அங்குசம் பார்வையில் ‘ரைட்’
தயாரிப்பு : ஆர்.டி.எஸ்.பிலிம் ஃபேக்டரி திருமால் லட்சுமணன், டி.சியாமளா. டைரக்ஷன் : சுப்பிரமணியன் ரமேஷ்குமார், ஆர்ட்டிஸ்ட் : அருண்பாண்டியன், நட்டி[எ]நட்ராஜ், அக்ஷரா ரெட்டி, யுவினா பார்தவி, மூணார் ரமேஷ், ஆதித்யா சிவகுமார், வினோதினி வைத்தியநாதன், தங்கதுரை, ஒளிப்பதிவு : எம்.பத்மேஷ், இசை : குணா பாலசுப்பிரமணியன், எடிட்டிங் : நாகூரான் ராமச்சந்திரன், ஆர்ட் டைரக்டர் : தாமு, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஃபிரான்சிஸ் மார்க்கஸ், பி.ஆர்.ஓ : சதீஷ் [ எய்ம் ]
தனது மகனைக் காணவில்லை என கோவளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருகிறார் அருண்பாண்டியன். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும் நாள் என்பதால், அருண்பாண்டியனின் புகாரை அலட்சியம் செய்கிறார் ஸ்டேஷன் ரைட்டர் மூணார் ரமேஷ். இந்த நிலையில் தான் ஸ்டேஷனில் அனாமத்தாக இருக்கும் லேப்டாப் மூலம் பேசும் மர்மக்குரல், “இந்த ஸ்டேஷன் இப்ப என்னோட கண்ட்ரோல்ல இருக்கு. நாலாபக்கமும் டைம் பாம் வச்சிருக்கேன். ஸ்டேஷனைவிட்டு யார் வெளியே போனாலும் வெடித்துச் சிதறுவீர்கள். அதனால் நான் சொல்றதக் கேட்டே ஆகணும்” என்கிறது அந்த மர்மக்குரல்.
போலீஸ் ஸ்டேஷனையே ஹைஜாக் பண்ணியது யார்? ஏன்? அவன் பண்ணியது ரைட்டா? தப்பா? என்பதன் ஒண்ணே முக்கால் மணி நேர திக்திக் த்ரில்லர் தான் இந்த ‘ரைட்.
அந்த போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டராக நட்டி இருந்தாலும் பிரதமர் பாதுகாப்புக்கு வெளியே போய்விடுவதால், அருண்பாண்டியன் தான் கதையின் நாயகனாக இருக்கிறார். அதனால் சில சீன்களில் ஓவராக உணர்ச்சியைக் கொட்டிவிட்டார். அதே போல் அருண்பாண்டியனுக்கும் இந்த ஹைஜாக்கிற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு என நமக்கு நன்றாகவே தெரிந்தாலும் டைம்பாமுக்கும் இவருக்கும் தொடர்பில்லை என்பதை செம ட்விஸ்டாக வைத்துள்ளார் டைரக்டர்.
பெரும்பாலான படங்களில் கரடுமுரடான போலீஸாக வரும் மூணார் ரமேஷ் இதிலும் ரஃப் & டஃப்பாகத் தான் வருகிறார். ஆனால் மனுஷனுக்குள்ள காமெடி சென்ஸ் இருக்குங்கிறத தங்கதுரையுடன் கூட்டணி போட்டு நிரூபிச்சிருக்கார்.
போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நீதிபதியாக வினோதினி வைத்தியநாதனின் தோரணை செம கெத்து. படத்தில் மகா எரிச்சலைக் கிளப்புறது யாருன்னா… சப்-இன்ஸ்பெக்டராக வரும் அக்ஷ்ரா ரெட்டி தான். ஓவரா நடிச்சு உசுரை வாங்கிட்டாரு. முகமும் முத்திப் போன பேரிக்காய் மாதிரி இருக்கு. ஒருவேளை மேக்கப் மேனிடம் முறைத்திருப்பாரோ என்னவோ?
ஒன்றரை மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே கதை நடப்பதால், அதை பொறுப்பாக உணர்ந்து சிறப்பாக வேலை பார்த்திருக்கிறார் கேமராமேன் பத்மேஷ். பாடல்களில் சொதப்பிய மியூசிக் டைரக்டர் குணா பாலசுப்பிரமணியன், பின்னணி இசையில் டெம்போவை கூட்டி ‘ரைட் போட வைக்கிறார். போலீஸ் ஸ்டேஷன் செட் போட்ட ஆர்ட் டைரக்டர் தாமுவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
நட்டியை க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கு மிகச் சரியாகவும் காரண காரியத்துடனும் பயன்படுத்திய டைரக்டர் சுப்பிரமணியன் ரமேஷ்குமாரின் ‘ரைட்’ நல்ல கண்டெண்ட் தான்…ஆனாலும் கொஞ்சம் ‘டல்’ தான்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.