”கவிஞர் சிற்பியின் படைப்பாளுமை” தேசியக் கருத்தரங்கம் !
“கவிஞர் சிற்பியின் படைப்பாளுமை எனும் தலைப்பிலான ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்” திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 23.09.2025 அன்று நடைபெற்றது. கவிஞர் சிற்பி அகவை 90 ஐச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இத்தேசியக் கருத்தரங்கில் சாகித்ய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதாளர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி துவங்கப்பெற்ற காலத்தில் இடைநிலை வகுப்புப் பயின்ற நாட்களை நெகிழ்வுடன் நினைவு கூர்ந்த அவர், சாதாரண மாணவர்களையும் நாடு போற்றும் நல்ல அறிஞர்களாக உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு என்றார். மேலும் நீ முன்னேற வேண்டும். உன் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னேறி விட்டார்கள் என்பதற்காக, நீ சோம்பேறியாக இருக்கக் கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொடக்கவுரை வழங்கிய சீர்வளர்சீர் திருப்பெருந்தவத்திரு சாது சண்முக அடிகளார் பழனி ஆதீனம் தம் மடத்திற்கும் கவிஞர் சிற்பியின் முன்னோர்களுக்கும் இருந்த உறவை எடுத்துரைத்ததோடு, தாம் தமிழகப் புலவர் குழுவிற்குத் தலைமையேற்க கவிஞர் சிற்பி துணை நின்றார் என்பதையும் நினைவுகூர்ந்தார். தமக்கும் கவிஞர் சிற்பி அவர்களுக்கும் 40 ஆண்டு கால நெருங்கிய நட்பு இருந்ததாக அடிகளார் தன் உரையில் குறிப்பிட்டார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் உ.அலிபாவா கருத்தரங்கில் கலந்து கொண்டு நிறைவுவிழாப் பேரூரை நிகழ்த்தினார். கவிஞர் சிற்பி அவர்கள் கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், விமர்சகர், கட்டுரையாளர் என்பதைத் தாண்டி மிகச்சிறந்த மனிதர். மிகுந்த மனிதத்தன்மை வாய்ந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.
நிகழ்ச்சிக்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் து.ஜ.ஜார்ஜ் அமலரெத்தினம் தலைமையேற்க, கல்லூரியின் நிர்வாகக் குழு செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி. அ.கா. காஜா நஜீமுதீன், பொருளாளர் ஹாஜி. எம்.ஜே.ஜமால் முகமது துணைச்செயலர் முனைவர் க.அப்துஸ் சமது, நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் முனைவர் கா.ந.அப்துல் காதர் நிஹால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் வளநபராகப் பங்கேற்ற மதுரை மீனாட்சி கல்லூரியின் தேர்வு நெறியாளரும், தமிழ்த்துறைத் தலைவருமான யாழ்.சு.சந்திரா – கவிஞர் சிற்பியின் கட்டுரைகள் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார். கம்பன் என்ற மானுடன் என்ற கட்டுரை தனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இரண்டாம் அமர்வை கிராமத்து நதியில் சங்கமிக்கும் பிற நதிகள் எனும் தலைப்பில் கவிஞர் சிற்பியின் மொழியாக்கப் படைப்புகள் குறித்து திறனாய்வு உரையாக அமைத்துக் கொண்ட புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கிருங்கை சேதுபதி பேசும் போது, கவிஞர் சிற்பி தான் எழுதிய கவிதைகளைப் பாரதிதாசனிடம் வழங்கிய பொழுது, நீ அண்ணாமலையின் மாணவனா? அப்படியெனில் நீ என் பேரன்… எனக் கட்டி அணைத்து. நெற்றியில் முத்தம் கொடுத்த நிகழ்வை சுட்டிக்காட்டினார்.
மூன்றாம் அமர்வில் கவிஞர் சிற்பி எனும் ஜீவநதி என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் கவிஞர் முனைவர் ஜே. மஞ்சுளா தேவி சிறப்பாக உரையாற்றினார். வற்றாத ஜீவநதி தான் நம்முடைய சிற்பி அவருடைய கவிதை ஊற்று ஒருபோதும் வற்ற வில்லை என்ற வாதத்தை எடுத்து வைத்தார்.
நான்காம் அமர்வில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப் பயிற்றுனர் முனைவர் சோ. அருணன் கவிஞர் சிற்பியின் பதிப்பாக்கப் பணிகள் குறித்துப் பல்வேறு விளக்கப் படங்களுடன் கூறினார். பதிப்புப் பணியை மிகவும் விரும்பிச் செய்தவர் கவிஞர் சிற்பி அவர்கள். இதற்கு அவர் பதிப்பித்த நூல்களே ஆதாரம் என்றார்.
ஐந்தாம் அமர்வில் முனைவர் இசை அறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் – கவிஞர் சிற்பி செதுக்கிய இசைச்சித்திரங்கள் என்ற தலைப்பில் பல்வேறு கவிதைகளை, இசைப் பாடலாகத் தன் இன்னிசைக்குரலில் பாடியும், இசைத்தமிழ், தமிழ் இசை, தமிழ் இசையியல் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளையும் தெளிவாக எடுத்துரைத்தார். கவிஞர் சிற்பி நேரடியாக இசைப் பாடல்களை எழுதாவிட்டாலும், அவர் எழுதியுள்ள பல கவிதைகளில் காவடிச்சிந்து பொருந்தி வருகிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அவற்றை இன்னிசையில் பாடியும் விளக்கினார் இசையறிஞர்.
முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஷே.நாகூர் கனி வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் தேர்வு நெறியாளரும், தமிழ்த்துறைத் தன்னிதிப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் கருத்தரங்க நோக்கவுரையை வழங்கினார். நிறைவாக கருத்தரங்க அமைப்புச் செயலர் திரு. கா.முகமது இஸ்மாயில் நன்றி கூறினார். நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் க.சிராஜுதீன், முனைவர் சு.விஜயலெட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாட்டினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் பழனி ஆதீனம் சீர்வளர்சீர் திருப்பெருந்தவத்திரு சாது சண்முக அடிகளார் ஆகியோருக்குக் கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு செயலர் மற்றும் தாளாளர் பாராட்டுப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.