடி ஆகாது என அவருக்குத் தெரியும்.
“அவர்தான் எப்போதும் நமக்கு தலைவர். நாம் தனி இயக்கம் காண்போம். அதில் தலைவர் நாற்காலி அவருக்காக காலியாகவே இருக்கும்” என்கிறார்.
அண்ணனின் சொல்லுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்பதை தம்பிகள் உணர்ந்து கொண்டனர்.
17-9-1949 சென்னை மண்ணடி பவளக்காரத் தெரு 7-ஆம் எண் வீட்டில்தான் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற இயக்கத்திற்கான விதை உருவானது. மறுநாள் (18-9-1949) அதனை ராயபுரம் ராபின்சன் பூங்கா பொதுக்கூட்டத்தில் ஊன்றினார் அண்ணா. இயற்கையன்னை மழையாகி, நீர் ஊற்றினார்.

தந்தையிடமிருந்து சொத்துகளைப் பிரித்துக் கொண்டு பகை வளர்க்கும் மகன்கள் பலர் வாழும் நாட்டில், தந்தையின் கோபாவேசத்தை 18 ஆண்டுகள் தாங்கிக் கொண்டு, அவரது கொள்கைச் சொத்துக்களை அரசியல் நெருக்கடிகளிலும் பாதுகாத்து, 1967-இல் தமிழ்நாடு அரசாங்கத்தின் நிரந்தர வைப்பு நிதியாக்கி, அதற்கானப் பத்திரத்தை தந்தையிடம் காணிக்கையாக வழங்கிய தலைமகன், பேரறிஞர் அண்ணா.
குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, காவல்துறையில் பெண்களுக்கு பணி வாய்ப்பு, சமூக நீதியை நிலைநாட்டும் 69% இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், சமத்துவபுரம் எனத் தனது கொள்கைத் தந்தைக்குப் பல காணிக்கைகளை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் என தலைமுறைகளை வளர்த்தெடுக்கும் திட்டங்களை வழங்கி வரும் திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், திராவிட இயக்கத்தின் தத்துவத் தந்தையாம் பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து பெருமை சேர்த்திருக்கிறார்.
கோவி.லெனின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணமும், அது பெற்ற வெற்றிகளும் தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை இந்திய அளவில் முன்னெடுத்துச் சென்றுள்ளது.
கண்ணீர்த் துளிகளாய் பவளக்காரத் தெருவில் தொடங்கப்பட்ட இயக்கம், கம்பீரப் பெருமிதத்துடன் பவளவிழா கடந்து நடைபோடுகிறது.
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.